ஏப்ரல் 2014 வாக்குத்தத்தம் - கர்த்தர் மேல் நம்பிக்கை வைத்து கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான் - எரேமியா 17:7
Showing posts with label நற்செய்தி. Show all posts
Showing posts with label நற்செய்தி. Show all posts

Tuesday, 1 April 2014

யோசேப்பு கனிதரும் செடி - இம்மாத நற்செய்தி


ஒரு உழவன் தன் நிலத்தை பயிரிட்டு, நீர்ப்பாய்ச்சி, ஏற்ற காலத்தில் அறுப்பது போல இயேசுவும் மண்ணால் உண்டாக்கப்பட்ட‌ நம்மை பயன்படுத்துகிறார். அவரது சித்தத்திற்கு நம்மை ஒப்புக் கொடுக்கும் போது, மண்ணான நம்மை பயன்படுத்துவார், நம் நிலம் விதைக்கப்படும், தண்ணீர் பாய்ச்சப்படும், விதை முளைத்து மரமாகி பூத்துக் குலுங்கும், காய்த்து கனி கொடுக்கும்... கர்த்தரின் கரத்தில் தன் வாழ்வை ஒப்புக்கொடுக்கும் எந்த மனிதனும் ஏற்றுக் காலத்தில் கனிதந்து இலை உதிராமல் இருக்கிற மரத்தை போலிருப்பான். அத்தகைய மனிதர்களுள் ஒருவர் தான் யோசேப்பு. "யோசேப்பு கனிதரும் செடி" என கர்த்தரே அவரைக் குறித்து நற்சாட்சி கொடுத்தார். யோசேப்புக்கு கிருபையளித்த தேவன் உங்களை கைவிடுவாரா? நிச்சயமாக இல்லை. கனி தருகிற மரமாக மாற நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒன்று தான், உங்கள் நிலத்தை அவரது கரத்தில் ஒப்புக் கொடுங்கள். நீங்களும் கனி தருவீர்கள். இதனைக் குறித்து பரிசுத்த வேதம் கூறுகின்ற சத்தியங்களைக் காணலாம்...

வேதவசனமே விதை...

இயேசு கிறிஸ்துவின் கரங்களில் நீங்கள் ஒப்புக் கொடுக்க வேண்டிய நிலம் உங்கள் இருதயமே. நம்மிடம் அவர் விரும்பும் ஒரே காரியம் அது மட்டும் தான். நம் பொன்னையோ, பொருளையோ விரும்புகிற தேவன் இயேசு கிறிஸ்து அல்ல‌. மாறாக நம்மையும் நம் இதயமென்னும் நிலத்தில் ஒரு சிறிய இடத்தையும் எதிர்நோக்கி காத்திருக்கும் தெய்வம் அவர். நீங்கள் அவருக்கு இடமளிப்பீர்களா? நம் மனதில் இயேசுவுக்கு இடமளிக்கும் போது, அவர் அதில் பிரவேசிக்கிறார், தன் வார்த்தைகளாகிய விதைகளை நம் மனதில் விதைக்கிறார். அந்த விதைகள் எல்லாம் ஜீவனுள்ள வார்த்தைகள். எந்த மனிதனையும் பரலோகத்தில் பிரவேசிக்க செய்யும் சத்திய வார்த்தைகள் அவை. அந்த விதைகள் நம் நிலத்தில் விதைக்கப்படுவது நமக்கு கிடைத்த பெரும் பாக்கியமே. இதனைக் குறித்து வேதம் அழகாய்ச் சொல்கிறது.

அழிவுள்ள வித்தினாலே அல்ல, என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவ வசனமாகிய அழிவில்லாத வித்தினாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டு இருக்கிறீர்களே - 1 பேதுரு 1:23

இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டு, அவரது வார்த்தைகளை கேட்டறிவதோடு நம் பங்கு முடிந்து விட்டதா? நிச்சயமாக இல்லை. எப்படி விதையானது நிலத்தில் விதைக்கப்பட்டவுன் நீர்ப்பாய்ச்சப்படுகிறதோ அது போலவே நம் மனதில் விதைக்கப்பட்ட வார்த்தைகளுக்கும் நீர்பாய்ச்ச வேண்டும்...

விசுவாசமே நீர்ப்பாய்ச்சும் நதி...

"என்னிடத்தில் விசுவாசமாய் இருக்கிறவன் எவனோ அவன் உள்ளத்தில் இருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும்" - யோவான் 7:38

தன்மேல் விசுவாசமாய் உள்ளவன் எவனோ அவன் உள்ளத்தில் ஜீவத்தண்ணீருள்ள நதிகள் புரண்டோடும் என்றார் இயேசு. எவ்வளவு உண்மையான வார்த்தைகள்...! நிச்சயமாக விசுவாசமில்லாத எந்த மனிதனாலும் தேவ வார்த்தைகளை தன் மனதில் காத்துக் கொள்ள முடியாது. எனவே, நம் மனதில் விதைக்கப்பட்ட வார்த்தைகள் செழித்து வளர அவைகளை நாம் மனப்பூர்வமாக விசுவாசிக்க வேண்டும். அப்பொழுது நம் மனதில் உள்ள ஊற்றுகள் திறக்கப்பட்டு ஜீவத்தண்ணீருள்ள நதிகள் புரண்டோடும். அதுவே கர்த்தர் உங்கள் மனதில் விதைத்த விதைகளுக்கு நீங்கள் பாய்ச்சுக்கின்ற தண்ணீர்...! நீங்கள் விசுவாசிப்பீர்களா? நாம் விசுவாசிக்கும் போது தான் அவரது வார்த்தைகள் நீர்ப்பெற்று நமக்குள் முளைக்கும், வேறூன்ற ஆரம்பிக்கும்...

அறுப்புக்கு ஒரு காலமுண்டு...

"ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு; வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொரு சமயமுண்டு....நட ஒரு காலமுண்டு, நட்டதைப் பிடுங்க ஒரு காலமுண்டு" - பிரசங்கி 3:1,2

துளிர்விட்ட விதைகள் செழித்து மரமாக காலம் பிடிப்பது போல நாம் கனிதர நமக்கும் ஒரு காலம் வைக்கப்பட்டுள்ளது. அந்த காலமே உங்களை திடப்படுத்தி புடமிட தேவன் தெரிந்து கொண்ட காலம். எப்படி விதைக்கப்பட்ட விதை திடமான மரமாகும் முன் வசந்தம், மழை, வெயில், குளிர் என பல காலங்களை கடந்து வருகிறதோ, அவ்வாறே நாமும் கனிதரும் முன் பல இன்ப துன்பங்களை கடந்து வர வேண்டும். இந்த காலத்தில் மனம் சோர்ந்த மனிதன் எவனும் வார்த்தையை விட்டு விலகுகிறான். விசுவாசத்தைக் காத்துக் கொண்டவனோ நிலைத்து வளர்கிறான்.

உஷ்ண காலம் வருகிற போது, தண்ணீர் பாய்ச்சப்படாத விதைகள் எல்லாம் கருகி போகும், தண்ணீர் பாய்ச்சப்பட்ட விதைகளோ உஷ்ணத்தைத் தாக்குப்பிடித்து வளரும். அப்படியே மனிதனும் தனக்கு இன்னல் துன்பங்கள் ஏற்படும் போது ஜீவத்தண்ணீராகிய தன் விசுவாசத்தைக் காத்துக் கொள்வது அவசியம். விசுவாசம் நம் மனதில் மறையும் போது, ஜீவநதி நின்றுபோகும், நம் மனதில் விதைக்கப்பட்ட வார்த்தைகளாகிய விதைகள் எல்லாம் கருகிப்போகும். இத்தகைய உள்ளங்களை கற்பாறையோடு கர்த்தர் ஒப்பிடுகிறார். கல்நெஞ்சம் கொண்ட மனிதன், உபத்திரவங்கள் ஏற்பட்ட உடனே கர்த்தர் மேல் கொண்ட விசுவாசத்தை உதறித் தள்ளுகிறான். உஷ்ணத்தை தாங்க விதைக்கு எவ்வாறு தண்ணீர் வேண்டுமோ, அப்படியே நமக்கும் வார்த்தையை காக்க விசுவாசம் வேண்டும். எனவே எக்காலத்திலும் உங்களுக்குள் உள்ள விசுவாசத்தை விடாதீர்கள். இதனைக் குறித்து பரிசுத்த வேதாகமம் கூறும் இரு பகுதிகளைப் இப்போது காணலாம்.

உஷ்ணத்தில் கருகிப் போன விதைகள்...
"வெயில் ஏறின போதோ, தீய்ந்து போய், வேரில்லாமையால் உலர்ந்து போயிற்று. அப்படியே, வசனத்தைக் கேட்டவுடனே அதைச் சந்தோஷத்தோடு ஏற்றுக் கொண்டும், தங்களுக்குள்ளே வேர் கொள்ளாதபடியால், கொஞ்சக் கால மாத்திரம் நிலைத்து இருக்கிறார்கள், வசனத்தின் நிமித்தம் உபத்திரவமும் துன்பமும் உண்டானவுடனே இடறல் அடைகிறார்கள்; இவர்களே கற்பாறை நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள்" - மாற்கு 4:6,16,17

ஜீவத்தண்ணீரால் காக்கப்பட்ட விதைகள்...
"கர்த்தர் மேல் நம்பிக்கை வைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் தண்ணீர் அண்டையிலே நாட்டப்பட்டதும் கால்வாய் ஓரமாகத் தன் வேர்களை விடுகிறதும், உஷ்ணம் வருகிறதைக் காணாமல் இலை பச்சையாயிருக்கிறதும், மழைத் தாழ்ச்சியான வருஷத்திலும் வருத்தமின்றித் தப்பாமல் கனி கொடுக்கிறதுமான மரத்தைப் போலிருப்பான்" - எரேமியா 17:7,8

இவ்வாறே நம்மில் கர்த்தர் தன் வார்த்தையை விதைக்கிறார்... நம் இதயமே நிலம், அவர் வார்த்தையே விதை, நம் விசுவாசுமே ஜீவத்தண்ணீர், இன்னல் துன்பங்களே வெயிற் காலம். வெயிற் காலத்தில், விதைகளுக்கு நீர்பாய்ச்சினால் அவை செழித்து வளரும், தப்பாமல் கனிக் கொடுக்கும் நல்ல மரமாகும். எந்த மனிதனையும் பரிசுத்தமாக்கும் நற்பண்புகளே அதன் கனிகள்...

கலாத்தியர் 5:22,23 "ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்..."

