ஏப்ரல் 2014 வாக்குத்தத்தம் - கர்த்தர் மேல் நம்பிக்கை வைத்து கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான் - எரேமியா 17:7
Showing posts with label சிறுகதைகள். Show all posts
Showing posts with label சிறுகதைகள். Show all posts

Tuesday, 25 February 2014

நமக்குள்ள பங்கை நாம் அறியும் போது நம் வாழ்வு அர்த்தமுள்ளதாகிறது


வழக்கம் போல அந்த‌ குயவன் அன்று தன் வேலையைத் தொடங்கினான். களிமண்ணை எடுத்து வந்து அதை சுத்தமாகச் சலித்து, தேவையில்லாத குப்பைகளையும், கற்களையும், இலைச் செருகுகளையும் அதிலிருந்து எடுத்துப் போட்டான். பின்பு, தண்ணீரைப் பதமாக ஊற்றி, நன்றாய் பிசைந்து அழகான பாத்திரமாய் அதை வனைந்தான். வனைந்த பாத்திரத்தை நெருப்பில் சுட்டான், அப்போது அது உறுதியானது. நல்ல வழுவழுப்போடு திடமான பாத்திரமாய் இருந்தது, எந்த பிசகும் அதில் இல்லை. செய்ய வேண்டிய வேலைகள் எல்லாம் முடிந்த பின்பு, அப்பாத்திரத்தைச் சந்தைக்கு கொண்டு வந்தான். ஒரு பெண் அதனை விரும்பி நல்ல விலைக்கு பெற்றுக் கொண்டாள். தன் கூடையில் வைத்து தலைமேல் சுமந்து கொண்டு வீட்டை நோக்கிச் சென்றாள்.

கூடையில் வைக்கப்பட்ட பாத்திரம் அங்கும் இங்கும் மோதியது, தாளமிட்டுக் கொண்டே அந்த பெண்ணோடு வேறிடம் நோக்கிச் சென்றது. தன் தாள ஓசையைக் கேட்டு அதனால் இரசிக்காமல் இருக்க முடியவில்லை. தன்னை நேசித்தது, தன் தாளத்தை நேசித்தது, ஆனால் அதனிடம் ஒரு இனம்புரியாத வெறுமை...

அந்த பெண் தன் வீட்டை அடைந்தாள். தன் பழைய பாத்திரங்களோடு, இப்புதிய‌ பாத்திரத்தையும் வைத்தாள். தன்னைப் போன்ற‌ பலரைக் கண்டு அவைகளை நேசித்தது. அவர்களைக் காட்டிலும் தான் பளபளப்போடும் திடமோடும் உள்ளதை நினைத்து தன்னை மெச்சிக் கொண்டது. ஆனால் அந்த வெறுமை மட்டும் அதனை விட்டு நீங்கவில்லை...

அப்பெண்ணும் சில நாட்களாக‌ தன் பழைய பாத்திரங்களையே பயன்படுத்தி வந்தாள். சிலவற்றில் தண்ணீர் நிரப்பி வைத்தாள், சிலவற்றை சமைக்கப் பயன்படுத்தினாள். புது பாத்திரத்திற்கான நேரமோ இன்னும் வரவில்லை. அவளிடம் தன் நண்பர்கள் படும் அத்தனை பாடுகளையும் அமைதியாக கண்டுகொண்டு இருந்தது. வேலை முடிந்த பின், அப்பெண் தன் பாத்திரங்களை கழுவி கவிழ்த்துவிட்டு போனாள். புதுபாத்திரத்தால் இப்போது நலம் விசாரிக்காமல் இருக்க முடியவில்லை. தன் நண்பர்களிடம் அவர்கள் பட்ட பாட்டைச் சொல்லி பெருமூச்சு விட்டது. அதனைக் கேட்டதும் அவைகள் சிரித்தன, குயவன் நம்மை வனைந்ததே அதற்குத்தான் என்றன. புதுபாத்திரத்தால் இதனை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தன் பளபளப்பு என்றுமே மாறாது என்றது, தனக்கு அவர்கள் நிலை நேரிடப் போவ‌தில்லை என்று தன்னைத் தானே தேற்றிக் கொண்டது. ஆனால் அந்த வெறுமையான உணர்வு இன்னும் அதனை விட்டு நீங்கவில்லை. அதற்கும் அக்காரணம் புரியவில்லை.

