2013 முடிந்து புத்தாண்டுக்குள் நுழைந்த நேரம்... புதிய நாளை காணசெய்த கடவுளுக்கு நன்றி செலுத்த புரப்பட்டாள் ஜெனி. மனதில் பாடிக்கொண்டு, தேவாலயத்துக்கு விரைந்து கொண்டிருந்த ஜெனியின் முகம் மலர்ந்தது. அங்கே அவளது சிறுவயது தோழி சுசி வந்து கொண்டிருந்தாள். "ஆனால் என்னாச்சு சுசிக்கு?, ஏன் சோர்ந்து போய் வருகிறாள்?" என ஒரு நிமிடம் திகைத்தாள் ஜெனி. சுசியோ நெடுநாள் கழித்து சந்தித்த தன் தோழியை புன்முறுவலோடு நெருங்கினாள். ஆனால், மனதில் உள்ள கவலையை அவளது முகமே காட்டி கொடுத்தது. மனந்தாங்காமல், தோழியிடம் தன் கசப்புகளை கொட்டித்தள்ளினாள். இந்த புத்தாண்டு வேளையில் தன் கரங்களில் அழகிய குழந்தையோடு வந்திருக்க வேண்டியவள் சுசி. ஆனால், நான்கு மாதம் முன்பு நடந்த ஒரு சிறிய விபத்தில் அவளது குழந்தை அவள் கருவிலேயே மடிந்துவிட்டது. இது தவிர அவளது கணவன் வேலை செய்துவந்த அலுவல் திவாலாகி மூடும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறது. துயரத்திற்கு சுசியின் இல்லத்தில் எந்த குறையும் இப்போது இல்லை. ஜெனியிடம் இருந்து ஆறுதலான வார்த்தைகள் வரலாம் என முகம் நோக்கிப் பார்த்தாள் சுசி. "பிறர் படும் பாடுகளையும் புரிந்து கொண்டு வாழ்வில் நாம் தேற வேண்டும் என கடவுள் வகுத்த சோதனைகள் தான் இந்த துயரங்கள் எல்லாம்" என்றாள் ஜெனி. ஆனால் இந்த வார்த்தைகள் சுசிக்கு இன்னும் விரக்தியை தான் உண்டாக்கின... "இவளுக்கு எங்கு தெரியப்போகிறது என் வேதனை! குழந்தையை பறிகொடுத்தவள் நான்தானே! இவளைப் போல கடவுளுக்கு நன்றி சொல்ல நான் எப்படி ஆலயத்துக்கு செல்ல முடியும்? சரி நன்றி சொல்றேன், ஆனால் எதற்காக நன்றி சொல்ல? கருவைப் பறித்த விபத்து என் உயிரை பறிக்காததற்கா?" என மனதில் இன்னும் சிந்தனைகள் எழும்ப, சுசி இடம் விட்டு அகன்றாள்.
அவளது கால்கள் வழிமாறிச் ஒரு பூக்கடையை அடைந்தது. அவளது மனம் வாடிக் கிடப்பத்தை புரிந்து கொண்டு, "உனக்கு தெரியுமாமா? பூக்களே நமக்கு ஒரு பாடம் தான், உனக்கு என்ன பூ வேணும்?" என பூக்காரி கேட்டாள். "கடந்த சில நாளா எல்லாமே தவறா தாங்க இருக்கு" என தொடர்பே இல்லாமல் சுசியிடமிருந்து பதில் வந்தது. இவர்கள் இப்படி பேசிக் கொண்டிருக்கும் போதே இன்னொரு பெண் அப்பூக்கடையை நெருங்கினாள். "அடடே வாங்க, எல்லாம் ரெடியா எடுத்து வச்சுட்டேன்" என சில ரோஜா செடி தண்டுகளை எடுத்து நீட்டினாள் பூக்காரி. "இதென்ன? பூவே இல்லாத முட்தண்டுகளை எடுத்து கொடுக்கறிங்க, அதையும் அவங்க பேசாம வாங்கிட்டு போறாங்களே" என சுசி வியப்போடு வினாவினாள்.