தேவன் நம் எல்லாரிலும் விதைக்க விரும்புகிறார். விதைக்கப்பட்ட விதைகளை நாம் காத்துக் கொள்ளும் போது கனிக் கொடுப்போம். யோசேப்பு மட்டுமல்ல, விதைகளைக் காத்துக் கொண்ட எவனும் கனிதரும் செடி ஆவான். நமக்கு ஏற்படும் வெயிற்காலம் யோசேப்புக்கு நேரிடாமல் அல்ல. நிலம், விதை, நீர், வெயில், கனி என எல்லா காரியங்களையும் கடந்து வந்தவர் தான் யோசேப்பு. அடிமையாய் விற்கப்பட்டவர், இறந்தவனாக எண்ணி மறக்கப்பட்டவர்... வீண்பழி சுமந்தார், சிறைசென்று தீங்கு அனுபவித்தார், நன்றி மறக்கப்பட்டார். பதினைந்து ஆண்டுகளாய் வெயிற்காலத்தை மட்டுமே கண்டவர் யோசேப்பு. ஆனால் எப்படி கனி கொடுத்தார்? ஜீவத்தண்ணீராகிய விசுவாசம் அவரில் இருந்தது.

இந்த காலமே அவரை புடமிட தேவன் தெரிந்துகொண்ட காலம். வெயில் ஓய்ந்த பின், அவரில் அன்பும் தயவும் சாந்தமும் சமாதனமும் நிலைபெற்று இருந்தன, தனக்கு துரோகம் இழைத்தவர்களையும் அரவணைத்துக் கொண்டார்... நீடியபொறுமையும் விசுவாசமும் இருந்தன, இறுதி வேளை முடிய கர்த்தர் மேல் நம்பிக்கையாய் இருந்தார்... நற்பண்பும் இச்சையடக்கமும் இருந்தன, வேசித்தனத்தை விட்டு விலகி ஓடினார்... சந்தோஷம் இருந்தது, பார்வோனுக்கும் எகிப்து தேசத்திற்கும் பிரதானியாய் இருந்தார், தன்னை தேடி வந்தவர்களுக்கெல்லாம் விதைகளை அள்ளி அள்ளி கொடுத்தார்...!

யோசேப்பு கர்த்தருக்கு கனிதரும் செடி! நீங்கள் கனிகொடுப்பீர்களா...?

Sunday, 16 March 2014

உன்னைச் சொந்தங் கொண்டாடும் உன்னதர்...


நம்மை அளவில்லாமல் நேசிக்க இயேசு கிறிஸ்துவை விட மேலான தெய்வம் இல்லை என்றே சொல்லலாம். பரிசுத்த வேதாகமத்தை மனதார விசுவாசித்து படிக்கும் போது இயேசுவின் அன்பிலிருந்து நம்மால் தப்ப முடியாது. தன் தூய அன்பால், வேத வார்த்தைகளால் நம் மனதாய் எளிதாய் கொள்ளையிட்டு விடுவார். இது எப்படி சாத்தியமாகிறது? ஏன் கிறிஸ்துவுக்குள் வந்தவன் தேவனை அதிகமாக உரிமை பாராட்டுகிறான்? தன் தேவனை "அப்பா பிதாவே" என்று அன்போடு அழைத்து, நேசித்து மகிழ அவனால் எப்படி முடிகிறது? ஏன் என்று நீங்கள் சிந்தித்தது உண்டா?

ஏனெனில் இயேசு கிறிஸ்து நமக்காக அந்தளவு அன்பும் பரிவும் கொண்டிருக்கிறார். வேதம் சொல்வது போல, நாம் அவரை முதலாய் நேசிக்கவில்லை, அவர் நம்மை முதலாய் நேசித்து நமக்காய் அவரை ஒப்புக் கொடுத்தபடியினால் நாம் இவ்வாறு தேவ அன்பில் தத்தளித்து மகிழ்கிறோம். இயேசு கிறிஸ்து காட்டிய பாதை பிற வழிகளில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. தேவனை நமக்கு எல்லாரும் எஜமானனாக, சிங்காசனத்தில் வீற்றிருக்கும் அதிபதியாக சித்தரிப்பதை விட ஒரு நல்ல தாயாக, நல்ல தந்தையாக, நல்ல சகோதரனாக, ஆத்ம நேசராக, உயிர்த் தோழனாக பரிசுத்த வேதம் சித்தரிக்கிறது. இவ்வாறு நம்மை மகனாக, மகளாக, மணப்பெண்ணாக, தோழனாக அழைத்து மகிழும் தேவன் இயேசு கிறிஸ்துவை அன்றி வேறு யாருண்டு?

நம்மை ஒரு வேலையாளாக, தன் கரத்தின் சிருஷ்டியாக, தன் மனம் விரும்பும் காரியத்தை மட்டும் செய்ய பயன்படுத்தும் ஒரு அடிமையாக அவர் எண்ணாமல், நம்மை அவரது அன்பிற்கு முழு தகுதியுடையவர்களாக‌ காண்கிறார். அதன் காரணமாகத் தான், "தேவன் நம் கண்ணீரைத் துடைப்பார்", "மார்போடு அணைப்பார்", "கரத்தை பிடித்து வழிநடத்துவார்", "முத்தமிடுவார்" என பல அன்புமிகுந்த வார்த்தைகளை வேதம் கூறுகிறது. தேவனுக்கும் மனிதனுக்கும் இத்தகைய பாசப் பரிமாறுதல்களை வேறெந்த நூல்களிலும் காண முடியாது. எனவே ஒரு எஜமானிடம் ஒரு அடிமை கரமேந்தி நிற்பது போல, வெறும் கட்டளையை ஏற்று நடக்கும் ஒரு வேலைக்காரனாக நாம் தேவனிடத்தில் செல்லத் தேவையில்லை. "அப்பா பிதாவே" என்று அழைக்கும் உரிமையோடு, அன்போடு அவரிடத்தில் ஜெபித்து மகிழலாம், அனுதினமும் அவரது பிரசன்னத்தில் ஆனந்தமாக நம் வாழ்க்கையை நடத்தலாம். இத்தகைய சந்தோஷத்தை உரிமையை நமக்கு ஈந்தவர் இயேசு கிறிஸ்து மட்டுமே...

வேதம் கூறும் இன்னொரு அழகிய செய்தி இதுதான். மனிதன் தேவனை நேசிக்காவிட்டாலும், கர்த்தர் அவனை நேசிப்பதை விடுவதில்லை. மனிதன் பாவம் செய்து அவரது சமூகத்தில் இருந்து விலகி மறைந்து கொண்டாலும், தேவன் அவனை தேடிக் கொண்டு கவலையோடு அலைந்து திரிகிறார். ஆதாம் பாவமிழைத்து கர்த்தரின் கண்களில் இருந்து மரங்களுக்குள் ஒளிந்தாலும் தேவன் அவனை சத்தமிட்டு அழைத்து கொண்டு தோட்டத்திற்குள் வருகிறார். பாவமிழைத்த போதிலும் நம்மைத் தேடி வந்த தெய்வம் அவர் ஒருவரே. நாம் பாவிகளான போதிலும் நமக்காய் இவ்வுலகில் மனிதனாக பிறந்தவர் அவர் ஒருவர் தான். நம் அன்பைப் பெற, நாம் அந்த அன்பில் நிலைத்திருக்க சிலுவையை சுமந்த தெய்வம் இயேசு ஒருவர் மட்டுமே. "நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புதலுக்கு அழைக்க வந்தேன்" என்றவர், பாவிகளுக்காக அவமானத்தையும், ஆக்கினையையும், ஆணிகளையும் வாங்கிய ஒரே தேவன் அவர்.


நம்மிடமிருந்த அவர் விரும்பும் ஒரே காரியம் அன்பு மட்டும் தான். வேதத்தின் எல்லா நீதிகளிலும் அன்பே பிரதானம், இயேசு கிறிஸ்து நமக்கு கற்பித்த முதலாம் கற்பனை அது. நம் அன்பில் பிரியப்படுகிற தேவன் அவர். "உம்மை நேசிக்கிறேன்" என்று பேதுரு சொல்ல சொல்ல, "என்னை நேசிக்கின்றாயா?" என்று இயேசு கேட்டு கொண்டே இருந்தார். பேதுரு "உம்மை நேசிக்கிறேன்" என்று திரும்பத் திரும்பச் சொல்ல அதைக் கேட்டு கேட்டு இயேசு மகிழ்ந்தார். ஒரு கட்டத்ததில் பேதுரு மனமுடைந்து "ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் அறிந்தவர், நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும் நீர் அறிவீர்" என்றே சொல்லிவிட்டார். அந்தளவு நம் அன்பை பெறத் துடிக்கும் அற்புதமான இறைவன் தான் இயேசு கிறிஸ்து.

உலகை விட்டு பரமேறிச் சென்ற போது கூட, உங்களைத் தனித்துவிட எனக்கு மனதில்லை, உங்களுக்காக பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனை விட்டுச் செல்வேன், அவர் உங்களுக்குள் வாசம் செய்வார் என பிரியாவிடை கொடுத்தார் இயேசு. கர்த்தரின் அன்பை விளக்கிச் சொல்ல முடியாது, அளவிட முடியாது. அவர் அன்பை ருசித்தால் மட்டுமே நாம் அவரை அறிந்து கொள்ள முடியும், இதை உணர்த்தியே, யோவான் "அன்பில்லாதவன் தேவனை அறியான், ஏனெனில் தேவன் அன்பாகவே இருக்கிறார்!" என்று எழுதினார்.

இதனை சீடர்களின் வாழ்வில் இருந்தே காணலாம். சிலுவைப்பாடுகளின் போது தங்கள் உயிருக்கு அஞ்சி அவரை விட்டு ஓடிப்போன சீஷர்கள் அனைவரும் அதே கிறிஸ்துவை போதித்து தங்கள் உயிரை இரத்த சாட்சிகளாக விட்டுச் சென்றனர். கிறிஸ்துவுக்குள் வந்த ஒருவன் தன் தேவனை அதிகமாய்ச் சொந்தம் பாராட்டும் காரணம் இதுதான், வேறெவரும் தனக்குத் தராத தயவை, அன்பை அவன் கிறிஸ்துவினிடத்தில் இருந்து கண்டு கொண்டான். அந்த அன்பே அவனை கிறிஸ்துவுக்குள் நிலைத்து வாழ, சிலுவையை ஏற்றுக் கொண்டு அவரை பின்தொடர வல்லமை தருகிறது. ஏனெனில் அன்பு சகலமும் தாங்கும், சகலமும் சகிக்கும்...!

அந்த அன்பையும், நம் தேவன் நம்மீது கொண்டுள்ள நேசத்தையும் நீங்கள் அறிய வேண்டாமா? நம்மை விதவிதமாய்ச் சொந்த கொண்டாடும் சில வசனங்களையும் இயேசு கிறிஸ்துவின் அன்பை அழகாய் விளக்கிச் சொல்லும் ஒரு வீடியோவையும் இப்போது காணலாம்...


