ஏப்ரல் 2014 வாக்குத்தத்தம் - கர்த்தர் மேல் நம்பிக்கை வைத்து கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான் - எரேமியா 17:7
Showing posts with label கிறிஸ்து அறிமுகப்பதிவு. Show all posts
Showing posts with label கிறிஸ்து அறிமுகப்பதிவு. Show all posts

Sunday, 16 March 2014

உன்னைச் சொந்தங் கொண்டாடும் உன்னதர்...


நம்மை அளவில்லாமல் நேசிக்க இயேசு கிறிஸ்துவை விட மேலான தெய்வம் இல்லை என்றே சொல்லலாம். பரிசுத்த வேதாகமத்தை மனதார விசுவாசித்து படிக்கும் போது இயேசுவின் அன்பிலிருந்து நம்மால் தப்ப முடியாது. தன் தூய அன்பால், வேத வார்த்தைகளால் நம் மனதாய் எளிதாய் கொள்ளையிட்டு விடுவார். இது எப்படி சாத்தியமாகிறது? ஏன் கிறிஸ்துவுக்குள் வந்தவன் தேவனை அதிகமாக உரிமை பாராட்டுகிறான்? தன் தேவனை "அப்பா பிதாவே" என்று அன்போடு அழைத்து, நேசித்து மகிழ அவனால் எப்படி முடிகிறது? ஏன் என்று நீங்கள் சிந்தித்தது உண்டா?

ஏனெனில் இயேசு கிறிஸ்து நமக்காக அந்தளவு அன்பும் பரிவும் கொண்டிருக்கிறார். வேதம் சொல்வது போல, நாம் அவரை முதலாய் நேசிக்கவில்லை, அவர் நம்மை முதலாய் நேசித்து நமக்காய் அவரை ஒப்புக் கொடுத்தபடியினால் நாம் இவ்வாறு தேவ அன்பில் தத்தளித்து மகிழ்கிறோம். இயேசு கிறிஸ்து காட்டிய பாதை பிற வழிகளில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. தேவனை நமக்கு எல்லாரும் எஜமானனாக, சிங்காசனத்தில் வீற்றிருக்கும் அதிபதியாக சித்தரிப்பதை விட ஒரு நல்ல தாயாக, நல்ல தந்தையாக, நல்ல சகோதரனாக, ஆத்ம நேசராக, உயிர்த் தோழனாக பரிசுத்த வேதம் சித்தரிக்கிறது. இவ்வாறு நம்மை மகனாக, மகளாக, மணப்பெண்ணாக, தோழனாக அழைத்து மகிழும் தேவன் இயேசு கிறிஸ்துவை அன்றி வேறு யாருண்டு?

நம்மை ஒரு வேலையாளாக, தன் கரத்தின் சிருஷ்டியாக, தன் மனம் விரும்பும் காரியத்தை மட்டும் செய்ய பயன்படுத்தும் ஒரு அடிமையாக அவர் எண்ணாமல், நம்மை அவரது அன்பிற்கு முழு தகுதியுடையவர்களாக‌ காண்கிறார். அதன் காரணமாகத் தான், "தேவன் நம் கண்ணீரைத் துடைப்பார்", "மார்போடு அணைப்பார்", "கரத்தை பிடித்து வழிநடத்துவார்", "முத்தமிடுவார்" என பல அன்புமிகுந்த வார்த்தைகளை வேதம் கூறுகிறது. தேவனுக்கும் மனிதனுக்கும் இத்தகைய பாசப் பரிமாறுதல்களை வேறெந்த நூல்களிலும் காண முடியாது. எனவே ஒரு எஜமானிடம் ஒரு அடிமை கரமேந்தி நிற்பது போல, வெறும் கட்டளையை ஏற்று நடக்கும் ஒரு வேலைக்காரனாக நாம் தேவனிடத்தில் செல்லத் தேவையில்லை. "அப்பா பிதாவே" என்று அழைக்கும் உரிமையோடு, அன்போடு அவரிடத்தில் ஜெபித்து மகிழலாம், அனுதினமும் அவரது பிரசன்னத்தில் ஆனந்தமாக நம் வாழ்க்கையை நடத்தலாம். இத்தகைய சந்தோஷத்தை உரிமையை நமக்கு ஈந்தவர் இயேசு கிறிஸ்து மட்டுமே...

வேதம் கூறும் இன்னொரு அழகிய செய்தி இதுதான். மனிதன் தேவனை நேசிக்காவிட்டாலும், கர்த்தர் அவனை நேசிப்பதை விடுவதில்லை. மனிதன் பாவம் செய்து அவரது சமூகத்தில் இருந்து விலகி மறைந்து கொண்டாலும், தேவன் அவனை தேடிக் கொண்டு கவலையோடு அலைந்து திரிகிறார். ஆதாம் பாவமிழைத்து கர்த்தரின் கண்களில் இருந்து மரங்களுக்குள் ஒளிந்தாலும் தேவன் அவனை சத்தமிட்டு அழைத்து கொண்டு தோட்டத்திற்குள் வருகிறார். பாவமிழைத்த போதிலும் நம்மைத் தேடி வந்த தெய்வம் அவர் ஒருவரே. நாம் பாவிகளான போதிலும் நமக்காய் இவ்வுலகில் மனிதனாக பிறந்தவர் அவர் ஒருவர் தான். நம் அன்பைப் பெற, நாம் அந்த அன்பில் நிலைத்திருக்க சிலுவையை சுமந்த தெய்வம் இயேசு ஒருவர் மட்டுமே. "நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புதலுக்கு அழைக்க வந்தேன்" என்றவர், பாவிகளுக்காக அவமானத்தையும், ஆக்கினையையும், ஆணிகளையும் வாங்கிய ஒரே தேவன் அவர்.


நம்மிடமிருந்த அவர் விரும்பும் ஒரே காரியம் அன்பு மட்டும் தான். வேதத்தின் எல்லா நீதிகளிலும் அன்பே பிரதானம், இயேசு கிறிஸ்து நமக்கு கற்பித்த முதலாம் கற்பனை அது. நம் அன்பில் பிரியப்படுகிற தேவன் அவர். "உம்மை நேசிக்கிறேன்" என்று பேதுரு சொல்ல சொல்ல, "என்னை நேசிக்கின்றாயா?" என்று இயேசு கேட்டு கொண்டே இருந்தார். பேதுரு "உம்மை நேசிக்கிறேன்" என்று திரும்பத் திரும்பச் சொல்ல அதைக் கேட்டு கேட்டு இயேசு மகிழ்ந்தார். ஒரு கட்டத்ததில் பேதுரு மனமுடைந்து "ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் அறிந்தவர், நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும் நீர் அறிவீர்" என்றே சொல்லிவிட்டார். அந்தளவு நம் அன்பை பெறத் துடிக்கும் அற்புதமான இறைவன் தான் இயேசு கிறிஸ்து.