"அவங்களும் உன்ன மாறிதாம்மா, முகம்வாடிப்போய் இந்த கடைக்கு 3 வருசத்துக்கு முன்னாடி வந்தாங்க. கேட்டபிறகு தான், அவங்க அப்பா தவறிட்டாருனு தெரிஞ்சிது. பத்தாதுக்கு அவங்க மவன்வேற குடிபழக்கத்து ஆளாகி கிடக்கிறான். அந்த புத்தாண்டுக்கு கடவுளுக்கு நன்றி சொல்ற அளவுக்கு அவங்க குடும்பத்துல எந்த நன்மையும் நடக்கலனு சொன்னாங்க... அதே வருசம் தான் என் கணவனும் தவறியிருந்தாரு. எனக்கு புள்ளக்குட்டி இல்ல. அவரு போன பிறகு நான் இந்த கடைய வச்சு புழப்பு நடத்திட்டு வரேன்..." என்றாள் பூக்காரி. "அட பாவமே, ஆனா எதுக்குமா பூ இல்லாத முட்தண்ட கொடுக்கறிங்க?" என சுசி மேலும் வினவினாள்.
"துன்பமாச்சு துயரமாச்சு கடவுளுக்கு நன்றி சொல்ல தவறக்கூடாது. அதுக்கு அடையளாம முட்களை பரிமாறிக்கிறது எங்களுக்குள்ள ஒரு சின்ன பழக்கம்... முட்களுக்காகவும் நன்றி சொல்ல கத்துகிட்டோமா, அவ்வளவு தான்"....
பூக்காரி விசித்திரமாக பேசினாள். "முட்களுக்காகவா?" என சுசியின் புருவங்கள் உயர்ந்தன.
"எனக்கு எத்தனையோ நன்மைகள கடவுள் கொடுத்தாரு, அதுக்காக அவருக்கு நான் அவருக்கு எந்த நன்றியும் சொன்னதில்ல. எதாவது கவல ஏற்பட்டா மட்டும் உடனே முறயிடுவேன், ஆனா இன்னைக்கு முட்களுக்காகவும் நன்றி சொல்ல கத்துக்குட்டேன். சோதனை வேலைல தான் நாம கடவுளோட ஆறுதல உண்மையிலேயே பெறோம், நாமும் துன்பத்துல வாடுற பிறர ஆற்றி தேற்றனும்னு அந்த நேரத்துல தான் கத்துக்கிறோம்" என பூக்காரி சொல்லி முடித்தாள். "இதே வார்த்தைய தான் என் தோழி ஒருத்தியும் சொன்னா, எனக்கு கடவுளோட ஆறுதல் தேவ இல்லங்க, என் வேதன எனக்குத் தான் தெரியும்" என சுசி மீண்டும் விரக்தியோடு பேச இன்னொரு கை முட்தண்டுகளை தேடி வந்தது. பூக்காரி அதே போல சில முட்தண்டுகளை எடுத்து புன்முறுவலோடு கொடுத்தனுப்பினாள்.
"என்னாச்சு இவங்களுக்கு? எப்படி இவங்களால தங்களுக்கு கிடச்ச வேதனைகள ஏத்துக்கிட்டு கடவுள வேற நேசிக்க முடியுது?" என சுசி குழம்பினாள். அவள் திகைத்து நிற்பதை கண்ட பூக்காரி, "இங்க பாரும்மா, முட்கள் தான் பூவ இன்னும் ரசிக்க வைக்கிது, அதே மாறி தான் நமக்கு வரும் சோதனை. வாழ்க்கையில சோதனையே இல்லாட்டி, அது திகட்டி போகும், சந்தோசத்துக்கு அர்த்தத்த கொடுக்கறதே சோகந்தான், சோகத்துல தான் கடவுள் பிறர ஆற்றிதேற்ற அளவுக்கு தைரியத்த கத்துத்தராரு... இயேசு முட்கள வெறுக்கலம்மா, நமக்காக முள்முடி சுமப்பத நினைச்சு அன்போட ஏத்துக்கிட்டாரு... அவர் ஏத்துக்கிட்ட முள்ளு நம்மமேல கொண்ட அன்ப காட்டுது, அதே மாறி எங்க அன்ப காட்ட, கடவுள தூசிக்காம முட்கள ஏத்துக்கிறோம்... முட்களுக்காக கடவுள வெறுக்காதம்மா" என்றாள்.
சுசியின் கண்களில் இருந்து கண்ணீர்த் துளிகள் விழுந்தன... "எனக்கும் சில முட்தண்டுகள தாங்க" என கண்களில் கண்ணீரோடும், இதழ்களில் சிரிப்போடும் கேட்டாள்...
முட்களுக்கும் நன்றி சொல்வேன் இயேசுவே...
No comments:
Post a Comment
"என் வாய் கர்த்தரின் துதியைச் சொல்வதாக" - சங்கீதம் 145:21