நாட்கள் சென்றன. புதுபாத்திரத்திற்கான நாள் வந்தது. அப்பெண் அதனை எடுத்து அடுப்பில் வைத்தாள், நெருப்பு மூட்டினாள்... பாத்திரம் சூடானது, பளபளப்பு கருகிப் போனது... என் நண்பர்கள் சொல்லியது உண்மைதானா? என் பளபளப்பு அவ்வளவுதானா? இவள் என்னை என்ன செய்யப் போகிறாள்?... புதுபாத்திரத்திற்கு பல விதமான‌ யோசனைகள். யோசிக்க யோசிக்க அவள் அதில் தண்ணீர் ஊற்றினாள். பாத்திரம் தண்ணீரால் நிரம்பியது, உடனே, ஓர் மாற்றம்... நல்ல இதமான மாற்றம்...

அப்போது தான் தன் வெறுமை தன்னை விட்டு காணாமல் போனது அதற்கு புரிந்தது. "என் பளபளப்பு நிலையல்ல, குயவன் வனைந்த நோக்கந்தான் எனக்கு நிலையானது, என் வெறுமையை நீக்கவல்லது" என்றது. அந்த நேரமே தன் நண்பரோடு சேர்ந்து கொண்டது, குயவன் தனக்களித்த வேலையைச் சந்தோஷமாய் செய்த‌து. வெறுமை நீங்கின தன் வாழ்வை நேசித்தது...

இது தான் வேதம் கூறுகின்ற மனித வாழ்க்கை... இறைவன் படைத்த அனைத்து உயிர்களைக் காட்டிலும் மனிதர்களாகிய நாம் சிறந்தவர்கள். பிற உயிர்களைப் படைக்கும் போது, "உண்டாகட்டும்" என்றவ‌ர் மனிதரைப் படைக்கும் போது மண்ணைப் பிசைந்தார், தன் ஜீவனை அவனுக்கு கொடுத்தார். எந்த உயிருக்கும் இல்லாத சுய அறிவை மனிதர்களுக்கு மட்டும் கொடுத்தார். இறைவனின் கரத்தால் படைக்கப்பட்ட ஒரே உயிர் மனிதன் தான். தேவ சாயலில் படைக்கப்பட்ட ஒரே உயிரும் மனிதன் தான். அவர் உண்டாக்கின எல்லாவற்றையும் பெற்றுக் கொண்டவன் மனிதன் தான், அனைத்திலும் அதிகமாய் நேசிக்கப்பட்டவன் மனிதன் தான்... அவன் பாவத்தில் விழுந்து, அவரை விட்டு விலகின போதும் தேவன் அவனை நேசித்தார், "ஆதாமே, நீ எங்கே இருக்கிறாய்?" என்று ஓடி வந்தார்.

குயவன் வனைந்த பாத்திரம் போலவே நாமும் படைக்கப்பட்டோம். நாம் படைக்கப்பட்ட நோக்கத்தை அறியும் வரை நம் வாழ்வில் உள்ள வெறுமைத் தீராது, நம் மனம் ஒன்றைத் தேடித் திரியும். அது என்ன என்று நமக்கு புரியாது. இந்த அனுபவத்தை பெறாத மக்கள் இருக்க மாட்டார்கள் என்றும் இச்சிந்தனையைத் தூண்டவே மனித மூளையில் "காட் ஸ்பாட்" என்ற பகுதி உள்ளதாகவும் அறிவியல் சொல்கிறது. மனிதர்களைத் தவிர்த்து வேறெந்த உயிரினத்திலும் இந்த பகுதி இல்லை. மனிதனின் வாழ்நாள் முழுவதும் இந்த பகுதி சிந்தனைகளைத் தூண்டிக் கொண்டே இருக்கும். இறைவன் இல்லை எனச் சாத்திப்பவர்களுக்கு காட் ஸ்பாட் அதிக ஆற்றலோடு செயல்படுகிறது. அதன் காரணமாகத் தான் இறைவனின்றி அண்டம் உருவாக வாய்ப்புண்டா என இம்மக்கள் தொடர்ந்து ஆராய்கின்றனர். இது இறைவன் நமக்கு வைக்கிற தேர்வு என்றே சொல்லலாம். தன்னை அறிந்துகொள்ள இச்சிந்தையை கொடுத்திருக்கிறார், தன்னை சுட்டிக் காட்டும் அற்புதங்களை படைப்பின் அதிசயங்களை விட்டு வைத்துள்ளார்.