உலகை விட்டு பரமேறிச் சென்ற போது கூட, உங்களைத் தனித்துவிட எனக்கு மனதில்லை, உங்களுக்காக பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனை விட்டுச் செல்வேன், அவர் உங்களுக்குள் வாசம் செய்வார் என பிரியாவிடை கொடுத்தார் இயேசு. கர்த்தரின் அன்பை விளக்கிச் சொல்ல முடியாது, அளவிட முடியாது. அவர் அன்பை ருசித்தால் மட்டுமே நாம் அவரை அறிந்து கொள்ள முடியும், இதை உணர்த்தியே, யோவான் "அன்பில்லாதவன் தேவனை அறியான், ஏனெனில் தேவன் அன்பாகவே இருக்கிறார்!" என்று எழுதினார்.

இதனை சீடர்களின் வாழ்வில் இருந்தே காணலாம். சிலுவைப்பாடுகளின் போது தங்கள் உயிருக்கு அஞ்சி அவரை விட்டு ஓடிப்போன சீஷர்கள் அனைவரும் அதே கிறிஸ்துவை போதித்து தங்கள் உயிரை இரத்த சாட்சிகளாக விட்டுச் சென்றனர். கிறிஸ்துவுக்குள் வந்த ஒருவன் தன் தேவனை அதிகமாய்ச் சொந்தம் பாராட்டும் காரணம் இதுதான், வேறெவரும் தனக்குத் தராத தயவை, அன்பை அவன் கிறிஸ்துவினிடத்தில் இருந்து கண்டு கொண்டான். அந்த அன்பே அவனை கிறிஸ்துவுக்குள் நிலைத்து வாழ, சிலுவையை ஏற்றுக் கொண்டு அவரை பின்தொடர வல்லமை தருகிறது. ஏனெனில் அன்பு சகலமும் தாங்கும், சகலமும் சகிக்கும்...!

அந்த அன்பையும், நம் தேவன் நம்மீது கொண்டுள்ள நேசத்தையும் நீங்கள் அறிய வேண்டாமா? நம்மை விதவிதமாய்ச் சொந்த கொண்டாடும் சில வசனங்களையும் இயேசு கிறிஸ்துவின் அன்பை அழகாய் விளக்கிச் சொல்லும் ஒரு வீடியோவையும் இப்போது காணலாம்...


தாய் மறந்தாலும் அவர் மறப்பதில்லை, உன்னை தாயாக தேற்றுவார்!

"ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை; ஒருவனை அவன் தாய் தேற்றுவது போல் நான் உங்களைத் தேற்றுவேன்" - ஏசாயா 49:15, 66:13

ஒரு தந்தைப் போல உனக்கு இரங்குவார், உன்னை தன் மகனாக தெரிந்து கொண்டவர் அவர்!

"தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல, கர்த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார்; அந்தப்படி, திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத் தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திர சுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள்" - சங்கீதம் 103:13, ரோமர் 8:15

பாவியான நம்மை தன் சகோதரன் என்றழைக்க அவர் வெட்கப்படுவதில்லை...

"எப்படியெனில், பரிசுத்தஞ் செய்கிறவரும் பரிசுத்தஞ் செய்யப்படுகிறவர்களுமாகிய யாவரும் ஒருவரால் உண்டாயிருக்கிறார்கள்; இதினிமித்தம் அவர்களைச் சகோதரரென்று சொல்ல அவர் வெட்கப்படாமல்: உம்முடைய நாமத்தை என் சகோதரருக்கு அறிவித்து, சபை நடுவில் உம்மைத் துதித்துப் பாடுவேன் என்றும்; நான் அவரிடத்தில் நம்பிக்கையாயிருப்பேன் என்றும்; இதோ, நானும், தேவன் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் என்றும் சொல்லியிருக்கிறார்" - எபிரேயர் 2:11,12,13

ஒரு மணவாளனை போல உன்னுடன் நிலைத்திருக்க விரும்புகிற கர்த்தர்...

"உன் சிருஷ்டிகரே உன் நாயகர்; சேனைகளின் கர்த்தர் என்பது அவருடைய நாமம்; இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் மீட்பர், அவர் சர்வ பூமியின் தேவன் என்னப்படுவார். கைவிடப்பட்டு மனம் நொந்தவளான ஸ்திரீயைப் போலவும், இளம் பிராயத்தில் விவாகஞ் செய்து தள்ளப்பட்ட மனைவியைப் போலவும் இருக்கிற உன்னைக் கர்த்தர் அழைத்தார் என்று உன் தேவன் சொல்லுகிறார்; நித்திய விவாகத்துக்கென்று உன்னை எனக்கு நியமித்துக் கொள்ளுவேன்; நீதியும் நியாயமும் கிருபையும் உருக்க இரக்கமுமாய் உன்னை எனக்கு நியமித்துக் கொள்ளுவேன். உண்மையாய் உன்னை எனக்கு நியமித்துக் கொள்ளுவேன்; நீ கர்த்தரை அறிந்து கொள்ளுவாய்" - ஏசாயா 54:5,6, ஓசியா 2:19,20

நம்மை ஊழியக்காரர் என சொல்ல விரும்பாத நண்பன் நம் தேவன்...!

"இனி நான் உங்களை ஊழியக்காரரென்று சொல்லுகிறதில்லை, ஊழியக்காரன் தன் எஜமான் செய்கிறதை அறிய மாட்டான். நான் உங்களைச் சிநேகிதர் என்றேன், ஏனெனில் என் பிதாவினிடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன்" - யோவான் 15:15

உங்களை இவ்வளவாய் நேசிப்பவர் இயேசு...!

Friday, 21 February 2014

நம் தேவன் மூன்றில் ஒன்றாய் ஜொலிப்பவர்...!


நம்மைப் படைத்த தேவன் இணைப்பிரியாத திரியேகர், மூன்றில் ஒன்றாய் ஜொலிப்பவர்! அந்த அற்புத பிணைப்பை நம்மால் பிரித்து பார்க்க‌ முடியாது, பிரித்தால் நம்மைப் படைத்தவரை அறிய முடியாது... ஆனால்... இந்த உறவு எப்படி சாத்தியம்? பிதா குமாரன் பரிசுத்த ஆவி என்றால் என்ன? திரியேகம் என்றால் என்ன? திரியேகத்தை விளக்கிச் சொல்ல முடியுமா? வாருங்கள் காணலாம்...

இந்நாளில் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு இயேசு கிறிஸ்துவிடம் மனந்திரும்பினோர் எத்தனையோ நமக்கு தெரியாது, அதை தேவன் தான் அறிவார். அது போல நீங்களும் அவரது அன்பில் வீழ்ந்தவராய் மனந்திரும்புதலுக்கு ஏற்ற‌ ஆவலோடு இங்கு வந்திருக்கலாம். உங்களுக்காக‌ இந்த பதிவு. இயேசு கிறிஸ்துவை உங்களது சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ளும் போது, அவர் நமக்கீந்த இரட்சிப்பைப் பற்றியும், அவர் தம் பிதாவோடு கொண்டுள்ள அழகிய உறவைப் பற்றியும் அறிந்திருப்பது நல்லது. வேத வசனிப்பினால் இந்த சத்தியங்களை அறிந்து கொள்ளலாம். நீங்கள் புதியவராக இருந்தால், உங்களுக்கு விளக்கங்கள் தேவைப்பட்டால், இந்த பதிவு உங்களுக்கு கைக்கொடுக்கும். நன்றி.

