ஏப்ரல் 2014 வாக்குத்தத்தம் - கர்த்தர் மேல் நம்பிக்கை வைத்து கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான் - எரேமியா 17:7

Thursday, 9 January 2014

போ, இனி பாவஞ் செய்யாதே

அன்புள்ள தோழனுக்கு,

நண்பா, நீ உன் கடந்த கால பாவங்களை எண்ணி மனம் உடைந்திருக்கிறாய் என அறிந்தேன். உன் நெஞ்சம் என்ன வேதனையில் இருக்கிறது என்பதை என்னாலும் அறிய முடியும். உன்னைப் போல, நானும் என் பாவங்களை நினைத்து கண்ணீர் வடித்த நாட்கள் உண்டு. ஆனால், என் கண்ணீர் மாறியது, கவலை தீர்ந்தது. நீயும் அந்த சமாதானத்தை பெற்ற கொள்ள வேண்டும் என இந்த மடலை உனக்கு எழுதுகிறேன்.

இனி, நீ கவலை படவேண்டிய தேவை இல்லை நண்பா. நீ இயேசு கிறிஸ்துவின் வாழ்வை அறிந்திருக்கிறாயா? அவரது வாழ்வில் நடந்த ஒரு சின்ன சம்பவத்தை உனக்கு சொல்கிறேன், கேள்.


ஒரு நாள், இயேசு ஏழை மக்களுக்கு கற்பித்துக் கொண்டிருந்தார். அப்போது, அவரிடத்தில் விபச்சாரி ஒருத்தியை யூதர்கள் சிலர் அடித்து இழுத்து வந்தனர். இயேசுவை நோக்கி, "போதகரே, இந்த பெண் விபசாரத்தில் கையும் களவுமாக பிடிக்கப்பட்டாள், இப்படிப்பட்ட பாவத்தை செய்வோரை கல் எறிந்து கொல்ல வேண்டும் என வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது, நீர் என்ன சொல்கிறீர்?" என்றனர். அவர்கள் அவரை சோதிக்க வேண்டியே அவ்வாறு கேட்டனர். இயேசுவோ அமைதியாக, நிலத்தில் தன் விரலால் எழுத ஆரம்பித்தார். அவர்கள் விடாமல் அவரிடம் கேட்டுக் கொண்டிருக்க, இயேசு நிமிர்ந்து, "உங்களில் பாவம் செய்யாதவன் இந்த பெண்ணின் மீது முதலாவது கல் எறியக்கடவன்" என்றார். பின்னர், மீண்டும் குனிந்து தன் விரலால் நிலத்தில் எழுத தொடங்கினார். அவரது வார்த்தைகளைக் கேட்டதும், அங்கிருந்த யூதர்கள் தங்கள் மனசாட்சியால் குத்தப்பட்டனர். பிறரை குற்றப்படுத்த தாங்கள் உத்தமரல்ல என உணர்ந்தனர். ஒவ்வொருவராய், எல்லாரும் சென்றுவிட, இயேசு மட்டுமே தனித்திருந்தார். தன் கண்களை ஏறெடுத்துப் பார்த்தார். அந்த பெண் மட்டும் நின்றுக் கொண்டிருந்தாள். இயேசு அவளை நோக்கி, "பெண்ணே, உன்னை குற்றம் சாட்டினவர்கள் எங்கே? ஒருவரும் உன்னை ஆக்கினைக்குள்ளாக துன்புறுத்தவில்லையா?" என்றார். அவள், "ஒருவரும் இல்லை ஆண்டவரே" என்றாள். அப்போது, இயேசு அவளை தேற்றி, "நானும், உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கவில்லை, நீ போ, இனி பாவம் செய்யாதே" என்று சொல்லி அனுப்பினார்.

நண்பனே, இயேசுவின் வார்த்தைகளைப் பார். பாவம் இல்லாதவன் முதலாவது கல்லெறியக் கடவன் என கர்த்தர் சொன்னதும் ஒருவனும் அங்கு நிற்க துணியவில்லை. தாங்கள் எப்படிப்பட்ட பாவிகள் என அவர்கள் மனம் உணர்ந்தது. பாவமே இல்லாத இயேசு மட்டுமே தனித்து விடப்பட்டார். உன்னை நியாந்தீர்க்க இயேசு ஒருவர் தான் பாத்திரமானவர். ஆனால், அவர் என்ன சொல்கிறார் பார்... "நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கவில்லை, நீ போ, இனி பாவம் செய்யாதே" என்கிறார். இந்த வார்த்தைகளை உனக்கு உணர்த்தி இந்த மடலை எழுதுகிறேன்.

நீ என்று உன் பாவங்களை நினைத்து மனம் உடைய ஆரம்பித்தாயோ, அன்றே உன் பாவங்கள் மன்னிக்கப்பட தகுதியுடையவனாகி விட்டாய். இனி, கண்ணீர் சிந்தாதே நண்பா. இயேசு உன்னை மன்னித்துவிட்டார். "இயேசுவே, நீரே என் பாவங்களை மன்னிக்க பாத்திரமானவர். என் பாவங்களுக்காக நான் மனம் வருந்துகிறேன் ஆண்டவரே, கல்வாரி சிலுவையில் நீர் சிந்திய தூய இரத்தத்தால் என்னை கழுவி சுத்தமாக்கும். எனக்கு ஒரு புதிய வாழ்வைத் தாரும். பரலோக ராஜ்யத்தில் இடம்பெற என்னை தகுதி உடையவனாக்கும். உம்மை விசுவாசித்து இந்த சிறு ஜெபத்தை ஏறெடுக்கிறேன்" என அவரிடம் உன் பாவங்களை அறிக்கையிடு. இப்போது நீ மன்னிக்கப்பட்டவன். கிழக்குக்கும் மேற்குக்கும் எத்தனை தூரமோ அவ்வளவாக உன் பாவங்களை உன்னை விட்டு நீக்கி இருக்கிறார் இயேசு. கிறிஸ்துவுக்குள் வந்தவன் எவனும் புதுசிருஷ்டியானவன் என வேதம் சொல்கிறது. நீயும் புதியவனாகி விட்டாய். இனி, உன் வாழ்வை அவரது பரிசுத்த கரங்களில் ஒப்புக் கொடுத்து பாவங்களுக்கு விலகி வாழு. "இனி பாவம் செய்யாதே" என்ற அவரது கட்டளையை மீறாதே. பரிசுத்தமாக உன்னை காத்துக் கொள். பாவத்தை விட்டு விலகு, நற்செயல்களில் ஈடுபடு, ஏழை எளியோருக்கு உதவு, கடவுளை தொழுது கொள், சமாதானம் இல்லாத பிறருக்கும் இயேசு குறித்து சொல். பரலோக குடிமகன் நீ. இனி, நீ சமாதனத்துடன் வாழலாம், துளியளவு கவலையும் உனக்கு வேண்டாம்.

இப்படிக்கு,
இயேசுவாலே மீட்கப்பட்ட ஒருவன்.

இயேசு விபச்சார பெண்ணை மன்னித்த காட்சி




No comments:

Post a Comment

"என் வாய் கர்த்தரின் துதியைச் சொல்வதாக" - சங்கீதம் 145:21