ஏன் நம்மைப் படைத்தவரையும், நாம் படைக்கப்பட்ட நோக்கத்தையும் நம்மால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை? ஏனெனில் நாம் படைக்கப்பட்ட நோக்கத்தை விட பளபளப்பையே அதிகம் விரும்புகிறோம். சிற்றின்பம், இச்சை, பணம், மோகம், பேராசை என எதையும் இழக்க மனிதன் மறுக்கிறான். இவைகளே தன் மனதிற்கு தேவையான நிறைவை அளிக்க வல்லது என தன்னை தேற்றிக் கொள்கிறான். இத்தகைய எண்ணங்களைக் கொண்ட எந்த மனிதனாலும் பரிசுத்த தேவனை ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனெனில் தன் இச்சையை மறுக்கும் இறைவ‌னை அவன் மறுக்கிறான். என்ன மறுத்தாலும் "காட் ஸ்பாட்" தன் வேலையை விடுவதில்லை, அவனை சிந்திக்கச் சொல்லி தூண்டிக் கொண்டே இருக்கிறது... அதனால் என்ன? அதே வெறுமை...

இதற்கு என்ன தீர்வு? நமக்குள்ள பங்கை, நம்மை படைத்தவரை, நாம் படைக்கப்பட்ட நோக்கத்தை அறிய வேண்டும். அப்போது நம் மனம் நிரம்பி வழியும், தேவையற்ற வெறுமை நீங்கும், மனம் அமைதியில் பிரேவிசிக்கும். இதனைக் குறித்தே, "நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது; நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும்" என்று சொன்னார் இயேசு.

இறைவனின் அன்பில் நிலைத்து வாழவே நாம் தேவசாயலில் படைக்கப்பட்டோம். அந்த அன்பில் நிலைத்திருந்தால் தான் நம் உள்ளம் தேடித் திரியும் நிறைவை நாம் பெற முடியும். நமக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். இந்த அன்பை உணரும் வரை, மனிதன் பல சூழலைத் தாண்டி வருகிறான், அவைகளை நேசித்து மகிழ்கிறான், ஆனால் அவன் பாத்திரம் இன்னும் நிரம்பவில்லை. எச்சமயம் அவன் பாத்திரம் ஜீவத்தண்ணீரால் நிறைகிறதோ அன்றே அவனுக்கு சமாதானம் உண்டாகும், உள்ளம் நிறைவை பெறும், வாழ்க்கை இன்பமாகும்... உபத்திரவங்கள் வந்தாலும், தளராமல் முன்னேறிச் செல்வான், இறைவனை முழுமனதோடு நேசிப்பான், தன்னைப் போல் தனக்கடுத்தவரை நேசிப்பான், இலக்கை நோக்கி ஓடுவான், அதைக் கண்டடைவான்...

அழகாய்ச் சொன்னார் பவுல்,
"...நான் இப்பொழுதே பானபலியாக வார்க்கப்பட்டுப் போகிறேன்; நான் தேகத்தை விட்டுப் பிரியும் காலம் வந்தது. நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக் கொண்டேன். இது முதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டு இருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்கு தந்தருளுவார்; எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதை தந்தருளுவார்...."

நீங்கள் நிரம்பிவிட்டீர்களா...?

Sunday, 5 January 2014

முட்களுக்கும் நன்றி சொல்வேன் இயேசுவே...