திரியேகம் என்றால் என்ன?

1) பிரிக்க முடியாதது, பிரித்தால் பொருளில்லை...
தேவனிடத்தில் இருந்து வார்த்தையும், ஆவியும் புறப்படுகிறது என்று வேதம் கூறுகிறது. இதனைப் பற்றி இரண்டு கேள்விகளை இப்போது ஆராயலாம். ஒன்று, வார்த்தையில்லாத தேவன் சாத்தியமா? மற்றொன்று, ஆவி இல்லாத தேவன் உண்டா? வேதத்தின் பார்வையில் இதற்கான பதில்கள் என்ன...?

அ) வார்த்தை: அவர் சொல்ல ஆகும்...
எசேக்கியேல் 12:25 - "நான் கர்த்தர், நான் சொல்லுவேன், நான் சொல்லும் வார்த்தை நிறைவேறும்"
தேவன் தன் சித்தத்தை வெளிப்படுத்த ஒரு வார்த்தை சொன்னால் போதும். அந்த வார்த்தை அப்போதே நிறைவேறும். இது வேதம் கூறும் சத்தியம். உதாரணமாக, வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்த போது, வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார். உடனே வெளிச்சம் உண்டாயிற்று. இது தான் நம் தேவனின் வார்த்தை. அவர் சித்தம் வார்த்தையாகும், அந்த‌ வார்த்தை நிறைவேறும்.

இந்த நேரம் தேவனிடத்தில் வார்த்தை இல்லை என்று எடுத்துக் கொள்ளலாம். வார்த்தை இல்லாமல் தேவன் தன் சித்தத்தை எப்படி வெளிப்படுத்துவார்? அவர் மனதால் எண்ணினால் நிறைவேறும் என்று சொல்லலாமா? அப்படி அல்ல, மனதால் எண்ணினாலும் அவர் சித்தம் வார்த்தையாகும். வெளிச்சம் உண்டாக, "வெளிச்சம் உண்டாகட்டும்" என்று தேவன் எண்ணுகிறார். "வெளிச்சம் உண்டாகட்டும்" என்று அவர் எண்ணும் சிந்தனைகளும் வார்த்தைகள் தான்...

வார்த்தையை எடுத்துவிட்டால் தேவனுக்குப் பொருளில்லை. ஏனெனில் வார்த்தையில்லாத தேவனால் எந்த சித்தத்தையும் வெளிப்படுத்த முடியாது. வார்த்தையில்லாமல் தேவன் இல்லை.

ஆ) ஆவி: அவருக்குள் உள்ள ஜீவன்...
யோவான் 1:4 - "அவருக்குள் ஜீவன் இருந்தது"
ஜீவனில்லாத தேவன் உயிரற்ற‌ சடலத்திற்குச் சமம். மேற்கொண்ட எந்த விளக்கம் இதற்கு தேவையில்லை. வார்த்தையைப் போல, ஜீவனில்லாத தேவனுக்கும் பொருளில்லை. இது நாம் அறிந்ததே. கவலை வேண்டாம், உங்களை அழைத்தவர் ஜீவனுள்ள தேவன்!

இ) தேவன் இல்லாவிட்டால்...?

தேவன் இல்லாவிட்டால் வார்த்தையும் ஜீவனும் இல்லை! தேவனே இல்லாத போது, தேவனது வார்த்தையேது? அவருக்குள் வாசம் செய்ய ஆவியேது?

மறுக்க இயலாத‌ சத்தியம் இது. தேவன் தன் வார்த்தையோடும், ஆவியோடும் ஒருமைப்பட்டிருக்கிறார். தேவன் எப்படி முதலும் முடிவும் அற்றவரோ அதை போல அவரது வார்த்தையும் ஜீவனும் முதலும் முடிவும் இல்லாதவை. இறைவனை ஏற்கும் யாராலும் இந்த பிணைப்பை பிரிக்க முடியாது. பிரித்தால் என்னாகும்? தேவனுக்கு பொருளில்லை!

தேவன் + வார்த்தை + ஆவி = ஆற்றல‌ற்ற பொருள்
தேவன் + வார்த்தை + ஆவி = உயிரற்ற பொருள்
தேவன் + வார்த்தை + ஆவி = சாத்தியமல்ல

2) ப‌ரிசுத்த ஆவி நிழலிடும், வார்த்தை மாம்சமாகும்..!


நம்மைப் பாவத்தில் இருந்து நீக்க நம் தேவன் தன்னையே தந்தார். அவர் தான் தேவ‌குமாரன் இயேசு கிறிஸ்து. குமாரன் என்கிற சொல்லை வைத்து, தேவன் மரியாளிடம் இயேசுவை பெற்றெடுத்தார் என்று கருதுவதோ அல்லது தனக்காக ஒரு குமாரனை உருவாக்கிக் கொண்டார் என்று எண்ணுவதோ முற்றிலும் தவறு. கிறிஸ்துவுக்குள் வாழும் எவரும் இவ்வாறு எண்ணுவதில்லை. கிறிஸ்துவை அறியாத மக்களிடத்தில் தான் இத்தகைய தவறான எண்ணங்கள் நிலவுகின்றன. நீங்கள் குமாரன் என்கிற வார்த்தையை இத்தகைய பொருளில் எண்ணி இருந்தால் அதை கைவிடுங்கள். குமாரன் என்றால் என்ன? ஆதிமுதல் இருந்த தேவன் நம்மிடத்தில் மனிதனாக வந்தார். அவர் தான் இயேசு. இயேசு தேவனின் தூய பிரதிபலிப்பு. அதன் காரணமாகவே, தன்னைக் குமாரன் என்றார், என்னை கண்டவன் பிதாவைக் கண்டான் என்றார். இதனை வேதம் அழகாய் விளக்கியுள்ளது. இரண்டு வேதப்பகுதிகளை இப்போது காணலாம்.
யோவான் 1:1,14 - ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையை கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.
மத்தேயு 1: 18‍ - 21 - இயேசு கிறிஸ்துவினுடைய ஜெநநத்தின் விவரமாவது: அவருடைய தாயாராகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டு இருக்கையில், அவர்கள் கூடி வருமுன்னே, அவள் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது. அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாய் இருந்து, அவளை அவமானப்படுத்த மனதில்லாமல், இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாய் இருந்தான். அவன் இப்படிச் சிந்தித்துக் கொண்டிருக்கையில், கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு: தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளை சேர்த்துக் கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில் உற்பத்தியாய் இருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது. அவள் ஒரு குமாரனை பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக. ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்.
குமாரனை அறிய இவ்விரண்டு வாக்கியங்கள் போதும்...

1) "அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்"

2) "அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது"

தேவ‌னின் வார்த்தையும், தேவனின் தூய ஆவியும் மாம்சமானது, நம் தேவன் நம்மிடத்தில் வந்தார். அவர் தான் இயேசு, தேவனின் தூய பிரதிபலிப்பு. குமாரனைக் கண்டவன் பிதாவைக் கண்டான்.

3) தேற்றரவாளன் வந்தார், நமக்குள் வாசம் செய்கிறார்...