தாய் மறந்தாலும் அவர் மறப்பதில்லை, உன்னை தாயாக தேற்றுவார்!

"ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை; ஒருவனை அவன் தாய் தேற்றுவது போல் நான் உங்களைத் தேற்றுவேன்" - ஏசாயா 49:15, 66:13

ஒரு தந்தைப் போல உனக்கு இரங்குவார், உன்னை தன் மகனாக தெரிந்து கொண்டவர் அவர்!

"தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல, கர்த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார்; அந்தப்படி, திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத் தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திர சுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள்" - சங்கீதம் 103:13, ரோமர் 8:15

பாவியான நம்மை தன் சகோதரன் என்றழைக்க அவர் வெட்கப்படுவதில்லை...

"எப்படியெனில், பரிசுத்தஞ் செய்கிறவரும் பரிசுத்தஞ் செய்யப்படுகிறவர்களுமாகிய யாவரும் ஒருவரால் உண்டாயிருக்கிறார்கள்; இதினிமித்தம் அவர்களைச் சகோதரரென்று சொல்ல அவர் வெட்கப்படாமல்: உம்முடைய நாமத்தை என் சகோதரருக்கு அறிவித்து, சபை நடுவில் உம்மைத் துதித்துப் பாடுவேன் என்றும்; நான் அவரிடத்தில் நம்பிக்கையாயிருப்பேன் என்றும்; இதோ, நானும், தேவன் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் என்றும் சொல்லியிருக்கிறார்" - எபிரேயர் 2:11,12,13

ஒரு மணவாளனை போல உன்னுடன் நிலைத்திருக்க விரும்புகிற கர்த்தர்...

"உன் சிருஷ்டிகரே உன் நாயகர்; சேனைகளின் கர்த்தர் என்பது அவருடைய நாமம்; இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் மீட்பர், அவர் சர்வ பூமியின் தேவன் என்னப்படுவார். கைவிடப்பட்டு மனம் நொந்தவளான ஸ்திரீயைப் போலவும், இளம் பிராயத்தில் விவாகஞ் செய்து தள்ளப்பட்ட மனைவியைப் போலவும் இருக்கிற உன்னைக் கர்த்தர் அழைத்தார் என்று உன் தேவன் சொல்லுகிறார்; நித்திய விவாகத்துக்கென்று உன்னை எனக்கு நியமித்துக் கொள்ளுவேன்; நீதியும் நியாயமும் கிருபையும் உருக்க இரக்கமுமாய் உன்னை எனக்கு நியமித்துக் கொள்ளுவேன். உண்மையாய் உன்னை எனக்கு நியமித்துக் கொள்ளுவேன்; நீ கர்த்தரை அறிந்து கொள்ளுவாய்" - ஏசாயா 54:5,6, ஓசியா 2:19,20

நம்மை ஊழியக்காரர் என சொல்ல விரும்பாத நண்பன் நம் தேவன்...!

"இனி நான் உங்களை ஊழியக்காரரென்று சொல்லுகிறதில்லை, ஊழியக்காரன் தன் எஜமான் செய்கிறதை அறிய மாட்டான். நான் உங்களைச் சிநேகிதர் என்றேன், ஏனெனில் என் பிதாவினிடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன்" - யோவான் 15:15

உங்களை இவ்வளவாய் நேசிப்பவர் இயேசு...!

Friday, 14 March 2014

பாவம் என்றால் என்ன? இதெல்லாம் பாவமா?


நியாப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம் - 1 யோவான் 3:4

நாம் செய்யும் காரியங்களில் எது சரி, எது தவறு என கண்டறிய தேவனின் வார்த்தையை நாட வேண்டும். அதனை அறிந்தும் அந்த வார்த்தைக்கு நாம் செவி கொடுக்காவிட்டால் பாவம் செய்கிறோம். பாவம் நமக்கும் தேவனுக்கும் நடுவாக பிரிவினை உண்டாக்குகிறது. எனவே, பாவத்தில் நிலைத்து தேவனுக்கு முன்பாக நீதியற்றவர்களாக இல்லாதபடிக்கு அதற்கான வேத‌ வசனங்களையும் விளக்கங்களையும் அறிந்திருப்பது நல்லது. இந்த பதிவில் பாவத்திற்கென‌ வேதம் கொடுக்கும் சில விளக்கங்களைப் பார்ப்போம்.

1. அவிசுவாசம் ஒரு பாவமே

எபிரேயர் 3:12 - சகோதரரே, ஜீவனுள்ள தேவனை விட்டு விலகுவதற்கு ஏதுவான அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் உங்களில் ஒருவனுக்குள்ளும் இராதபடிக்கு நீங்கள் எச்சரிக்கையாயிருங்கள்.

தேவனின் வார்த்தைக்கு கீழ்ப்படிந்து தன்னை பாவத்தில் இருந்து முற்றிலும் காத்துக் கொண்ட மனிதன் எவனும் இல்லை என வேதம் கூறுகிறது. நம் பாவங்கள் மன்னிக்கப்படும் பொருட்டு இயேசு கிறிஸ்து நமக்கான பலியாக சிலுவையில் ஒப்புக் கொடுக்கப்பட்டார். இந்த தூய இரத்தத்தை ஏற்றுக் கொள்ளாவிடில், நம் பாவங்களுக்கு உரிய பலனை நாம் மறுமையில் அடைந்தே தீர வேண்டும். எனவே, இயேசு கிறிஸ்துவை மனப்பூர்வமாக விசுவாசித்தால் மட்டுமே நாம் இரட்சிக்கப்படுவோம். அவரை விசுவாசியாத பாவம் ஒன்றே அநேகரை நரகத்தில் பங்கடைய செய்கிறது. (யோவான் 16:9; மாற்கு 16:16, வெளி 21:8)

அப்போஸ்தலர் 4:12 - அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை.

2. அநீதியெல்லாம் பாவம்தான்

1 யோவான் 5:17 - அநீதி எல்லாம் பாவம் தான்; என்றாலும் மரணத்துக்கு ஏதுவல்லாத பாவமுமுண்டு.

கர்த்தர் நீதியுள்ளவர். எனவே நம் அவயங்கள் அநீதிக்கல்ல, நீதிக்கே அடிமையாகட்டும். இதற்கு மாறான நம் அக்கிரமங்கள், அநீதிகள் எல்லாம் பாவம் தான். என்றாலும் அவிசுவாசம் ஒன்றைத் தவிர மற்றவை எல்லாம் மரணத்திற்கு அதாவது ஆக்கினைத் தீர்ப்பிற்கேதுவான பாவங்கள் அல்ல. உண்மையாக நாம் மனந்திரும்பி நம் பாவங்களை அறிக்கையிட்டு சிலுவை பலியை ஏற்றுக்கொண்டால் நம் பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்படும். இரட்சிப்பிற்கான சிலுவைபலியை நாம் மறுக்கும் போது, நம் ஆக்கினைத் தீர்ப்பு நிச்சயமாகிறது.

1 யோவான் 1:9 - நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.

3. நற்காரியத்தை செய்யாவிட்டாலும் பாவம்

யாக்கோபு 4:17 - ஒருவன் நன்மை செய்ய அறிந்தவனாயிருந்தும், அதைச் செய்யாமற் போனால், அது அவனுக்குப் பாவமாயிருக்கும்.

மனம் அறிந்த ஒரு நற்காரியத்தை செய்யாமல் விட்டாலும் அது அந்த மனிதனுக்கு பாவமாக எண்ணப்படும். நம்மால் இந்த நற்காரியத்தைச் செய்ய முடியும் என்கிற பட்சத்தில், அதனை தட்டிக் கழிக்காமல் செய்து முடிக்க வேண்டும். மனமறிந்த நற்காரியங்களை செய்து, பொல்லாங்காய் தோன்றுகிற அனைத்து தீய செயல்களில் இருந்து விலகி நடந்தால் நாம் நீதியில் நிலைத்திருப்போம்.

கலாத்தியர் 6:9,10 - நன்மை செய்கிறதில் சோர்ந்து போகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்து போகாதிருந்தால் ஏற்ற காலத்தில் அறுப்போம். ஆகையால் நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத் தக்கதாக, யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மை செய்யக்கடவோம்.

4. பிறரை அவமதிப்பது பாவமாகும்

நீதிமொழிகள் 14:21 - பிறனை அவமதிக்கிறவன் பாவஞ்செய்கிறான்; தரித்திரனுக்கு இரங்குகிறவனோ பாக்கியமடைவான்.

பிறரை அவமதிக்கும் வகையில் நாம் என்ன செய்தாலும், பேசினாலும் அது பாவமே. இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிற எவனும் தனக்கடுத்தவனை நேசித்து அவனை அவமதியாமல் நடக்கிறான். தனக்கு ஒருவன் எவைகளைச் செய்ய வேண்டும், தன்னிடத்தில் பிறன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறோமோ அவ்வாறே நாம் பிறரிடத்தில் கனிவோடு நடந்து கொள்ள வேண்டும்.

மத்தேயு 7:12 - ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச் செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்; இதுவே நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களுமாம்.

5. தீய நோக்கம் பாவமே

நீதிமொழிகள் 24:8,9 - தீவினை செய்ய உபாயஞ்செய்கிறவன் துஷ்டன் என்னப்படுவான், தீயநோக்கம் பாவமாம்.

தீய நோக்கம் கர்த்தருக்கு அருவருப்பானது. தீய எண்ணங்களோடு நாம் எதை செய்தாலும் எதை சிந்தித்தாலும் தீவினை செய்ய பிறரை ஊக்குவித்தாலும் அவைகள் எல்லாம் பாவங்களாகவே எண்ணப்படுகின்றன. கிறிஸ்துவுக்கும் வாழும் எந்த மனிதனும் அவரது சிந்தையை மட்டுமே தரித்து கொள்கிறான். எனவே, தீய எண்ணங்களுக்கு விலகி, கிறிஸ்துவின் சிந்தையில் நிலைத்திருப்பது அவசியம்.

பிலிப்பியர் 2:5 - கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது.

6. தேவனுடைய நாமத்திற்கு மகிமையை கொண்டு வராத யாவும் பாவம்

ரோமர் 2:23,24 - நியாயப்பிரமாணத்தைக் குறித்து மேன்மைபாராட்டுகிற நீ நியாயப்பிரமாணத்தை மீறிநடந்து, தேவனைக் கனவீனம்பண்ணலாமா? எழுதியிருக்கிறபடி, தேவனுடைய நாமம் புறஜாதிகளுக்குள்ளே உங்கள் மூலமாய்த் தூஷிக்கப்படுகிறதே.