2013 முடிந்து புத்தாண்டுக்குள் நுழைந்த நேரம்... புதிய நாளை காணசெய்த கடவுளுக்கு நன்றி செலுத்த புரப்பட்டாள் ஜெனி. மனதில் பாடிக்கொண்டு, தேவாலயத்துக்கு விரைந்து கொண்டிருந்த ஜெனியின் முகம் மலர்ந்தது. அங்கே அவளது சிறுவயது தோழி சுசி வந்து கொண்டிருந்தாள். "ஆனால் என்னாச்சு சுசிக்கு?, ஏன் சோர்ந்து போய் வருகிறாள்?" என ஒரு நிமிடம் திகைத்தாள் ஜெனி. சுசியோ நெடுநாள் கழித்து சந்தித்த தன் தோழியை புன்முறுவலோடு நெருங்கினாள். ஆனால், மனதில் உள்ள கவலையை அவளது முகமே காட்டி கொடுத்தது. மனந்தாங்காமல், தோழியிடம் தன் கசப்புகளை கொட்டித்தள்ளினாள். இந்த புத்தாண்டு வேளையில் தன் கரங்களில் அழகிய குழந்தையோடு வந்திருக்க வேண்டியவள் சுசி. ஆனால், நான்கு மாதம் முன்பு நடந்த ஒரு சிறிய விபத்தில் அவளது குழந்தை அவள் கருவிலேயே மடிந்துவிட்டது. இது தவிர அவளது கணவன் வேலை செய்துவந்த அலுவல் திவாலாகி மூடும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறது. துயரத்திற்கு சுசியின் இல்லத்தில் எந்த குறையும் இப்போது இல்லை. ஜெனியிடம் இருந்து ஆறுதலான வார்த்தைகள் வரலாம் என முகம் நோக்கிப் பார்த்தாள் சுசி. "பிறர் படும் பாடுகளையும் புரிந்து கொண்டு வாழ்வில் நாம் தேற வேண்டும் என கடவுள் வகுத்த சோதனைகள் தான் இந்த துயரங்கள் எல்லாம்" என்றாள் ஜெனி. ஆனால் இந்த வார்த்தைகள் சுசிக்கு இன்னும் விரக்தியை தான் உண்டாக்கின‌... "இவளுக்கு எங்கு தெரியப்போகிறது என் வேதனை! குழந்தையை பறிகொடுத்தவள் நான்தானே!  இவளைப் போல கடவுளுக்கு நன்றி சொல்ல நான் எப்படி ஆலயத்துக்கு செல்ல முடியும்? சரி நன்றி சொல்றேன், ஆனால் எதற்காக நன்றி சொல்ல? கருவைப் பறித்த விபத்து என் உயிரை பறிக்காததற்கா?" என மனதில் இன்னும் சிந்தனைகள் எழும்ப, சுசி இடம் விட்டு அகன்றாள்.

அவளது கால்கள் வழிமாறிச் ஒரு பூக்கடையை அடைந்தது. அவளது மனம் வாடிக் கிடப்பத்தை புரிந்து கொண்டு, "உனக்கு தெரியுமாமா? பூக்களே நமக்கு ஒரு பாடம் தான், உனக்கு என்ன பூ வேணும்?" என பூக்காரி கேட்டாள். "கடந்த சில நாளா எல்லாமே தவறா தாங்க இருக்கு" என தொடர்பே இல்லாமல் சுசியிடமிருந்து பதில் வந்தது. இவர்கள் இப்படி பேசிக் கொண்டிருக்கும் போதே இன்னொரு பெண் அப்பூக்கடையை நெருங்கினாள். "அடடே வாங்க, எல்லாம் ரெடியா எடுத்து வச்சுட்டேன்" என சில ரோஜா செடி தண்டுகளை எடுத்து நீட்டினாள் பூக்காரி. "இதென்ன? பூவே இல்லாத முட்தண்டுகளை எடுத்து கொடுக்கறிங்க, அதையும் அவங்க பேசாம வாங்கிட்டு போறாங்களே" என சுசி வியப்போடு வினாவினாள்.

"அவங்களும் உன்ன மாறிதாம்மா, முகம்வாடிப்போய் இந்த கடைக்கு 3 வருசத்துக்கு முன்னாடி வந்தாங்க. கேட்டபிறகு தான், அவங்க அப்பா தவறிட்டாருனு தெரிஞ்சிது. பத்தாதுக்கு அவங்க மவன்வேற குடிபழக்கத்து ஆளாகி கிடக்கிறான். அந்த புத்தாண்டுக்கு கடவுளுக்கு நன்றி சொல்ற அளவுக்கு அவங்க குடும்பத்துல எந்த நன்மையும் நடக்கலனு சொன்னாங்க... அதே வருசம் தான் என் கணவனும் தவறியிருந்தாரு. எனக்கு புள்ளக்குட்டி இல்ல. அவரு போன பிறகு நான் இந்த கடைய வச்சு புழப்பு நடத்திட்டு வரேன்..." என்றாள் பூக்காரி. "அட பாவமே, ஆனா எதுக்குமா பூ இல்லாத முட்தண்ட கொடுக்கறிங்க?" என சுசி மேலும் வினவினாள்.