நமக்கு அளிக்கப்பட்ட தேற்றரவாளன் தான் பரிசுத்த ஆவியானவர்.

யோவான் 14:24 - என் நாமத்தினாலே பிதா அனுப்பப் போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்கு போதித்து, நான் உங்களுக்கு சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்.

தேவனிடத்தில் இருந்து புறப்பட்ட ஆவி அவர், அவரது வார்த்தைகளை நமக்குப் போதிப்பவர். தேவவார்த்தையும், தேவனின் ஜீவனும் நமக்குள் வந்தது. அவரே நம் தேற்றரவாளன்...! தேவன் போதித்த சகல வார்த்தைகளையும் நமக்கு நினைவுபடுத்தி நம்மை சத்திய பாதையில் நடக்கச் செய்கிறார்.

இது தான் திரியேகம், பரிசுத்த வேதாகமத்தின் உயிர்நாடி. திரியேகம் இல்லாது வேதத்தை விளக்க முடியாது. ஏன்? திரியேகமின்றி கடவுளைக் கூட‌ நம்மால் விளக்க முடியாது! மகிழ்ந்து களிகூறுங்கள், உங்களை அழைத்தவர் உண்மையுள்ளவர்...!

Monday, 17 February 2014

உங்களை அழைத்தவர் உண்மையுள்ளவர்...!


நம்மை படைத்தவரே நம்மிடம் அவரை வெளிப்படுத்தினால் ஒழிய நம்மால் கடவுளைக் குறித்தும் அவரது குண நலன்களைக் குறித்தும் அறிய முடியாது. அப்படிப்பட்ட வெளிப்பாடு இவ்வுலகத்தில் உண்டா என்று சரித்திரத்தை புரட்டிப் பார்ப்போம். உண்டு! ஒரு தடயம் உள்ளது. 2000 ஆண்டுகளுக்கு முன்பு, பாலஸ்தீன நாட்டின் தொழும் ஒன்றில் பிறந்த குழந்தை அது. இன்றும் அந்த நன்னாளை உலகம் கொண்டாடி வருகிறது. அவர் தான் இயேசு.

இயேசு கடவுளா? தன்னை கடவுள் என்றாரா?
இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறை படித்தால், அவர் மக்களிடத்தில் ஒரு சராசரி மனிதராய் போதிக்காமல், அதிகாரமுடைய ஒருவ‌ராக போதனை செய்தார் என்று அறியலாம். அவரது வார்த்தையை கேட்ட அக்கால மக்கள் மிகுந்த ஆச்சரியத்துக்கு உள்ளானர்கள். போதிக்க துவங்கிய சில நாட்களிலேயே, தன்னை குறித்து விய‌ப்பூட்டும் வார்த்தைகளை சொல்லி வந்தார். ஒரு சாதாரண தீர்க்கதரிசிக்கும், போதகருக்கும் மேலாய் இயேசு தன்னை கூறிக் கொள்கிறார் என்பதை மக்கள் அறிந்து கொண்டனர். ஒரு நாள், "என்னைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?" என்று இயேசு கேட்டபோது அவரது சீஷரான‌ பேதுரு,"நீர் ஜீவனுள்ள தேவனின் குமாரனாகிய கிறிஸ்து" என்று சொன்னார். அதற்கு இயேசு அவரை கடிந்து கொள்ளவில்லை, மறுமொழி கூறவில்லை, மாறாக அவரை மெச்சினார்.

இவ்வாறு, இயேசு யூத சட்டங்களைக் கைக்கொள்ளாமல், தன்னை தேவகுமாரன் என்று கூறி வந்ததால், யூதர்கள் அவரை கொல்ல முயன்றனர். ஒரு கட்டத்ததில், "பிதாவும் நானும் ஒன்றாயிருக்கிறோம்" என்று இயேசு சொன்னார். அந்த வார்த்தைகளை கேட்டபொழுதே யூதர்க‌ள் கற்களை எடுத்துகொண்டார்கள். "எந்த நற்கிரியை நிமித்தம் என்மீது கல்லெறிய நினைக்கிறீர்கள்" என்று அவர் கேட்ட பொழுது, "நீ மனிதனாய் இருக்க, உன்னை கடவுள் என்பதால் கல்லெறிகிறோம்" என்றார்கள். இவ்வாறு, இயேசுவின் போதனைகளே அவரது அடையாளத்தை வெளிப்படுத்தும் மையக் கருத்துக்களாக அமைந்தன.

இயேசு கடவுளா? அவரது வாழ்க்கையை காணலாம்...


உடல் ஊனமுற்ற ஒருவரை குணமாக்க இயேசு கிறிஸ்துவிடம் சிலர் கொண்டு வந்தார்கள். அப்பொழுது இயேசு, "மகனே உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது" என்றார். அவரது வார்த்தை யூதர்களுக்கு வெறுப்பூட்டியது. "இந்த மனிதன், தேவ தூஷணம் சொல்வதென்ன? கடவுளைத் தவிர்த்து யாரால் பாவங்களை மன்னிக்க கூடும்? பாவத்தை மன்னிக்க இவன் யார்?" என்று அவரை கடிந்து கொண்டனர். குற்றவிசாரணை போது, "நீ தேவனுடைய குமாரனாகிய‌ கிறிஸ்துதானா?" என்று பிரதான ஆசாரியன் கேட்க, "நான் அவர்தான், மனுஷகுமாரன் சர்வ வல்லவரின் வலது பாரிசத்தில் வீற்றிருப்பதையும், வானத்தின் மேகங்கள் மேல் வருவதையும் நீங்கள் காண்பீர்கள்" என்று இயேசு சொன்னார். இதனை கேட்டவுடனே பிரதான ஆசாரியன் தன் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு, "இவன் தேவ தூஷணம் சொன்னான், இனி சாட்சிகள் வேண்டியதென்ன?" என்று சத்தமிட்டான். அங்கிருந்தோரும் "மரணத்துக்கு பாத்திரமாயிருக்கிறான்" என கோஷமிட்டார்கள்.

இயேசுவின் ஒவ்வொரு வார்த்தைகளும் அவரது அடையாளத்தையும், அவருக்கும் தேவனுக்கும் உள்ள இணைப்பையும் வெளிப்படுத்திக் கொண்டே இருந்தன. தேவனின் தூய பிரதிபலிப்பே இயேசு கிறிஸ்து. அவரை அறிந்து கொள்வது தேவனை அறிந்து கொள்வதாகும், அவரை காண்பது தேவனை காண்பதற்கு சமம், அவரை விசுவாசிப்பவன் தேவனை விசுவாசிக்கிறான், அவரை ஏற்பவன் தேவனை ஏற்றுக் கொள்கிறான், அவரை மகிமைப்படுத்தினவர் தேவனை மகிமைப்படுத்துகிறார்.

இயேசு கடவுளா? சிந்தனை செய்வோம்...
இத்தருணம் நம் முன் இருப்பது இந்த கேள்வி தான், "இயேசு தன்னைக் குறித்து சொன்னவை உண்மையா?"