தேவனை அறிந்தும், அவரது வார்த்தையை அறிந்திருந்தும் ஒருவன் அவர் கட்டளைகள் படி நடவாவிட்டால் அவன் பாவம் செய்கிறான். அவனது அசுத்தமான செயல்களால் கர்த்தரின் நாமத்திற்கு பிற மக்களால் தூஷணம் ஏற்படும் படி நடந்து கொள்கிறான். இத்தகைய செயல்களில் ஈடுபடும் எவனும் கிறிஸ்துவுக்குள் வந்தவன் அல்ல. அவரில் நிலைத்திருக்கிறேன் என்று சொன்னாலும் அவரோடு அவனுக்கு ஐக்கியமில்லை.

1 யோவான் 1:5,6 - தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை; இது நாங்கள் அவரிடத்தில் கேட்டு, உங்களுக்கு அறிவிக்கிற விசேஷமாய் இருக்கிறது. நாம் அவரோடே ஐக்கியப்பட்டவர்கள் என்று சொல்லியும், இருளிலே நடக்கிறவர்களாய் இருந்தால், சத்தியத்தின்படி நடவாமல் பொய் சொல்லுகிறவர்களாய் இருப்போம்.

7. பிறரை இச்சையோடு பார்ப்பது பாவம்

I கொரிந்தியர் 6:18 - வேசித்தனத்திற்கு விலகியோடுங்கள். மனுஷன் செய்கிற எந்தப் பாவமும் சரீரத்திற்குப் புறம்பாயிருக்கும்; வேசித்தனஞ் செய்கிறவனோ தன் சுயசரீரத்திற்கு விரோதமாய்ப் பாவஞ்செய்கிறான்.

மாம்ச சிந்தை பாவம். ஒரு பெண்ணை இச்சையோடு பார்ப்பவன் தன் மனதில் அவளோடு விபச்சாரம் செய்கிறான். விபச்சாரம், காமம், இச்சை, ஓரினச் சேர்க்கை, வேசித்தனம், மோகம், சுயபுணர்ச்சி என அனைத்து அசுத்த செயல்களுமே பாவம் தான். இத்தகைய செயல்களில் ஈடுபவன் தன் சொந்த சரீரத்தை அசுத்தப்படுத்துகிறான். நமது சரீரம் பரிசுத்த ஆவியானவர் தங்கும் ஆலயம், ஆவியானவர் எங்கேயோ அங்கு விடுதலை உண்டு, எனவே ஆவியால் சரீரத்தின் தீய செய்கைகளை அழித்து, தேவனுக்கு ஏற்ற தூய பலியாக அதனை ஒப்புக் கொடுக்க வேண்டும். மனிதன் தன் மனைவியோடு ஒரே சரீரமாய் ஒருவருக்கொருவர் உண்மையாய் இருப்பதையே கர்த்தர் விரும்புகிறார்.

நீதிமொழிகள் 5: 18 - 20 - உன் ஊற்றுக்கண் ஆசீர்வதிக்கப்படுவதாக; உன் இளவயதின் மனைவியோடே மகிழ்ந்திரு. அவளே நேசிக்கப்படத்தக்க பெண்மானும், அழகான வரையாடும் போலிருப்பாளாக; அவளுடைய ஸ்தனங்களே எப்பொழுதும் உன்னைத் திருப்தி செய்வதாக; அவளுடைய நேசத்தால் நீ எப்பொழுதும் மயங்கியிருப்பாயாக. என் மகனே, நீ பரஸ்திரீயின் மேல் மயங்கித் திரிந்து, அந்நிய ஸ்திரீயின் மார்பைத் தழுவ வேண்டியதென்ன?

8. பிறருக்காக ஜெபியாமலிருப்பது பாவம்

1 சாமுவேல் 12:23 - நானும் உங்களுக்காக விண்ணப்பம் செய்யாதிருப்பேன் ஆகில் கர்த்தருக்கு விரோதமாகப் பாவம் செய்கிறவனாய் இருப்பேன்; அது எனக்குத் தூரமாயிருப்பதாக; நன்மையும் செவ்வையுமான வழியை நான் உங்களுக்குப் போதிப்பேன்.

குடும்பத்துக்காக, சபைக்காக, ஊழியங்களுக்காக, ஆளுகை செய்பவர்களுக்காக, தேசத்திற்காக ஜெபிக்க வேண்டியது நம் கடமை ஆகும். அதில் தவறினால் அது தேவனுக்கு முன்பாக பாவமாகும். நாம் பிறரது நலனுக்காக வேண்டுதல் செய்வதில் கர்த்தர் பிரியப்படுகிறார். பிறருக்காக நாம் இரங்கும் போது, கருத்தோடு ஜெபிக்கும் போது அதற்கான ஆசீர்வாதங்களையும், பலன்களையும் நாம் அடையாமற் போவதில்லை.

1 தீமோத்தேயு 2:1,2 - நான் பிரதானமாய்ச் சொல்லுகிற புத்தி என்னவெனில், எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும் பண்ண வேண்டும்; நாம் எல்லாப் பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம்பண்ணும்படிக்கு, ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும் அப்படியே செய்ய வேண்டும். நம்முடைய இரட்சகராகிய தேவனுக்கு முன்பாக அது நன்மையும் பிரியமுமாயிருக்கிறது.

9. உலக சிநேகம் பாவமே

1 யோவான் 2:15 - 17 - உலகத்திலும் உலகத்தில் உள்ளவைகளிலும் அன்பு கூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்பு கூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை. ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்தில் உள்ளவைகள் எல்லாம் பிதாவினால் உண்டானவைகள் அல்ல, அவைகள் உலகத்தினால் உண்டானவைகள். உலகமும் அதின் இச்சையும் ஒழிந்து போம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.

கர்த்தரை விட உலக காரியங்களை சிநேகிப்போமானால் அது பாவமே (பார்க்க யாக்கோபு 4:4). எனவே, உலக ஐசுவரியங்களுக்கும், சிநேகத்திற்கும், உறவுகளுக்கும் நம் மனதில் முதல் இடம் கொடுப்பதை விட்டு தேவனுக்கு ஏற்ற தூய வாழ்வை வாழ வேண்டும். நம் மனதில் தேவனை முதலாய்த் தேடுவோமானால் இவைகள் எல்லாம் நமக்கு கூட கொடுக்கப்படும். நம் வாழ்வை அவர் தன் கரத்தில் ஏந்தி தேவனே நம்மை குறைவுகளின்றி வழி நடத்துவார்.

மத்தேயு 6:33 - முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.

10. தேவ சித்தத்தை மீறுவது பாவமாகும்

மத்தேயு 7: 21 - பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.

தேவன் நமக்கென ஒரு பாதையை நியமத்திருக்கிறார். உதாரணத்திற்கு, சிலை வழிபாட்டை தேவன் விரும்புவதில்லை. வேதம் கூறுகின்ற தேவனின் இச்சித்தத்தை அறிந்தும் நாம் இயேசு கிறிஸ்துவுக்கும் புனிதர்களுக்கும் சிலைகளை உண்டாக்கி வழிபட்டால் அது மீறுதல் ஆகும். கிறிஸ்துவை அறிந்தும் அவரது சித்தத்திற்கு கீழ்ப்படியாத போது நாம் பாவத்தில் நிலைத்திருக்கிறோம். எனவே தேவ சித்தத்தை விலகி நடப்போமானல் நித்திய ஜீவனையும் இழக்கும் அபாயமிருக்கிறது.

ரோமர் 12:2 - நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.

மேற்கொண்டு படிக்க...
பாவத்தை விளக்கும் பிற வேத வசனங்கள்
மீறுதல்கள் (சங்கீதம் 51:1), அக்கிரமம் (சங்கீதம் 51:2), பொல்லாங்கு (சங்கீதம் 51:4), பிழை (சங்கீதம் 19:12), குற்றம் (சங்கீதம் 19:12), பெரும்பாதகம் (சங்கீதம் 19:13)

வேதத்தில் காணப்படும் சில பாவச் செயல்கள்
யாத்திராகமம் 20:3-17; கொரிந்தியர் 6:9,10; ரோமர் 1:29-31; 1 தீமோத்தேயு 1:9-11; கொலோசெயர் 3:5-8; கலாத்தியர் 5:19-21; மாற்கு 7:20-23

----------------------------------------------------------

(பாஸ்டர். நெல்சன் ஞானக்குமார் அவர்களின் செய்தியை - 50 அஸ்திபாரக் கற்கள் - மையமாக வைத்து எழுதப்பட்டது - நன்றி)

Monday, 3 March 2014

காணாமற் போன ஆடு ‍ - தமிழ் பைபிள் வீடியோ


 



வேதப்பகுதி - லூக்கா 15:1 - 7

நானே நல்ல மேய்ப்பன்

சகல ஆயக்காரரும் பாவிகளும் அவருடைய வசனங்களை கேட்கும்படி அவரிடத்தில் வந்து சேர்ந்தார்கள். அப்பொழுது பரிசேயரும் வேதபாரகரும் முறுமுறுத்து: இயேசு பாவிகளை ஏற்று கொண்டு அவர்களோடே சாப்பிடுகிறார் என்றார்கள். அவர்களுக்கு அவர் சொன்ன உவமையாவது: உங்களில் ஒரு மனுஷன் நூறு ஆடுகளை உடையவனாய் இருந்து, அவைகளில் ஒன்று காணாமற் போனால், தொண்ணூற்று ஒன்பது ஆடுகளையும் வனாந்தரத்திலே விட்டு, காணாமற் போன ஆட்டை கண்டு பிடிக்குமளவும் தேடி திரியானோ? கண்டுபிடித்த பின்பு, அவன் சந்தோஷத்தோடே அதை தன் தோள்களின் மேல் போட்டு கொண்டு, வீட்டுக்கு வந்து, சிநேகிதரையும் அயலகத்தாரையும் கூட வரவழைத்து: காணாமற் போன என் ஆட்டை கண்டுபிடித்தேன், என்னோடு கூட சந்தோஷப்படுங்கள் என்பான் அல்லவா? அது போல, மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்று ஒன்பது நீதிமான்களை குறித்து சந்தோஷம் உண்டாகிறதை பார்க்கிலும் மனந் திரும்புகிற ஒரே பாவியின் நிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

Tuesday, 25 February 2014

நமக்குள்ள பங்கை நாம் அறியும் போது நம் வாழ்வு அர்த்தமுள்ளதாகிறது


வழக்கம் போல அந்த‌ குயவன் அன்று தன் வேலையைத் தொடங்கினான். களிமண்ணை எடுத்து வந்து அதை சுத்தமாகச் சலித்து, தேவையில்லாத குப்பைகளையும், கற்களையும், இலைச் செருகுகளையும் அதிலிருந்து எடுத்துப் போட்டான். பின்பு, தண்ணீரைப் பதமாக ஊற்றி, நன்றாய் பிசைந்து அழகான பாத்திரமாய் அதை வனைந்தான். வனைந்த பாத்திரத்தை நெருப்பில் சுட்டான், அப்போது அது உறுதியானது. நல்ல வழுவழுப்போடு திடமான பாத்திரமாய் இருந்தது, எந்த பிசகும் அதில் இல்லை. செய்ய வேண்டிய வேலைகள் எல்லாம் முடிந்த பின்பு, அப்பாத்திரத்தைச் சந்தைக்கு கொண்டு வந்தான். ஒரு பெண் அதனை விரும்பி நல்ல விலைக்கு பெற்றுக் கொண்டாள். தன் கூடையில் வைத்து தலைமேல் சுமந்து கொண்டு வீட்டை நோக்கிச் சென்றாள்.