"துன்பமாச்சு துயரமாச்சு கடவுளுக்கு நன்றி சொல்ல தவறக்கூடாது. அதுக்கு அடையளாம முட்களை பரிமாறிக்கிறது எங்களுக்குள்ள ஒரு சின்ன பழக்க‌ம்... முட்களுக்காகவும் நன்றி சொல்ல கத்துகிட்டோமா, அவ்வளவு தான்"....

பூக்காரி விசித்திரமாக பேசினாள். "முட்களுக்காகவா?" என சுசியின் புருவங்கள் உயர்ந்தன. 

"எனக்கு எத்தனையோ நன்மைகள கடவுள் கொடுத்தாரு, அதுக்காக அவருக்கு நான் அவருக்கு எந்த நன்றியும் சொன்னதில்ல. எதாவது கவல ஏற்பட்டா மட்டும் உடனே முறயிடுவேன், ஆனா இன்னைக்கு முட்களுக்காகவும் நன்றி சொல்ல கத்துக்குட்டேன். சோதனை வேலைல தான் நாம கடவுளோட ஆறுதல உண்மையிலேயே பெறோம், நாமும் துன்பத்துல வாடுற பிறர ஆற்றி தேற்றனும்னு அந்த நேரத்துல தான் கத்துக்கிறோம்" என பூக்காரி சொல்லி முடித்தாள். "இதே வார்த்தைய தான் என் தோழி ஒருத்தியும் சொன்னா, எனக்கு கடவுளோட ஆறுதல் தேவ இல்லங்க, என் வேதன எனக்குத் தான் தெரியும்" என சுசி மீண்டும் விரக்தியோடு பேச இன்னொரு கை முட்தண்டுகளை தேடி வந்தது. பூக்காரி அதே போல சில முட்தண்டுகளை எடுத்து புன்முறுவலோடு கொடுத்தனுப்பினாள்.

"என்னாச்சு இவங்களுக்கு? எப்படி இவங்களால தங்களுக்கு கிடச்ச வேதனைகள ஏத்துக்கிட்டு கடவுள வேற நேசிக்க முடியுது?" என சுசி குழம்பினாள். அவள் திகைத்து நிற்பதை கண்ட பூக்காரி, "இங்க பாரும்மா, முட்கள் தான் பூவ இன்னும் ரசிக்க வைக்கிது, அதே மாறி தான் நமக்கு வரும் சோதனை. வாழ்க்கையில சோதனையே இல்லாட்டி, அது திகட்டி போகும், சந்தோசத்துக்கு அர்த்தத்த கொடுக்கறதே சோகந்தான், சோகத்துல தான் கடவுள் பிறர ஆற்றிதேற்ற அளவுக்கு தைரியத்த கத்துத்தராரு... இயேசு முட்கள வெறுக்கலம்மா, நம‌க்காக முள்முடி சுமப்பத நினைச்சு அன்போட ஏத்துக்கிட்டாரு... அவர் ஏத்துக்கிட்ட முள்ளு நம்ம‌மேல கொண்ட அன்ப காட்டுது, அதே மாறி எங்க அன்ப காட்ட, கடவுள தூசிக்காம முட்கள ஏத்துக்கிறோம்... முட்களுக்காக கடவுள வெறுக்காதம்மா" என்றாள்.

சுசியின் கண்களில் இருந்து கண்ணீர்த் துளிகள் விழுந்தன‌... "எனக்கும் சில முட்தண்டுகள தாங்க" என கண்களில் கண்ணீரோடும், இதழ்களில் சிரிப்போடும் கேட்டாள்...

முட்களுக்கும் நன்றி சொல்வேன் இயேசுவே...