சிலர், இயேசு தன்னைக் கடவுளென்று சொன்னதாக அவரது சீஷர்கள் பொய்யுரைத்திருக்கலாம் என்று கருதுகிறார்கள். இது சரியல்ல, இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட சில நாட்களிலேயே அவரது சீஷர்கள் சுவிசேஷச் செய்திகளை ஊர் ஊராக சென்று பிரசித்தப்படுத்தினர். சில ஆண்டுகளில் இயேசு கிறிஸ்துவின் போதனைகள் வெகு வேகமாக பரவி, பல மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. பல இடங்களில் திருச்சபைகள் பெருகின, அவரது வாழ்க்கை வரலாறு குறித்த சுவிசேஷ நூல்கள் சபைகளுக்குள் புழங்கத் தொடங்கி பெருமளவில் பரிமாறிக் கொள்ளப்பட்டது. இவையெல்லாம் சீஷர்கள் இறப்பதற்குள் நிறைவேறி முடிந்தன. சமுதாயத்தில் பெயர் பெற்றிராத ஒரு கொலை குற்றவாளிக்கு இத்தனை சீக்கிரத்தில் புகழ் உண்டாவது எளிதல்ல. அதோடு, சீஷர்கள் அவர்களது போதனைகளில் இருந்து நிலை தடுமாறல் இறப்பு வரை போராடினர். கொலை மிரட்டல்களுக்கு அஞ்சாமல் அவரது வார்த்தைகளை போதித்து கொடூர முறையில் தங்கள் உயிர்களை விட்டனர். மனம் அறிந்த ஒரு பொய்க்காக குறுகிய காலத்தில் இத்தனை பாடுபட்டு உயிரை விட யாருக்கும் மனம் வராது. சீடர்கள் பொய்யுரைக்கவில்லை.

சிலர் அவரது தெய்வத் தன்மையை மறுத்தாலும், அவரை ஒரு நல்ல தத்துவ ஞானியாக, போதகராக ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால், இது பொருந்தாது. இயேசு கிறிஸ்து தன்னை கடவுள் என்று பொய் சொல்லி இருந்தால், அவரை ஒரு நல்ல போதகராகவோ, தத்துவ ஞானியாக ஏற்க முடியாது. ஒரு சாரார், அவரை பைத்தியம் பிடித்தவர் என்று அக்காலம் முதலே இகழ்ந்தார்கள். இது இன்னொரு வாய்ப்பு. இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றில் அத்தகைய மனநல குறைவுகள் எதுவும் இல்லை. அவர் இறுதி வரை ஒரே போதனையில் நிலைத்து இருந்தார். கண்ணியமாக நடந்து கொண்டு, பல மக்களிடத்தில் நற்பெயர் பெற்றார்

ஆக, ஒரு நல்ல மனிதர் என்ற இடைநிலையில் வைப்பதோ, சீஷர்களைக் குற்றஞ் சொல்வதோ, மனநலம் பாதிக்கப்பட்ட நபராக கருதுவது பொருந்தாது. எனவே, இயேசு தன்னைக் குறித்து சொன்னவை உண்மையா? என்ற கேள்வி எழுந்தால் அதற்கு இரண்டே பதில்கள் தான். ஒன்று, அவர் பொய் சொல்லி இருக்க வேண்டும் அல்லது அவர் சொன்ன வார்த்தைகள் எல்லாம் சத்திய வார்த்தைகளாக இருக்க வேண்டும்.

இயேசு கடவுளா? ஆதாரங்கள் என்னென்ன?
ஒரு மனிதர் தன்னைக் குறித்து சொல்லிக் கொள்வது எளிது. ஆனால், அவர் தன்னைக் குறித்து சொன்ன வார்த்தைகளை மக்களிடம் நிருபித்து காட்டினாரா என்பது அவசியம். இயேசு கிறிஸ்து தன்னைக் கடவுளாகச் சித்தரித்து மக்களை வியக்க வைத்தார். அதற்காக கொலையுண்டார். ஆனால், அவரது வார்த்தைகள் உண்மைதான் என்பதை நிருபித்து காட்டினாரா?

அற்புதச் செயல்கள்
தன் வார்த்தையின் உண்மையை எளிமையாய் எடுத்துக் காட்டினார் இயேசு, அவரது அற்புதச் செயல்கள் அவரது வார்த்தைகளுக்கு அத்தாட்சிகளாக அமைந்தன. அதனை உணர்த்தியே இயேசு, "என் பிதாவின் கிரியைகளை நான் செய்யாதிருந்தால், நீங்கள் என்னை விசுவாசிக்க வேண்டியதில்லை. செய்தேனே ஆகில், நீங்கள் என்னை விசுவாசியாதிருந்தாலும், பிதா என்னிலும் நான் அவரிலும் இருக்கிறதை நீங்கள் அறிந்து விசுவாசிக்கும்படி அந்தக் கிரியைகளை விசுவாசியுங்கள்" என்று சொன்னார்.

பரிசுத்த குணமும் தூய வாழ்வும்
"என்னிடத்தில் குற்றம் உண்டென்று உங்களில் யார் என்னை குற்றப்படுத்தக் கூடும்?" என்று மக்களைப் பார்த்து கேட்கும் அளவிற்கு இயேசுவின் வாழ்க்கை பரிசுத்தமாக இருந்தது. அவர் இவ்வாறு கேட்ட போது, அவருக்கு எதிராக குற்றஞ் சொல்ல எந்த மனிதனும் துணியவில்லை. தன் சீஷர்களை பாவ மன்னிப்பு கேட்கச் சொன்னாலும், இயேசு பாவ மன்னிப்பு கேட்க‌வில்லை. பிறப்பு முதலே மனிதன் பாவியாய் இருக்கிறான் என்று யூதம் திட்டமாய்ச் சொல்கிறது. ஆனால், யூதகுலத்தைச் சேர்ந்த அவரது சீஷர்கள், இயேசு கிறிஸ்து பாவமற்றவர் என போதித்தனர். இயேசு குற்றம் சாட்டப்பட்டவராய் நின்ற போதிலும் பிலாத்து, "இவரிடத்தில் எந்த குற்றமும் காணேன்" என்று சொல்லி கைகழுவினான். இயேசு கிறிஸ்துவின் வாழ்வெல்லாம் பரிசுத்தம், தூய்மை.

இயற்கை அடிபணிந்தது
குருடரின் கண்களைத் திறந்தார், குஷ்டரோகிகள் சுத்தமானார்கள், முடவர்கள் நடந்தனர். இயேசு கிறிஸ்து தன்னிடத்தில் வந்த, கொண்டு வரப்பட்ட பிணியாளிகள் எல்லாரையும் சுகமாக்கினார். இதனை அன்றைய யூதர்களும் மறுக்கவில்லை. இயேசு பிறவிக் குருடனை குணமாக்கின போதும், மரித்த லாசருவை எழுப்பின போதும், "பிறவிக் குருடனின் கண்களை மனிதனால் திறக்கக் கூடுமோ?" என்றார்கள், "இதோ உலகமே அவன் பின்னால் போயிற்றே" என்று வியப்புக்குள்ளானர்கள். இயற்கை அவரது அடிபணிந்தது, காற்றையும் புயலையும் தன் வார்த்தையால் அமைதியாக்கினார். கற்பாறை போல கடல் நீர் மேல் நடந்தார், "காற்றும் கடலும் இவரது வார்த்தைக்கு கீழ்ப்படிகிறதே, இவர் எப்படிப்பட்டவரோ!" என்று அவரது சீஷர்கள் தங்களுக்குள் சொல்லிக் கொண்டார்கள்.