கூடையில் வைக்கப்பட்ட பாத்திரம் அங்கும் இங்கும் மோதியது, தாளமிட்டுக் கொண்டே அந்த பெண்ணோடு வேறிடம் நோக்கிச் சென்றது. தன் தாள ஓசையைக் கேட்டு அதனால் இரசிக்காமல் இருக்க முடியவில்லை. தன்னை நேசித்தது, தன் தாளத்தை நேசித்தது, ஆனால் அதனிடம் ஒரு இனம்புரியாத வெறுமை...

அந்த பெண் தன் வீட்டை அடைந்தாள். தன் பழைய பாத்திரங்களோடு, இப்புதிய‌ பாத்திரத்தையும் வைத்தாள். தன்னைப் போன்ற‌ பலரைக் கண்டு அவைகளை நேசித்தது. அவர்களைக் காட்டிலும் தான் பளபளப்போடும் திடமோடும் உள்ளதை நினைத்து தன்னை மெச்சிக் கொண்டது. ஆனால் அந்த வெறுமை மட்டும் அதனை விட்டு நீங்கவில்லை...

அப்பெண்ணும் சில நாட்களாக‌ தன் பழைய பாத்திரங்களையே பயன்படுத்தி வந்தாள். சிலவற்றில் தண்ணீர் நிரப்பி வைத்தாள், சிலவற்றை சமைக்கப் பயன்படுத்தினாள். புது பாத்திரத்திற்கான நேரமோ இன்னும் வரவில்லை. அவளிடம் தன் நண்பர்கள் படும் அத்தனை பாடுகளையும் அமைதியாக கண்டுகொண்டு இருந்தது. வேலை முடிந்த பின், அப்பெண் தன் பாத்திரங்களை கழுவி கவிழ்த்துவிட்டு போனாள். புதுபாத்திரத்தால் இப்போது நலம் விசாரிக்காமல் இருக்க முடியவில்லை. தன் நண்பர்களிடம் அவர்கள் பட்ட பாட்டைச் சொல்லி பெருமூச்சு விட்டது. அதனைக் கேட்டதும் அவைகள் சிரித்தன, குயவன் நம்மை வனைந்ததே அதற்குத்தான் என்றன. புதுபாத்திரத்தால் இதனை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தன் பளபளப்பு என்றுமே மாறாது என்றது, தனக்கு அவர்கள் நிலை நேரிடப் போவ‌தில்லை என்று தன்னைத் தானே தேற்றிக் கொண்டது. ஆனால் அந்த வெறுமையான உணர்வு இன்னும் அதனை விட்டு நீங்கவில்லை. அதற்கும் அக்காரணம் புரியவில்லை.

நாட்கள் சென்றன. புதுபாத்திரத்திற்கான நாள் வந்தது. அப்பெண் அதனை எடுத்து அடுப்பில் வைத்தாள், நெருப்பு மூட்டினாள்... பாத்திரம் சூடானது, பளபளப்பு கருகிப் போனது... என் நண்பர்கள் சொல்லியது உண்மைதானா? என் பளபளப்பு அவ்வளவுதானா? இவள் என்னை என்ன செய்யப் போகிறாள்?... புதுபாத்திரத்திற்கு பல விதமான‌ யோசனைகள். யோசிக்க யோசிக்க அவள் அதில் தண்ணீர் ஊற்றினாள். பாத்திரம் தண்ணீரால் நிரம்பியது, உடனே, ஓர் மாற்றம்... நல்ல இதமான மாற்றம்...

அப்போது தான் தன் வெறுமை தன்னை விட்டு காணாமல் போனது அதற்கு புரிந்தது. "என் பளபளப்பு நிலையல்ல, குயவன் வனைந்த நோக்கந்தான் எனக்கு நிலையானது, என் வெறுமையை நீக்கவல்லது" என்றது. அந்த நேரமே தன் நண்பரோடு சேர்ந்து கொண்டது, குயவன் தனக்களித்த வேலையைச் சந்தோஷமாய் செய்த‌து. வெறுமை நீங்கின தன் வாழ்வை நேசித்தது...

இது தான் வேதம் கூறுகின்ற மனித வாழ்க்கை... இறைவன் படைத்த அனைத்து உயிர்களைக் காட்டிலும் மனிதர்களாகிய நாம் சிறந்தவர்கள். பிற உயிர்களைப் படைக்கும் போது, "உண்டாகட்டும்" என்றவ‌ர் மனிதரைப் படைக்கும் போது மண்ணைப் பிசைந்தார், தன் ஜீவனை அவனுக்கு கொடுத்தார். எந்த உயிருக்கும் இல்லாத சுய அறிவை மனிதர்களுக்கு மட்டும் கொடுத்தார். இறைவனின் கரத்தால் படைக்கப்பட்ட ஒரே உயிர் மனிதன் தான். தேவ சாயலில் படைக்கப்பட்ட ஒரே உயிரும் மனிதன் தான். அவர் உண்டாக்கின எல்லாவற்றையும் பெற்றுக் கொண்டவன் மனிதன் தான், அனைத்திலும் அதிகமாய் நேசிக்கப்பட்டவன் மனிதன் தான்... அவன் பாவத்தில் விழுந்து, அவரை விட்டு விலகின போதும் தேவன் அவனை நேசித்தார், "ஆதாமே, நீ எங்கே இருக்கிறாய்?" என்று ஓடி வந்தார்.

குயவன் வனைந்த பாத்திரம் போலவே நாமும் படைக்கப்பட்டோம். நாம் படைக்கப்பட்ட நோக்கத்தை அறியும் வரை நம் வாழ்வில் உள்ள வெறுமைத் தீராது, நம் மனம் ஒன்றைத் தேடித் திரியும். அது என்ன என்று நமக்கு புரியாது. இந்த அனுபவத்தை பெறாத மக்கள் இருக்க மாட்டார்கள் என்றும் இச்சிந்தனையைத் தூண்டவே மனித மூளையில் "காட் ஸ்பாட்" என்ற பகுதி உள்ளதாகவும் அறிவியல் சொல்கிறது. மனிதர்களைத் தவிர்த்து வேறெந்த உயிரினத்திலும் இந்த பகுதி இல்லை. மனிதனின் வாழ்நாள் முழுவதும் இந்த பகுதி சிந்தனைகளைத் தூண்டிக் கொண்டே இருக்கும். இறைவன் இல்லை எனச் சாத்திப்பவர்களுக்கு காட் ஸ்பாட் அதிக ஆற்றலோடு செயல்படுகிறது. அதன் காரணமாகத் தான் இறைவனின்றி அண்டம் உருவாக வாய்ப்புண்டா என இம்மக்கள் தொடர்ந்து ஆராய்கின்றனர். இது இறைவன் நமக்கு வைக்கிற தேர்வு என்றே சொல்லலாம். தன்னை அறிந்துகொள்ள இச்சிந்தையை கொடுத்திருக்கிறார், தன்னை சுட்டிக் காட்டும் அற்புதங்களை படைப்பின் அதிசயங்களை விட்டு வைத்துள்ளார்.

ஏன் நம்மைப் படைத்தவரையும், நாம் படைக்கப்பட்ட நோக்கத்தையும் நம்மால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை? ஏனெனில் நாம் படைக்கப்பட்ட நோக்கத்தை விட பளபளப்பையே அதிகம் விரும்புகிறோம். சிற்றின்பம், இச்சை, பணம், மோகம், பேராசை என எதையும் இழக்க மனிதன் மறுக்கிறான். இவைகளே தன் மனதிற்கு தேவையான நிறைவை அளிக்க வல்லது என தன்னை தேற்றிக் கொள்கிறான். இத்தகைய எண்ணங்களைக் கொண்ட எந்த மனிதனாலும் பரிசுத்த தேவனை ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனெனில் தன் இச்சையை மறுக்கும் இறைவ‌னை அவன் மறுக்கிறான். என்ன மறுத்தாலும் "காட் ஸ்பாட்" தன் வேலையை விடுவதில்லை, அவனை சிந்திக்கச் சொல்லி தூண்டிக் கொண்டே இருக்கிறது... அதனால் என்ன? அதே வெறுமை...

இதற்கு என்ன தீர்வு? நமக்குள்ள பங்கை, நம்மை படைத்தவரை, நாம் படைக்கப்பட்ட நோக்கத்தை அறிய வேண்டும். அப்போது நம் மனம் நிரம்பி வழியும், தேவையற்ற வெறுமை நீங்கும், மனம் அமைதியில் பிரேவிசிக்கும். இதனைக் குறித்தே, "நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது; நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும்" என்று சொன்னார் இயேசு.

இறைவனின் அன்பில் நிலைத்து வாழவே நாம் தேவசாயலில் படைக்கப்பட்டோம். அந்த அன்பில் நிலைத்திருந்தால் தான் நம் உள்ளம் தேடித் திரியும் நிறைவை நாம் பெற முடியும். நமக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். இந்த அன்பை உணரும் வரை, மனிதன் பல சூழலைத் தாண்டி வருகிறான், அவைகளை நேசித்து மகிழ்கிறான், ஆனால் அவன் பாத்திரம் இன்னும் நிரம்பவில்லை. எச்சமயம் அவன் பாத்திரம் ஜீவத்தண்ணீரால் நிறைகிறதோ அன்றே அவனுக்கு சமாதானம் உண்டாகும், உள்ளம் நிறைவை பெறும், வாழ்க்கை இன்பமாகும்... உபத்திரவங்கள் வந்தாலும், தளராமல் முன்னேறிச் செல்வான், இறைவனை முழுமனதோடு நேசிப்பான், தன்னைப் போல் தனக்கடுத்தவரை நேசிப்பான், இலக்கை நோக்கி ஓடுவான், அதைக் கண்டடைவான்...

அழகாய்ச் சொன்னார் பவுல்,
"...நான் இப்பொழுதே பானபலியாக வார்க்கப்பட்டுப் போகிறேன்; நான் தேகத்தை விட்டுப் பிரியும் காலம் வந்தது. நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக் கொண்டேன். இது முதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டு இருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்கு தந்தருளுவார்; எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதை தந்தருளுவார்...."

நீங்கள் நிரம்பிவிட்டீர்களா...?

