ஏப்ரல் 2014 வாக்குத்தத்தம் - கர்த்தர் மேல் நம்பிக்கை வைத்து கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான் - எரேமியா 17:7

Tuesday, 1 April 2014

யோசேப்பு கனிதரும் செடி - இம்மாத நற்செய்தி


ஒரு உழவன் தன் நிலத்தை பயிரிட்டு, நீர்ப்பாய்ச்சி, ஏற்ற காலத்தில் அறுப்பது போல இயேசுவும் மண்ணால் உண்டாக்கப்பட்ட‌ நம்மை பயன்படுத்துகிறார். அவரது சித்தத்திற்கு நம்மை ஒப்புக் கொடுக்கும் போது, மண்ணான நம்மை பயன்படுத்துவார், நம் நிலம் விதைக்கப்படும், தண்ணீர் பாய்ச்சப்படும், விதை முளைத்து மரமாகி பூத்துக் குலுங்கும், காய்த்து கனி கொடுக்கும்... கர்த்தரின் கரத்தில் தன் வாழ்வை ஒப்புக்கொடுக்கும் எந்த மனிதனும் ஏற்றுக் காலத்தில் கனிதந்து இலை உதிராமல் இருக்கிற மரத்தை போலிருப்பான். அத்தகைய மனிதர்களுள் ஒருவர் தான் யோசேப்பு. "யோசேப்பு கனிதரும் செடி" என கர்த்தரே அவரைக் குறித்து நற்சாட்சி கொடுத்தார். யோசேப்புக்கு கிருபையளித்த தேவன் உங்களை கைவிடுவாரா? நிச்சயமாக இல்லை. கனி தருகிற மரமாக மாற நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒன்று தான், உங்கள் நிலத்தை அவரது கரத்தில் ஒப்புக் கொடுங்கள். நீங்களும் கனி தருவீர்கள். இதனைக் குறித்து பரிசுத்த வேதம் கூறுகின்ற சத்தியங்களைக் காணலாம்...

வேதவசனமே விதை...

இயேசு கிறிஸ்துவின் கரங்களில் நீங்கள் ஒப்புக் கொடுக்க வேண்டிய நிலம் உங்கள் இருதயமே. நம்மிடம் அவர் விரும்பும் ஒரே காரியம் அது மட்டும் தான். நம் பொன்னையோ, பொருளையோ விரும்புகிற தேவன் இயேசு கிறிஸ்து அல்ல‌. மாறாக நம்மையும் நம் இதயமென்னும் நிலத்தில் ஒரு சிறிய இடத்தையும் எதிர்நோக்கி காத்திருக்கும் தெய்வம் அவர். நீங்கள் அவருக்கு இடமளிப்பீர்களா? நம் மனதில் இயேசுவுக்கு இடமளிக்கும் போது, அவர் அதில் பிரவேசிக்கிறார், தன் வார்த்தைகளாகிய விதைகளை நம் மனதில் விதைக்கிறார். அந்த விதைகள் எல்லாம் ஜீவனுள்ள வார்த்தைகள். எந்த மனிதனையும் பரலோகத்தில் பிரவேசிக்க செய்யும் சத்திய வார்த்தைகள் அவை. அந்த விதைகள் நம் நிலத்தில் விதைக்கப்படுவது நமக்கு கிடைத்த பெரும் பாக்கியமே. இதனைக் குறித்து வேதம் அழகாய்ச் சொல்கிறது.

அழிவுள்ள வித்தினாலே அல்ல, என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவ வசனமாகிய அழிவில்லாத வித்தினாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டு இருக்கிறீர்களே - 1 பேதுரு 1:23

இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டு, அவரது வார்த்தைகளை கேட்டறிவதோடு நம் பங்கு முடிந்து விட்டதா? நிச்சயமாக இல்லை. எப்படி விதையானது நிலத்தில் விதைக்கப்பட்டவுன் நீர்ப்பாய்ச்சப்படுகிறதோ அது போலவே நம் மனதில் விதைக்கப்பட்ட வார்த்தைகளுக்கும் நீர்பாய்ச்ச வேண்டும்...

விசுவாசமே நீர்ப்பாய்ச்சும் நதி...