உயிரோடிக்கிற தேவன்


இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளுக்கு முக்கிய அத்தாட்சி அவரது உயிர்த்தெழுதல். தன்னை கொலை செய்வார்கள் என்றும், மரித்த மூன்றாம் நாளில் தன் உயிர்த்தெழுதல் நிகழும் என்றும் இயேசு தன் சீஷர்களிடம் கூறியிருந்தார். ஐந்து முறை அவர் இவ்வாறு கூறினார். இத்தகைய வாக்குறுதிகள் சீஷர்கள் மத்தியில் அவிசுவாசத்தை எழுப்பும், இருப்பினும் இயேசு தயங்காமல் வாக்களித்தார். இதுவே அவரது தெய்வீகத்துக்கு முக்கிய பரீட்சை. இயேசு சொல்லியபடி உயிர்த்தெழாவிட்டால், அவரது போதனைகள், அவருக்காக விடப்பட்ட‌ உயிர்கள், சீஷர்கள் பட்ட பாடுகள், சுவிசேஷப் பணிகள், இரத்த சாட்சிகள் என எல்லாமே வீண். ஆனால், அவர் சொல்லியபடி உயிர்த்தெழுந்தால், அவர் சொல்லிய பிற வார்த்தைகள் எல்லாம் சத்திய வார்த்தைகள், நம் நம்பிக்கை முழுவதும் பெற்றுக்கொள்ள தகுதியான வார்த்தைகள், நித்திய ஜீவனை அடைய அவர் காட்டிய வழிகளே உண்மையானவை. இதனையே, "கிறிஸ்து எழுந்திருக்கவில்லை என்றால், எங்கள் பிரசங்கமும் விருதா, உங்கள் விசுவாசமும் விருதா" என்றார் பவுல். இயேசு உயிர்த்தெழுந்தாரா?

இயேசு அற்புதம் பல செய்திருக்க, அவர் நினைத்திருந்தால் சிலுவை மரணத்தை எளிதாய் தவிர்க்க முடியும். ஆனால் இயேசு தன் சிலுவை மரணத்தை தவிர்க்கவில்லை. போர்ச் சேவகர் இயேசுவைக் கைது செய்யும் போது, பேதுரு அவர்களை எதிர்த்து பட்டயம் எடுத்தார். அப்பொழுது இயேசு, "உன் பட்டயத்தை திரும்ப அதின் உறையிலே போடு; பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்து போவார்கள். நான் இப்பொழுது என் பிதாவை வேண்டிக் கொண்டால், அவர் பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதரை என்னிடத்தில் அனுப்பமாட்டார் என்று நினைக்கிறாயா? அப்படிச் செய்வேனானால், இவ்விதமாய்ச் சம்பவிக்க வேண்டும் என்கிற வேதவாக்கியங்கள் எப்படி நிறைவேறும்" என்றார். அவர் சொல்லியபடி சிலுவை மரணம் நிறைவேறியது. சீலைகளை வாசனைத் தைலத்தில் நனைத்து அவரது உடலைச் சுற்றி கட்டி கல்லறையில் கிடத்தினார்கள். இயேசு உயிர்த்தெழப் போவதாய் வாக்களித்திருந்ததால் அவரது கல்லறை மீது அரசு முத்திரை போடப்பட்டது. கல்லறைக்கு காவல் வைத்தனர்.

இவை அனைத்தையும் கடந்து மூன்றாம் நாள் அதிகாலை வேளையில், அவரது சரீரம் அக்கல்லறையில் இல்லை. இச்செய்தி அப்பகுதிகளில் பரவத் தொடங்கியது. சிலர் இயேசு சிலுவையில் உயிர் இழக்கவில்லை, அவர் சுய நினைவற்று இருந்தது அறியாமல் அடக்கம் செய்யப்பட்டிருப்பார் என்று கருதுகின்றனர். இதனை மூர்ச்சைக் கோட்பாடு என்பார்கள். ஆனால், சிலுவையில் அறையப்பட்ட இயேசு உயிர் இழந்தாரா என அவரது விலாவில் குத்தி சோதித்தனர். அவர் இறப்பு முதலில் உறுதி செய்யப்பட்ட பிறகே உடல் கல்லறையில் வைக்கப்பட்டது. அதோடு, கல்லறையில் வைக்கப்பட்ட இயேசு தன் வேதனைகளை மீறி கல்லறையின் கல்லைப் புரட்டி சேவகரைக் கடந்து வருவது இயலாத காரியம். மூர்ச்சைக் கோட்பாடு அர்த்தமற்றதாகும். சிலர், இயேசுவை இழந்த துக்கத்தில் இருந்த பெண்கள், வழி தவறி வேறு கல்லறைக்கு சென்றிருக்கக் கூடும் என்கின்றனர். பெண்கள் கல்லறை மாறிச் சென்றதாக எடுத்துக் கொண்டாலும், யூதர்கள் சரியான கல்லறைக்குச் செல்ல முடியும். இயேசுவின் உடலை எடுத்து உயிர்த்தெழுதலை எளிமையாக மறுத்திருக்கலாம். ஆனால் அவர்கள், இயேசுவின் சரீரத்தை அவரது சீஷர்களே களவாடிவிட்டு, கிறிஸ்து உயிர்தெழுந்தார் என பொய்யுரைப்பதாக கூறினார்கள். யூதர்களின் வார்த்தையில் இருந்தே, இயேசுவின் சரீரம் கல்லறையில் இல்லை என்பது தெளிவாகும். அடுத்ததாக, காவல் பணியின் போது உறங்கும் சேவகர்களுக்கு அக்காலத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. காவலாளிகளை மீறி சரீரத்தைக் கொள்ளையிடுவது எளிதல்ல.

காலியான கல்லறை சீஷர்களுக்கு போதுமான விசுவாசத்தைத் தந்ததா? இல்லை. அதனால் அவர்கள் இயேசு உயிர்த்தெழுந்தார் என்று விசுவாசிக்கவில்லை. அவர்களது விசுவாசத்தை எழுப்ப, உயிர்தெழுந்த இயேசு பல முறை காட்சி அளிக்க வேண்டியிருந்தது. ஒருமுறை அவர் காட்சியளித்த போது, சீஷர்களில் ஒருவரான தோமா அவ்விடத்தில் இல்லை. அவர் வந்த பிறகு, மற்ற சீஷர்கள் இயேசு அளித்த காட்சி குறித்து அவரிடம் கூறினார்கள். ஆனால் தோமா அப்போதும் விசுவாசிக்க மறுத்தார். தன் கைகளால் அவரை தொட்டால் ஒழிய தான் இயேசுவின் உயிர்தெழுதலை நம்பப்போவதில்லை என்றார். அவர்களது விசுவாசத்தைப் பெற நாற்பது நாட்களாக இயேசு இவ்வுலகில் இருக்க வேண்டியதாயிற்று. அதன் பின்பே அவர் பரமேறிச் சென்றார். இச்சங்கதிகளை எல்லாம் சீஷர்கள் சாட்சியாக அறிவிக்க தொடங்கினார்கள். சீஷர்களின் சாட்சி மெய்யா? 