Monday, 17 February 2014

உங்களை அழைத்தவர் உண்மையுள்ளவர்...!


நம்மை படைத்தவரே நம்மிடம் அவரை வெளிப்படுத்தினால் ஒழிய நம்மால் கடவுளைக் குறித்தும் அவரது குண நலன்களைக் குறித்தும் அறிய முடியாது. அப்படிப்பட்ட வெளிப்பாடு இவ்வுலகத்தில் உண்டா என்று சரித்திரத்தை புரட்டிப் பார்ப்போம். உண்டு! ஒரு தடயம் உள்ளது. 2000 ஆண்டுகளுக்கு முன்பு, பாலஸ்தீன நாட்டின் தொழும் ஒன்றில் பிறந்த குழந்தை அது. இன்றும் அந்த நன்னாளை உலகம் கொண்டாடி வருகிறது. அவர் தான் இயேசு.

இயேசு கடவுளா? தன்னை கடவுள் என்றாரா?
இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறை படித்தால், அவர் மக்களிடத்தில் ஒரு சராசரி மனிதராய் போதிக்காமல், அதிகாரமுடைய ஒருவ‌ராக போதனை செய்தார் என்று அறியலாம். அவரது வார்த்தையை கேட்ட அக்கால மக்கள் மிகுந்த ஆச்சரியத்துக்கு உள்ளானர்கள். போதிக்க துவங்கிய சில நாட்களிலேயே, தன்னை குறித்து விய‌ப்பூட்டும் வார்த்தைகளை சொல்லி வந்தார். ஒரு சாதாரண தீர்க்கதரிசிக்கும், போதகருக்கும் மேலாய் இயேசு தன்னை கூறிக் கொள்கிறார் என்பதை மக்கள் அறிந்து கொண்டனர். ஒரு நாள், "என்னைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?" என்று இயேசு கேட்டபோது அவரது சீஷரான‌ பேதுரு,"நீர் ஜீவனுள்ள தேவனின் குமாரனாகிய கிறிஸ்து" என்று சொன்னார். அதற்கு இயேசு அவரை கடிந்து கொள்ளவில்லை, மறுமொழி கூறவில்லை, மாறாக அவரை மெச்சினார்.

இவ்வாறு, இயேசு யூத சட்டங்களைக் கைக்கொள்ளாமல், தன்னை தேவகுமாரன் என்று கூறி வந்ததால், யூதர்கள் அவரை கொல்ல முயன்றனர். ஒரு கட்டத்ததில், "பிதாவும் நானும் ஒன்றாயிருக்கிறோம்" என்று இயேசு சொன்னார். அந்த வார்த்தைகளை கேட்டபொழுதே யூதர்க‌ள் கற்களை எடுத்துகொண்டார்கள். "எந்த நற்கிரியை நிமித்தம் என்மீது கல்லெறிய நினைக்கிறீர்கள்" என்று அவர் கேட்ட பொழுது, "நீ மனிதனாய் இருக்க, உன்னை கடவுள் என்பதால் கல்லெறிகிறோம்" என்றார்கள். இவ்வாறு, இயேசுவின் போதனைகளே அவரது அடையாளத்தை வெளிப்படுத்தும் மையக் கருத்துக்களாக அமைந்தன.

இயேசு கடவுளா? அவரது வாழ்க்கையை காணலாம்...


உடல் ஊனமுற்ற ஒருவரை குணமாக்க இயேசு கிறிஸ்துவிடம் சிலர் கொண்டு வந்தார்கள். அப்பொழுது இயேசு, "மகனே உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது" என்றார். அவரது வார்த்தை யூதர்களுக்கு வெறுப்பூட்டியது. "இந்த மனிதன், தேவ தூஷணம் சொல்வதென்ன? கடவுளைத் தவிர்த்து யாரால் பாவங்களை மன்னிக்க கூடும்? பாவத்தை மன்னிக்க இவன் யார்?" என்று அவரை கடிந்து கொண்டனர். குற்றவிசாரணை போது, "நீ தேவனுடைய குமாரனாகிய‌ கிறிஸ்துதானா?" என்று பிரதான ஆசாரியன் கேட்க, "நான் அவர்தான், மனுஷகுமாரன் சர்வ வல்லவரின் வலது பாரிசத்தில் வீற்றிருப்பதையும், வானத்தின் மேகங்கள் மேல் வருவதையும் நீங்கள் காண்பீர்கள்" என்று இயேசு சொன்னார். இதனை கேட்டவுடனே பிரதான ஆசாரியன் தன் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு, "இவன் தேவ தூஷணம் சொன்னான், இனி சாட்சிகள் வேண்டியதென்ன?" என்று சத்தமிட்டான். அங்கிருந்தோரும் "மரணத்துக்கு பாத்திரமாயிருக்கிறான்" என கோஷமிட்டார்கள்.

இயேசுவின் ஒவ்வொரு வார்த்தைகளும் அவரது அடையாளத்தையும், அவருக்கும் தேவனுக்கும் உள்ள இணைப்பையும் வெளிப்படுத்திக் கொண்டே இருந்தன. தேவனின் தூய பிரதிபலிப்பே இயேசு கிறிஸ்து. அவரை அறிந்து கொள்வது தேவனை அறிந்து கொள்வதாகும், அவரை காண்பது தேவனை காண்பதற்கு சமம், அவரை விசுவாசிப்பவன் தேவனை விசுவாசிக்கிறான், அவரை ஏற்பவன் தேவனை ஏற்றுக் கொள்கிறான், அவரை மகிமைப்படுத்தினவர் தேவனை மகிமைப்படுத்துகிறார்.

இயேசு கடவுளா? சிந்தனை செய்வோம்...
இத்தருணம் நம் முன் இருப்பது இந்த கேள்வி தான், "இயேசு தன்னைக் குறித்து சொன்னவை உண்மையா?"

சிலர், இயேசு தன்னைக் கடவுளென்று சொன்னதாக அவரது சீஷர்கள் பொய்யுரைத்திருக்கலாம் என்று கருதுகிறார்கள். இது சரியல்ல, இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட சில நாட்களிலேயே அவரது சீஷர்கள் சுவிசேஷச் செய்திகளை ஊர் ஊராக சென்று பிரசித்தப்படுத்தினர். சில ஆண்டுகளில் இயேசு கிறிஸ்துவின் போதனைகள் வெகு வேகமாக பரவி, பல மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. பல இடங்களில் திருச்சபைகள் பெருகின, அவரது வாழ்க்கை வரலாறு குறித்த சுவிசேஷ நூல்கள் சபைகளுக்குள் புழங்கத் தொடங்கி பெருமளவில் பரிமாறிக் கொள்ளப்பட்டது. இவையெல்லாம் சீஷர்கள் இறப்பதற்குள் நிறைவேறி முடிந்தன. சமுதாயத்தில் பெயர் பெற்றிராத ஒரு கொலை குற்றவாளிக்கு இத்தனை சீக்கிரத்தில் புகழ் உண்டாவது எளிதல்ல. அதோடு, சீஷர்கள் அவர்களது போதனைகளில் இருந்து நிலை தடுமாறல் இறப்பு வரை போராடினர். கொலை மிரட்டல்களுக்கு அஞ்சாமல் அவரது வார்த்தைகளை போதித்து கொடூர முறையில் தங்கள் உயிர்களை விட்டனர். மனம் அறிந்த ஒரு பொய்க்காக குறுகிய காலத்தில் இத்தனை பாடுபட்டு உயிரை விட யாருக்கும் மனம் வராது. சீடர்கள் பொய்யுரைக்கவில்லை.

சிலர் அவரது தெய்வத் தன்மையை மறுத்தாலும், அவரை ஒரு நல்ல தத்துவ ஞானியாக, போதகராக ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால், இது பொருந்தாது. இயேசு கிறிஸ்து தன்னை கடவுள் என்று பொய் சொல்லி இருந்தால், அவரை ஒரு நல்ல போதகராகவோ, தத்துவ ஞானியாக ஏற்க முடியாது. ஒரு சாரார், அவரை பைத்தியம் பிடித்தவர் என்று அக்காலம் முதலே இகழ்ந்தார்கள். இது இன்னொரு வாய்ப்பு. இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றில் அத்தகைய மனநல குறைவுகள் எதுவும் இல்லை. அவர் இறுதி வரை ஒரே போதனையில் நிலைத்து இருந்தார். கண்ணியமாக நடந்து கொண்டு, பல மக்களிடத்தில் நற்பெயர் பெற்றார்

ஆக, ஒரு நல்ல மனிதர் என்ற இடைநிலையில் வைப்பதோ, சீஷர்களைக் குற்றஞ் சொல்வதோ, மனநலம் பாதிக்கப்பட்ட நபராக கருதுவது பொருந்தாது. எனவே, இயேசு தன்னைக் குறித்து சொன்னவை உண்மையா? என்ற கேள்வி எழுந்தால் அதற்கு இரண்டே பதில்கள் தான். ஒன்று, அவர் பொய் சொல்லி இருக்க வேண்டும் அல்லது அவர் சொன்ன வார்த்தைகள் எல்லாம் சத்திய வார்த்தைகளாக இருக்க வேண்டும்.

இயேசு கடவுளா? ஆதாரங்கள் என்னென்ன?
ஒரு மனிதர் தன்னைக் குறித்து சொல்லிக் கொள்வது எளிது. ஆனால், அவர் தன்னைக் குறித்து சொன்ன வார்த்தைகளை மக்களிடம் நிருபித்து காட்டினாரா என்பது அவசியம். இயேசு கிறிஸ்து தன்னைக் கடவுளாகச் சித்தரித்து மக்களை வியக்க வைத்தார். அதற்காக கொலையுண்டார். ஆனால், அவரது வார்த்தைகள் உண்மைதான் என்பதை நிருபித்து காட்டினாரா?

அற்புதச் செயல்கள்
தன் வார்த்தையின் உண்மையை எளிமையாய் எடுத்துக் காட்டினார் இயேசு, அவரது அற்புதச் செயல்கள் அவரது வார்த்தைகளுக்கு அத்தாட்சிகளாக அமைந்தன. அதனை உணர்த்தியே இயேசு, "என் பிதாவின் கிரியைகளை நான் செய்யாதிருந்தால், நீங்கள் என்னை விசுவாசிக்க வேண்டியதில்லை. செய்தேனே ஆகில், நீங்கள் என்னை விசுவாசியாதிருந்தாலும், பிதா என்னிலும் நான் அவரிலும் இருக்கிறதை நீங்கள் அறிந்து விசுவாசிக்கும்படி அந்தக் கிரியைகளை விசுவாசியுங்கள்" என்று சொன்னார்.