"என்னிடத்தில் விசுவாசமாய் இருக்கிறவன் எவனோ அவன் உள்ளத்தில் இருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும்" - யோவான் 7:38

தன்மேல் விசுவாசமாய் உள்ளவன் எவனோ அவன் உள்ளத்தில் ஜீவத்தண்ணீருள்ள நதிகள் புரண்டோடும் என்றார் இயேசு. எவ்வளவு உண்மையான வார்த்தைகள்...! நிச்சயமாக விசுவாசமில்லாத எந்த மனிதனாலும் தேவ வார்த்தைகளை தன் மனதில் காத்துக் கொள்ள முடியாது. எனவே, நம் மனதில் விதைக்கப்பட்ட வார்த்தைகள் செழித்து வளர அவைகளை நாம் மனப்பூர்வமாக விசுவாசிக்க வேண்டும். அப்பொழுது நம் மனதில் உள்ள ஊற்றுகள் திறக்கப்பட்டு ஜீவத்தண்ணீருள்ள நதிகள் புரண்டோடும். அதுவே கர்த்தர் உங்கள் மனதில் விதைத்த விதைகளுக்கு நீங்கள் பாய்ச்சுக்கின்ற தண்ணீர்...! நீங்கள் விசுவாசிப்பீர்களா? நாம் விசுவாசிக்கும் போது தான் அவரது வார்த்தைகள் நீர்ப்பெற்று நமக்குள் முளைக்கும், வேறூன்ற ஆரம்பிக்கும்...

அறுப்புக்கு ஒரு காலமுண்டு...

"ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு; வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொரு சமயமுண்டு....நட ஒரு காலமுண்டு, நட்டதைப் பிடுங்க ஒரு காலமுண்டு" - பிரசங்கி 3:1,2

துளிர்விட்ட விதைகள் செழித்து மரமாக காலம் பிடிப்பது போல நாம் கனிதர நமக்கும் ஒரு காலம் வைக்கப்பட்டுள்ளது. அந்த காலமே உங்களை திடப்படுத்தி புடமிட தேவன் தெரிந்து கொண்ட காலம். எப்படி விதைக்கப்பட்ட விதை திடமான மரமாகும் முன் வசந்தம், மழை, வெயில், குளிர் என பல காலங்களை கடந்து வருகிறதோ, அவ்வாறே நாமும் கனிதரும் முன் பல இன்ப துன்பங்களை கடந்து வர வேண்டும். இந்த காலத்தில் மனம் சோர்ந்த மனிதன் எவனும் வார்த்தையை விட்டு விலகுகிறான். விசுவாசத்தைக் காத்துக் கொண்டவனோ நிலைத்து வளர்கிறான்.

உஷ்ண காலம் வருகிற போது, தண்ணீர் பாய்ச்சப்படாத விதைகள் எல்லாம் கருகி போகும், தண்ணீர் பாய்ச்சப்பட்ட விதைகளோ உஷ்ணத்தைத் தாக்குப்பிடித்து வளரும். அப்படியே மனிதனும் தனக்கு இன்னல் துன்பங்கள் ஏற்படும் போது ஜீவத்தண்ணீராகிய தன் விசுவாசத்தைக் காத்துக் கொள்வது அவசியம். விசுவாசம் நம் மனதில் மறையும் போது, ஜீவநதி நின்றுபோகும், நம் மனதில் விதைக்கப்பட்ட வார்த்தைகளாகிய விதைகள் எல்லாம் கருகிப்போகும். இத்தகைய உள்ளங்களை கற்பாறையோடு கர்த்தர் ஒப்பிடுகிறார். கல்நெஞ்சம் கொண்ட மனிதன், உபத்திரவங்கள் ஏற்பட்ட உடனே கர்த்தர் மேல் கொண்ட விசுவாசத்தை உதறித் தள்ளுகிறான். உஷ்ணத்தை தாங்க விதைக்கு எவ்வாறு தண்ணீர் வேண்டுமோ, அப்படியே நமக்கும் வார்த்தையை காக்க விசுவாசம் வேண்டும். எனவே எக்காலத்திலும் உங்களுக்குள் உள்ள விசுவாசத்தை விடாதீர்கள். இதனைக் குறித்து பரிசுத்த வேதாகமம் கூறும் இரு பகுதிகளைப் இப்போது காணலாம்.