சத்தியத்திற்காக எந்த மனிதனும் உயிரிழக்கத் துணிவான், ஆனால் மனமறிந்த ஒரு பொய்க்காக எந்த மனிதனாலும் இறுதிவரை நிலையாய் நிற்க முடியாது, அப்பொய்க்காக பாடுகள்படவும் உயிரிழக்கவும் மனம் வராது. ஓரிரண்டு வருடங்கள் அல்ல, இறப்பு வரை சீஷர்கள் தங்கள் சாட்சியில் உறுதியாய் நின்றார்கள். கொலை செய்யப்பட்டாலும், கல்லெறியப்பட்டாலும், வேதனை படுத்தப்பட்டாலும், புறக்கணிக்கப்பட்டாலும், நாடு கடத்தப்பட்டாலும் அவர்கள் தங்கள் நிலையில் இருந்து ஒரு தருணமும் பின்வாங்கவில்லை. இறுதிவரை சாட்சியாய் நின்று, இயேசு கிறிஸ்துவை போதித்தனர். அரச தடையை மீறி கிறிஸ்துவை போதித்த குற்றத்திற்காக கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். அந்த நேரமும் அவர்கள் சாட்சி வழுவில்லை. அவர்களுக்குப் பின் அவர்கள் சீஷர்கள் உறுதியாய் நின்றனர், கொலை செய்யப்பட்டனர், திருச்சபைகள் பெருகின, யூத சடங்காச்சாரங்கள் வீழ்ந்தன‌, கிரேக்க மார்க்கங்கள் உருதெரியாமல் போயின, இறுதியாக இயேசுவின் போதனைகளால் ரோம சாம்ராஜ்ஜியமே கவிழ்ந்தது. இவை எல்லாம், ஒரு குறுகிய காலத்தில் நிறைவேறி முடிந்தன! இன்றும் இயேசு கிறிஸ்துவின் உயிர்தெழுதல் உலகமெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது...

இது உங்கள் நேரம்...
இயேசு ஏன் இத்தனை பாடுகள் படவேண்டும்? உங்களுக்காகத் தான்! உங்கள் அன்பை பெறவே அவர் இத்தனை இன்னல்களையும் மேற்கொண்டார். கடவுளை நமக்கு அடையாளம் காட்ட, நாம் கடவுளை அறிந்து கொள்ள ஒரு மகத்தான வாழ்க்கையை நம் முன்னே விட்டுச் சென்றார். இயேசு சொன்னார், நான் உங்களுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்... அவரது கரங்களில் நம்மை அர்ப்பணிக்கும் போது, நம் வாழ்வு அர்த்தம் பெறும், "இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசிப்பேன்" என்கிறார். அவரது சத்தத்திற்கு நீங்கள் செவி கொடுங்கள், இந்த நேரமே அவர் உங்களுக்குள் பிரவேசிப்பார். உங்கள் வாழ்வு புதிதாகும், பாவம் மன்னிக்கப்படும், பரலோக வாசல் திறக்கும், நித்திய ஜீவன் உண்டாகும்...

வாழ்த்துக்கள்...

(கிறிஸ்து அறிமுகப்பதிவு 2)

Saturday, 15 February 2014

கடவுளை அறிந்து கொள்ளுங்கள், உங்களுக்கும் அவருக்கும் உள்ள தனிப்பட்ட உறவை அறிந்து கொள்ளுங்கள்


கடவுளை எப்படி அறிந்து கொள்ளலாம்? இது இயேசு கிறிஸ்துவை அறியாத நண்பர்க‌ளுக்கான ஒரு பதிவு, இந்நேரமே கடவுளோடு ஒரு தனிப்பட்ட உறவை ஏற்படுத்தி கொள்ளுங்கள், அவரை அறிந்துகொள்ள இச்செய்தி உங்களுக்கு வழிகாட்டும்.

சரி, கடவுளை அறிந்து அவரோடு அன்பான உறவொன்றை ஏற்படுத்தி கொள்ள என்ன செய்ய வேண்டும்? அனுதினமும் அவரைப் பற்றி அறிந்து கொள்ள தியானிக்க வேண்டும், தற்போது நாமிருக்கும் நிலையைக் காட்டிலும் குணந‌லன்களில் சிறக்க வேண்டும், அல்லது வாழ்நாள் முழுவதும் நற்பணிகளை செய்து வாழ வேண்டும்... இவ்வாறு பலர் பல விதமாக கூறுவார்கள். ஆனால் இவை எதுவுமே அதற்கான தீர்வு அல்ல. வாழ்வின் உண்மைப் பொருளை இயேசு நமக்கு விளக்கிச் சொல்லியுள்ளார். கடவுளை அறிந்து கொண்டு, அவரை சொந்தங் கொண்டாட அவர் கூறின வார்த்தைகள் நமக்கு வழிகாட்டுகின்றன.

1. கடவுள் உங்களை நேசிக்கிறார், உங்கள் வாழ்விற்கு நல்ல திட்டத்தை வைத்திருக்கிறார்.

கடவுள் தான் உங்களை படைத்தவர். அது மட்டுமல்ல, உங்களை அளவிள்ளாமல் நேசிப்பவர். இந்த நேரத்தில் நீங்கள் அவரை அறிந்து கொள்ள விரும்புகிறார், பரலோகத்தில் அவரோடு நீங்களும் நிலைத்து வாழ வேண்டுமென்பது அவரது ஆவலாய் இருக்கிறது. இச்சித்தத்தை தெளியப்படுத்த நம்மிடம் வந்தார் இயேசு. "தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்" என தன்னைக் குறித்து இயேசு ஒருமுறை சொன்னார். நாம் கடவுளை அறிய‌, அவரை நமக்குச் சொந்தமாக்கிக் கொள்ள நம்மிடத்தில் வந்தவர் இயேசு. அவரே நம் வாழ்விற்கு பொருளையும், நாம் படைக்கப்பட்ட நோக்கத்தைச் சொன்னவர்.

ஏன் நம்மால் கடவுளை கிட்டிச் சேர முடியவில்லை?

2. நாம் அனைவரும் பாவிகள், நமது பாவங்களே நமக்கும் நம்மை படைத்தவருக்கும் பிரிவினை உண்டாக்குகிறது.

இப்பிரிவை நம்மால் மனதார உணர முடியும். நமது வாழ்நாட்களில் பாவங்களைச் செய்து நம்மைச் சீரழித்துக் கொள்கிறோம். நமக்கும் கடவுளுக்கும் உள்ள இடைவெளி நம் பாவச் செயல்களே என்பதில் சந்தேகம் தேவையில்லை. "நாமெல்லாரும் ஆடுகளைப் போல வழிதப்பித் திரிந்து, அவனவன் தன்தன் வழியிலே போனோம்". நமக்கும் நம்மை படைத்த கர்த்தருக்கும் இடையே உள்ள எல்லா போராட்டங்களும் இப்பாவங்களின் நிமித்தமே. இதற்கு நமது மனசாட்சியே சாட்சிக் கொடுக்கிறது. இருந்தாலும், கர்த்த‌ரை கிட்டிச் சேர நாம் முயற்சி செய்யாமல் இருப்பதில்லை. அவரது மனதை கொள்ளையிட நற்செயல்களில் ஈடுபட்டு புண்ணியத்தைச் சேர்க்கிறோம். ஆனால் இம்முயற்சி பயனற்றது. எத்தனை புண்ணிய காரியங்களைச் செய்தாலும் நாம் செய்த பாவங்கள் பாவங்களே. பாவங்களை மறைக்க இப்புண்ணிய காரியங்கள் உதவாது.