பரிசுத்த குணமும் தூய வாழ்வும்
"என்னிடத்தில் குற்றம் உண்டென்று உங்களில் யார் என்னை குற்றப்படுத்தக் கூடும்?" என்று மக்களைப் பார்த்து கேட்கும் அளவிற்கு இயேசுவின் வாழ்க்கை பரிசுத்தமாக இருந்தது. அவர் இவ்வாறு கேட்ட போது, அவருக்கு எதிராக குற்றஞ் சொல்ல எந்த மனிதனும் துணியவில்லை. தன் சீஷர்களை பாவ மன்னிப்பு கேட்கச் சொன்னாலும், இயேசு பாவ மன்னிப்பு கேட்க‌வில்லை. பிறப்பு முதலே மனிதன் பாவியாய் இருக்கிறான் என்று யூதம் திட்டமாய்ச் சொல்கிறது. ஆனால், யூதகுலத்தைச் சேர்ந்த அவரது சீஷர்கள், இயேசு கிறிஸ்து பாவமற்றவர் என போதித்தனர். இயேசு குற்றம் சாட்டப்பட்டவராய் நின்ற போதிலும் பிலாத்து, "இவரிடத்தில் எந்த குற்றமும் காணேன்" என்று சொல்லி கைகழுவினான். இயேசு கிறிஸ்துவின் வாழ்வெல்லாம் பரிசுத்தம், தூய்மை.

இயற்கை அடிபணிந்தது
குருடரின் கண்களைத் திறந்தார், குஷ்டரோகிகள் சுத்தமானார்கள், முடவர்கள் நடந்தனர். இயேசு கிறிஸ்து தன்னிடத்தில் வந்த, கொண்டு வரப்பட்ட பிணியாளிகள் எல்லாரையும் சுகமாக்கினார். இதனை அன்றைய யூதர்களும் மறுக்கவில்லை. இயேசு பிறவிக் குருடனை குணமாக்கின போதும், மரித்த லாசருவை எழுப்பின போதும், "பிறவிக் குருடனின் கண்களை மனிதனால் திறக்கக் கூடுமோ?" என்றார்கள், "இதோ உலகமே அவன் பின்னால் போயிற்றே" என்று வியப்புக்குள்ளானர்கள். இயற்கை அவரது அடிபணிந்தது, காற்றையும் புயலையும் தன் வார்த்தையால் அமைதியாக்கினார். கற்பாறை போல கடல் நீர் மேல் நடந்தார், "காற்றும் கடலும் இவரது வார்த்தைக்கு கீழ்ப்படிகிறதே, இவர் எப்படிப்பட்டவரோ!" என்று அவரது சீஷர்கள் தங்களுக்குள் சொல்லிக் கொண்டார்கள்.

உயிரோடிக்கிற தேவன்


இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளுக்கு முக்கிய அத்தாட்சி அவரது உயிர்த்தெழுதல். தன்னை கொலை செய்வார்கள் என்றும், மரித்த மூன்றாம் நாளில் தன் உயிர்த்தெழுதல் நிகழும் என்றும் இயேசு தன் சீஷர்களிடம் கூறியிருந்தார். ஐந்து முறை அவர் இவ்வாறு கூறினார். இத்தகைய வாக்குறுதிகள் சீஷர்கள் மத்தியில் அவிசுவாசத்தை எழுப்பும், இருப்பினும் இயேசு தயங்காமல் வாக்களித்தார். இதுவே அவரது தெய்வீகத்துக்கு முக்கிய பரீட்சை. இயேசு சொல்லியபடி உயிர்த்தெழாவிட்டால், அவரது போதனைகள், அவருக்காக விடப்பட்ட‌ உயிர்கள், சீஷர்கள் பட்ட பாடுகள், சுவிசேஷப் பணிகள், இரத்த சாட்சிகள் என எல்லாமே வீண். ஆனால், அவர் சொல்லியபடி உயிர்த்தெழுந்தால், அவர் சொல்லிய பிற வார்த்தைகள் எல்லாம் சத்திய வார்த்தைகள், நம் நம்பிக்கை முழுவதும் பெற்றுக்கொள்ள தகுதியான வார்த்தைகள், நித்திய ஜீவனை அடைய அவர் காட்டிய வழிகளே உண்மையானவை. இதனையே, "கிறிஸ்து எழுந்திருக்கவில்லை என்றால், எங்கள் பிரசங்கமும் விருதா, உங்கள் விசுவாசமும் விருதா" என்றார் பவுல். இயேசு உயிர்த்தெழுந்தாரா?

இயேசு அற்புதம் பல செய்திருக்க, அவர் நினைத்திருந்தால் சிலுவை மரணத்தை எளிதாய் தவிர்க்க முடியும். ஆனால் இயேசு தன் சிலுவை மரணத்தை தவிர்க்கவில்லை. போர்ச் சேவகர் இயேசுவைக் கைது செய்யும் போது, பேதுரு அவர்களை எதிர்த்து பட்டயம் எடுத்தார். அப்பொழுது இயேசு, "உன் பட்டயத்தை திரும்ப அதின் உறையிலே போடு; பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்து போவார்கள். நான் இப்பொழுது என் பிதாவை வேண்டிக் கொண்டால், அவர் பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதரை என்னிடத்தில் அனுப்பமாட்டார் என்று நினைக்கிறாயா? அப்படிச் செய்வேனானால், இவ்விதமாய்ச் சம்பவிக்க வேண்டும் என்கிற வேதவாக்கியங்கள் எப்படி நிறைவேறும்" என்றார். அவர் சொல்லியபடி சிலுவை மரணம் நிறைவேறியது. சீலைகளை வாசனைத் தைலத்தில் நனைத்து அவரது உடலைச் சுற்றி கட்டி கல்லறையில் கிடத்தினார்கள். இயேசு உயிர்த்தெழப் போவதாய் வாக்களித்திருந்ததால் அவரது கல்லறை மீது அரசு முத்திரை போடப்பட்டது. கல்லறைக்கு காவல் வைத்தனர்.

இவை அனைத்தையும் கடந்து மூன்றாம் நாள் அதிகாலை வேளையில், அவரது சரீரம் அக்கல்லறையில் இல்லை. இச்செய்தி அப்பகுதிகளில் பரவத் தொடங்கியது. சிலர் இயேசு சிலுவையில் உயிர் இழக்கவில்லை, அவர் சுய நினைவற்று இருந்தது அறியாமல் அடக்கம் செய்யப்பட்டிருப்பார் என்று கருதுகின்றனர். இதனை மூர்ச்சைக் கோட்பாடு என்பார்கள். ஆனால், சிலுவையில் அறையப்பட்ட இயேசு உயிர் இழந்தாரா என அவரது விலாவில் குத்தி சோதித்தனர். அவர் இறப்பு முதலில் உறுதி செய்யப்பட்ட பிறகே உடல் கல்லறையில் வைக்கப்பட்டது. அதோடு, கல்லறையில் வைக்கப்பட்ட இயேசு தன் வேதனைகளை மீறி கல்லறையின் கல்லைப் புரட்டி சேவகரைக் கடந்து வருவது இயலாத காரியம். மூர்ச்சைக் கோட்பாடு அர்த்தமற்றதாகும். சிலர், இயேசுவை இழந்த துக்கத்தில் இருந்த பெண்கள், வழி தவறி வேறு கல்லறைக்கு சென்றிருக்கக் கூடும் என்கின்றனர். பெண்கள் கல்லறை மாறிச் சென்றதாக எடுத்துக் கொண்டாலும், யூதர்கள் சரியான கல்லறைக்குச் செல்ல முடியும். இயேசுவின் உடலை எடுத்து உயிர்த்தெழுதலை எளிமையாக மறுத்திருக்கலாம். ஆனால் அவர்கள், இயேசுவின் சரீரத்தை அவரது சீஷர்களே களவாடிவிட்டு, கிறிஸ்து உயிர்தெழுந்தார் என பொய்யுரைப்பதாக கூறினார்கள். யூதர்களின் வார்த்தையில் இருந்தே, இயேசுவின் சரீரம் கல்லறையில் இல்லை என்பது தெளிவாகும். அடுத்ததாக, காவல் பணியின் போது உறங்கும் சேவகர்களுக்கு அக்காலத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. காவலாளிகளை மீறி சரீரத்தைக் கொள்ளையிடுவது எளிதல்ல.

காலியான கல்லறை சீஷர்களுக்கு போதுமான விசுவாசத்தைத் தந்ததா? இல்லை. அதனால் அவர்கள் இயேசு உயிர்த்தெழுந்தார் என்று விசுவாசிக்கவில்லை. அவர்களது விசுவாசத்தை எழுப்ப, உயிர்தெழுந்த இயேசு பல முறை காட்சி அளிக்க வேண்டியிருந்தது. ஒருமுறை அவர் காட்சியளித்த போது, சீஷர்களில் ஒருவரான தோமா அவ்விடத்தில் இல்லை. அவர் வந்த பிறகு, மற்ற சீஷர்கள் இயேசு அளித்த காட்சி குறித்து அவரிடம் கூறினார்கள். ஆனால் தோமா அப்போதும் விசுவாசிக்க மறுத்தார். தன் கைகளால் அவரை தொட்டால் ஒழிய தான் இயேசுவின் உயிர்தெழுதலை நம்பப்போவதில்லை என்றார். அவர்களது விசுவாசத்தைப் பெற நாற்பது நாட்களாக இயேசு இவ்வுலகில் இருக்க வேண்டியதாயிற்று. அதன் பின்பே அவர் பரமேறிச் சென்றார். இச்சங்கதிகளை எல்லாம் சீஷர்கள் சாட்சியாக அறிவிக்க தொடங்கினார்கள். சீஷர்களின் சாட்சி மெய்யா? 

சத்தியத்திற்காக எந்த மனிதனும் உயிரிழக்கத் துணிவான், ஆனால் மனமறிந்த ஒரு பொய்க்காக எந்த மனிதனாலும் இறுதிவரை நிலையாய் நிற்க முடியாது, அப்பொய்க்காக பாடுகள்படவும் உயிரிழக்கவும் மனம் வராது. ஓரிரண்டு வருடங்கள் அல்ல, இறப்பு வரை சீஷர்கள் தங்கள் சாட்சியில் உறுதியாய் நின்றார்கள். கொலை செய்யப்பட்டாலும், கல்லெறியப்பட்டாலும், வேதனை படுத்தப்பட்டாலும், புறக்கணிக்கப்பட்டாலும், நாடு கடத்தப்பட்டாலும் அவர்கள் தங்கள் நிலையில் இருந்து ஒரு தருணமும் பின்வாங்கவில்லை. இறுதிவரை சாட்சியாய் நின்று, இயேசு கிறிஸ்துவை போதித்தனர். அரச தடையை மீறி கிறிஸ்துவை போதித்த குற்றத்திற்காக கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். அந்த நேரமும் அவர்கள் சாட்சி வழுவில்லை. அவர்களுக்குப் பின் அவர்கள் சீஷர்கள் உறுதியாய் நின்றனர், கொலை செய்யப்பட்டனர், திருச்சபைகள் பெருகின, யூத சடங்காச்சாரங்கள் வீழ்ந்தன‌, கிரேக்க மார்க்கங்கள் உருதெரியாமல் போயின, இறுதியாக இயேசுவின் போதனைகளால் ரோம சாம்ராஜ்ஜியமே கவிழ்ந்தது. இவை எல்லாம், ஒரு குறுகிய காலத்தில் நிறைவேறி முடிந்தன! இன்றும் இயேசு கிறிஸ்துவின் உயிர்தெழுதல் உலகமெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது...