உஷ்ணத்தில் கருகிப் போன விதைகள்...
"வெயில் ஏறின போதோ, தீய்ந்து போய், வேரில்லாமையால் உலர்ந்து போயிற்று. அப்படியே, வசனத்தைக் கேட்டவுடனே அதைச் சந்தோஷத்தோடு ஏற்றுக் கொண்டும், தங்களுக்குள்ளே வேர் கொள்ளாதபடியால், கொஞ்சக் கால மாத்திரம் நிலைத்து இருக்கிறார்கள், வசனத்தின் நிமித்தம் உபத்திரவமும் துன்பமும் உண்டானவுடனே இடறல் அடைகிறார்கள்; இவர்களே கற்பாறை நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள்" - மாற்கு 4:6,16,17

ஜீவத்தண்ணீரால் காக்கப்பட்ட விதைகள்...
"கர்த்தர் மேல் நம்பிக்கை வைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் தண்ணீர் அண்டையிலே நாட்டப்பட்டதும் கால்வாய் ஓரமாகத் தன் வேர்களை விடுகிறதும், உஷ்ணம் வருகிறதைக் காணாமல் இலை பச்சையாயிருக்கிறதும், மழைத் தாழ்ச்சியான வருஷத்திலும் வருத்தமின்றித் தப்பாமல் கனி கொடுக்கிறதுமான மரத்தைப் போலிருப்பான்" - எரேமியா 17:7,8

இவ்வாறே நம்மில் கர்த்தர் தன் வார்த்தையை விதைக்கிறார்... நம் இதயமே நிலம், அவர் வார்த்தையே விதை, நம் விசுவாசுமே ஜீவத்தண்ணீர், இன்னல் துன்பங்களே வெயிற் காலம். வெயிற் காலத்தில், விதைகளுக்கு நீர்பாய்ச்சினால் அவை செழித்து வளரும், தப்பாமல் கனிக் கொடுக்கும் நல்ல மரமாகும். எந்த மனிதனையும் பரிசுத்தமாக்கும் நற்பண்புகளே அதன் கனிகள்...

கலாத்தியர் 5:22,23 "ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்..."

தேவன் நம் எல்லாரிலும் விதைக்க விரும்புகிறார். விதைக்கப்பட்ட விதைகளை நாம் காத்துக் கொள்ளும் போது கனிக் கொடுப்போம். யோசேப்பு மட்டுமல்ல, விதைகளைக் காத்துக் கொண்ட எவனும் கனிதரும் செடி ஆவான். நமக்கு ஏற்படும் வெயிற்காலம் யோசேப்புக்கு நேரிடாமல் அல்ல. நிலம், விதை, நீர், வெயில், கனி என எல்லா காரியங்களையும் கடந்து வந்தவர் தான் யோசேப்பு. அடிமையாய் விற்கப்பட்டவர், இறந்தவனாக எண்ணி மறக்கப்பட்டவர்... வீண்பழி சுமந்தார், சிறைசென்று தீங்கு அனுபவித்தார், நன்றி மறக்கப்பட்டார். பதினைந்து ஆண்டுகளாய் வெயிற்காலத்தை மட்டுமே கண்டவர் யோசேப்பு. ஆனால் எப்படி கனி கொடுத்தார்? ஜீவத்தண்ணீராகிய விசுவாசம் அவரில் இருந்தது.

இந்த காலமே அவரை புடமிட தேவன் தெரிந்துகொண்ட காலம். வெயில் ஓய்ந்த பின், அவரில் அன்பும் தயவும் சாந்தமும் சமாதனமும் நிலைபெற்று இருந்தன, தனக்கு துரோகம் இழைத்தவர்களையும் அரவணைத்துக் கொண்டார்... நீடியபொறுமையும் விசுவாசமும் இருந்தன, இறுதி வேளை முடிய கர்த்தர் மேல் நம்பிக்கையாய் இருந்தார்... நற்பண்பும் இச்சையடக்கமும் இருந்தன, வேசித்தனத்தை விட்டு விலகி ஓடினார்... சந்தோஷம் இருந்தது, பார்வோனுக்கும் எகிப்து தேசத்திற்கும் பிரதானியாய் இருந்தார், தன்னை தேடி வந்தவர்களுக்கெல்லாம் விதைகளை அள்ளி அள்ளி கொடுத்தார்...!

யோசேப்பு கர்த்தருக்கு கனிதரும் செடி! நீங்கள் கனிகொடுப்பீர்களா...?

No comments:

Post a Comment

"என் வாய் கர்த்தரின் துதியைச் சொல்வதாக" - சங்கீதம் 145:21