இப்பாவத்தை எப்படி போக்க முடியும்?

3. இயேசு நம் பாவங்களை போக்கினார், அவரால் நாம் கடவுளை அறியவும், அவருடன் சொந்தங் கொள்ளவும் தகுதி அடைந்திருக்கிறோம்.

நமது பாவங்களுக்கு உரிய தண்டனை உண்டு. "பாவத்தின் சம்பளம் மரணம்" என வேதம் கூறுகிறது. கடவுளோடு நமக்குள்ள உறவு முற்றிலும் துண்டிக்கப்பட வேண்டும், இதுவே நமது பாவங்களுக்குரிய தண்டனை. இச்சாபத்தில் இருந்து நம்மை நீக்க ஒரே வழி தான் உண்டு. நமக்குப் பதிலாக நமது ஆக்கினைத் தீர்ப்பை இன்னொருவர் பெற்றுக் கொள்ள வேண்டும். ஆனால், நமது பாவத்திற்கான இந்த நிவர்த்தியை எந்த மனிதனும் செய்ய முடியாது. ஏனெனில் எல்லா மனிதர்களும் பாவிகளாக இருக்கின்றனர். தன்னிடத்தில் பாவத்தை வைத்துக் கொண்டு தானே தண்டனை பெற ஏதுவாயிருக்க, எந்த மனிதனும் மற்றவரின் தண்டனையை ஏற்க தகுதியற்றவன். எனவே நமக்காக தேவ குமாரன் இயேசு இவ்வுலகில் மனிதனாக வந்தார். முற்றிலும் பாவமில்லாத தூய வாழ்வை நடத்தினார். பொய்குற்றம் சாட்டப்பட்டு, எல்லாரும் கைவிடப்பட்டவராய், சிலுவையில் அறையப்பட்டார். "என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்" என சத்தமிட்டு தன் ஜீவனையும் நமக்காக விட்டார். அவரது சிலுவை மரணத்தின் போதே நம்மேல் விதிக்கப்பட்ட சாபம் ஒழிந்தது. அதன் அத்தாட்சியாக, சாவை வென்று உயிர்த்தெழுந்து தன் வார்த்தைகளின் உண்மையை காட்டினார்.

அவராலே அன்றி நமக்கு இரட்சிப்பு இல்லை. இதனையே, "நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்", "கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு; ஒருவரும் பெருமை பாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல" என பல இடங்களில் வேதம் திட்டமாய்ச் சொல்கிறது. எனவே, நம் பாவங்கள் மன்னிக்கப்பட, கடவுளை அறிந்து அவரைச் சொந்தங் கொள்ள நாம் இயேசு கிறிஸ்துவை விசுவாசித்தால் போதும். இயேசு சொல்கிறார், "ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன், என்னிடத்தில் விசுவாசமாய் இருக்கிறவன் எவனோ அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும்". உங்கள் மேல் அன்பு கொண்டு உங்களுக்காக மரித்தவர் இயேசு. இவ்வேளையில் அவர் உங்களை அழைத்திருக்கிறார். கடவுளோடு நித்திய உறவு கொள்ள, இயேசு கிறிஸ்து உங்களுக்காக செய்த எல்லாவற்றையும் நினைவு கூர்ந்து, மனப்பூரவமாக விசுவாசியுங்கள்.

நீங்கள் கிறிஸ்துவின் அழைப்பை ஏற்றுக் கொள்வீர்களா?


4. இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ளுதல்.

"அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்" என வேதம் கூறுகிறது. நாம் நமது விசுவாசத்தினால் இயேசுவானவரை ஏற்று கொள்கிறோம். இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பது என்றால் என்ன? அவரே தேவ குமாரன், என் பாவங்களை சுமந்து தீர்த்தவர் என விசுவாசித்து, நமது வாழ்வை அவரது கரங்களில் அர்ப்பணிக்க வேண்டும். இவ்வேளையில் இயேசு உங்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார், அவர் உங்களுக்கு விடுத்த அழைப்பின் வரிகள் இங்கே, "இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம் பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம் பண்ணுவான்".

நீங்கள் உங்களை ஒப்புக்கொடுக்கத் தயாரா? இயேசுவுக்கென்று உங்களை ஒப்புக் கொடுக்க, நேர்த்தியான வார்த்தைகளோ, சடங்காச்சாரங்களோ முக்கியமல்ல. அவர் உங்கள் உள்ளத்தையே பார்க்கிறார். உங்கள் விசுவாசத்தை அறிக்கையிட அறியாவிட்டால், கீழுள்ள சிறு ஜெபத்தை சொல்லி பிராத்தியுங்கள்.
"இயேசுவே, நான் உம்மை அறிந்து கொள்ள விரும்புகிறேன், என் வாழ்வில் வாரும். எனக்கு இரட்சிப்புண்டாக சிலுவையில் மரித்தீரே, அதற்காக உமக்கு நன்றி சொல்கிறேன். உம் ஒருவராலேயே என் பாவங்களை நீக்கி என் வாழ்வை புதிதாக்க முடியும். என்னை மன்னித்து, எனக்கு நித்திய ஜீவனை கொடுப்பதற்காக உமக்கு ஸ்தோத்திரம். இவ்வேளையில் என் வாழ்வை உம் கரங்களில் ஒப்புக் கொடுக்கிறேன். உம் சித்தத்தை என் வாழ்வில் நிறைவேற்றும். ஆமென்."
அவரை நீங்கள் மனப்பூர்வமாக, உண்மையாக இவ்வேளையில் அழைத்திருந்தால், அவர் சொன்னபடியே உங்கள் வாழ்வில் இப்போது பிரவேசித்து இருக்கிறார். கடவுளோடு ஒரு தனிப்பட்ட அன்பான உறவை இவ்வேளையில் நீங்கள் தொடங்கிவிட்டீர்கள். உங்கள் பாவமெல்லாம் அழிந்தது. புதிதான வாழ்வை தொடங்க ஆயத்தமாயிருக்கிறீர்கள், இனி, அன்றாட வேதம் வாசித்து, ஜெபித்து, கர்த்தரை அறிந்து அவருக்குள் வளருங்கள். ஊழியத்திலும், விசுவாச சபை கூடுதல்களிலும் தவறாமல் பங்கு பெறுங்கள்.

வேதம் உங்களிடம் இல்லாவிட்டால், இங்கு தரவிறக்கம் செய்து கொள்ளலாம்

(கிறிஸ்து அறிமுகப்பதிவு 1)