இது உங்கள் நேரம்...
இயேசு ஏன் இத்தனை பாடுகள் படவேண்டும்? உங்களுக்காகத் தான்! உங்கள் அன்பை பெறவே அவர் இத்தனை இன்னல்களையும் மேற்கொண்டார். கடவுளை நமக்கு அடையாளம் காட்ட, நாம் கடவுளை அறிந்து கொள்ள ஒரு மகத்தான வாழ்க்கையை நம் முன்னே விட்டுச் சென்றார். இயேசு சொன்னார், நான் உங்களுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்... அவரது கரங்களில் நம்மை அர்ப்பணிக்கும் போது, நம் வாழ்வு அர்த்தம் பெறும், "இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசிப்பேன்" என்கிறார். அவரது சத்தத்திற்கு நீங்கள் செவி கொடுங்கள், இந்த நேரமே அவர் உங்களுக்குள் பிரவேசிப்பார். உங்கள் வாழ்வு புதிதாகும், பாவம் மன்னிக்கப்படும், பரலோக வாசல் திறக்கும், நித்திய ஜீவன் உண்டாகும்...

வாழ்த்துக்கள்...

(கிறிஸ்து அறிமுகப்பதிவு 2)

Saturday, 11 January 2014

பரிசுத்த பைபிள் இலவச தரவிறக்கம்

பரிசுத்த வேதாகமத்தின் பி.டி.எஃப் கோப்பு இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. உங்களிடம் தமிழ் வேதாகமம் இல்லையா? இதனை தரவிறக்கம் செய்து படியுங்கள்.


உங்கள் வாழ்வை பிராகாசிக்க செய்யும் அற்புத வசனங்களை கொண்டது தான் இந்த பரிசுத்த வேதம். துன்ப நேரத்தில் ஆறுதல் அளிக்கும் நூல் இது, தனிமையில் உங்களுக்கு கைக்கொடுக்கும், பாவத்தில் விழுந்த வாழ்வை தூக்கி தரும், உங்களை பரிசுத்தமாக்கும், தன் வார்த்தையால் உங்கள் மனதை தேற்றும், மெய்யான சமாதனம் கொடுக்கும், நிம்மதி கொடுக்கும், இன்பம் கொடுக்கும், கண்ணீரைத் துடைக்கும், கரம்பிடித்து வழிநடத்தும்... இப்படி அடிக்கிக் கொண்டே செல்லலாம். உணர்ந்து பாருங்கள்...

அரும்பாடுப்பட்டு காக்கப்பட்ட வேதம் இது. 1500 ஆண்டுகளாக ஒவ்வொரு நூல்களாக எழுதப்பட்டு முடிவடைந்தது. செப்புத்தகடுகளிலும், தோல் சுருள்களிலும், இலை ஓலைகளிலும் ஆயிரமாயிரம் வருடங்களாக காக்கப்பட்ட பொக்கிஷம் இது. இந்த வேதத்தை தமிழில் மொழிப்பெயர்க்க பட்ட இன்னல்களும் ஏராளம். வேத வரலாறை சொல்லி முடிய தனிப்பதிவு ஒன்றை காணலாம்.

இப்பரிசுத்த‌ வேதத்தின் வார்த்தைகள் எல்லாம் சத்தியம். துளியளவும் இதில் சந்தேகம் வேண்டாம். இதன் மேல் உண்மையான நம்பிக்கை வைத்து வாழ்ந்த மக்களின் வாழ்க்கை எல்லாம் பரிசுத்தமாகி பிரகாசித்தன. நீங்களும் விசுவாசித்து படியுங்கள், இத்தூய நூல் கூறும் நீதிகளை உங்கள் வாழ்வில் செயல்படுத்துங்கள், பரலோக வாசல் உங்களுக்கு திறக்கும். ஆமென்.

Thursday, 9 January 2014

போ, இனி பாவஞ் செய்யாதே

அன்புள்ள தோழனுக்கு,

நண்பா, நீ உன் கடந்த கால பாவங்களை எண்ணி மனம் உடைந்திருக்கிறாய் என அறிந்தேன். உன் நெஞ்சம் என்ன வேதனையில் இருக்கிறது என்பதை என்னாலும் அறிய முடியும். உன்னைப் போல, நானும் என் பாவங்களை நினைத்து கண்ணீர் வடித்த நாட்கள் உண்டு. ஆனால், என் கண்ணீர் மாறியது, கவலை தீர்ந்தது. நீயும் அந்த சமாதானத்தை பெற்ற கொள்ள வேண்டும் என இந்த மடலை உனக்கு எழுதுகிறேன்.

இனி, நீ கவலை படவேண்டிய தேவை இல்லை நண்பா. நீ இயேசு கிறிஸ்துவின் வாழ்வை அறிந்திருக்கிறாயா? அவரது வாழ்வில் நடந்த ஒரு சின்ன சம்பவத்தை உனக்கு சொல்கிறேன், கேள்.


ஒரு நாள், இயேசு ஏழை மக்களுக்கு கற்பித்துக் கொண்டிருந்தார். அப்போது, அவரிடத்தில் விபச்சாரி ஒருத்தியை யூதர்கள் சிலர் அடித்து இழுத்து வந்தனர். இயேசுவை நோக்கி, "போதகரே, இந்த பெண் விபசாரத்தில் கையும் களவுமாக பிடிக்கப்பட்டாள், இப்படிப்பட்ட பாவத்தை செய்வோரை கல் எறிந்து கொல்ல வேண்டும் என வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது, நீர் என்ன சொல்கிறீர்?" என்றனர். அவர்கள் அவரை சோதிக்க வேண்டியே அவ்வாறு கேட்டனர். இயேசுவோ அமைதியாக, நிலத்தில் தன் விரலால் எழுத ஆரம்பித்தார். அவர்கள் விடாமல் அவரிடம் கேட்டுக் கொண்டிருக்க, இயேசு நிமிர்ந்து, "உங்களில் பாவம் செய்யாதவன் இந்த பெண்ணின் மீது முதலாவது கல் எறியக்கடவன்" என்றார். பின்னர், மீண்டும் குனிந்து தன் விரலால் நிலத்தில் எழுத தொடங்கினார். அவரது வார்த்தைகளைக் கேட்டதும், அங்கிருந்த யூதர்கள் தங்கள் மனசாட்சியால் குத்தப்பட்டனர். பிறரை குற்றப்படுத்த தாங்கள் உத்தமரல்ல என உணர்ந்தனர். ஒவ்வொருவராய், எல்லாரும் சென்றுவிட, இயேசு மட்டுமே தனித்திருந்தார். தன் கண்களை ஏறெடுத்துப் பார்த்தார். அந்த பெண் மட்டும் நின்றுக் கொண்டிருந்தாள். இயேசு அவளை நோக்கி, "பெண்ணே, உன்னை குற்றம் சாட்டினவர்கள் எங்கே? ஒருவரும் உன்னை ஆக்கினைக்குள்ளாக துன்புறுத்தவில்லையா?" என்றார். அவள், "ஒருவரும் இல்லை ஆண்டவரே" என்றாள். அப்போது, இயேசு அவளை தேற்றி, "நானும், உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கவில்லை, நீ போ, இனி பாவம் செய்யாதே" என்று சொல்லி அனுப்பினார்.

நண்பனே, இயேசுவின் வார்த்தைகளைப் பார். பாவம் இல்லாதவன் முதலாவது கல்லெறியக் கடவன் என கர்த்தர் சொன்னதும் ஒருவனும் அங்கு நிற்க துணியவில்லை. தாங்கள் எப்படிப்பட்ட பாவிகள் என அவர்கள் மனம் உணர்ந்தது. பாவமே இல்லாத இயேசு மட்டுமே தனித்து விடப்பட்டார். உன்னை நியாந்தீர்க்க இயேசு ஒருவர் தான் பாத்திரமானவர். ஆனால், அவர் என்ன சொல்கிறார் பார்... "நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கவில்லை, நீ போ, இனி பாவம் செய்யாதே" என்கிறார். இந்த வார்த்தைகளை உனக்கு உணர்த்தி இந்த மடலை எழுதுகிறேன்.

நீ என்று உன் பாவங்களை நினைத்து மனம் உடைய ஆரம்பித்தாயோ, அன்றே உன் பாவங்கள் மன்னிக்கப்பட தகுதியுடையவனாகி விட்டாய். இனி, கண்ணீர் சிந்தாதே நண்பா. இயேசு உன்னை மன்னித்துவிட்டார். "இயேசுவே, நீரே என் பாவங்களை மன்னிக்க பாத்திரமானவர். என் பாவங்களுக்காக நான் மனம் வருந்துகிறேன் ஆண்டவரே, கல்வாரி சிலுவையில் நீர் சிந்திய தூய இரத்தத்தால் என்னை கழுவி சுத்தமாக்கும். எனக்கு ஒரு புதிய வாழ்வைத் தாரும். பரலோக ராஜ்யத்தில் இடம்பெற என்னை தகுதி உடையவனாக்கும். உம்மை விசுவாசித்து இந்த சிறு ஜெபத்தை ஏறெடுக்கிறேன்" என அவரிடம் உன் பாவங்களை அறிக்கையிடு. இப்போது நீ மன்னிக்கப்பட்டவன். கிழக்குக்கும் மேற்குக்கும் எத்தனை தூரமோ அவ்வளவாக உன் பாவங்களை உன்னை விட்டு நீக்கி இருக்கிறார் இயேசு. கிறிஸ்துவுக்குள் வந்தவன் எவனும் புதுசிருஷ்டியானவன் என வேதம் சொல்கிறது. நீயும் புதியவனாகி விட்டாய். இனி, உன் வாழ்வை அவரது பரிசுத்த கரங்களில் ஒப்புக் கொடுத்து பாவங்களுக்கு விலகி வாழு. "இனி பாவம் செய்யாதே" என்ற அவரது கட்டளையை மீறாதே. பரிசுத்தமாக உன்னை காத்துக் கொள். பாவத்தை விட்டு விலகு, நற்செயல்களில் ஈடுபடு, ஏழை எளியோருக்கு உதவு, கடவுளை தொழுது கொள், சமாதானம் இல்லாத பிறருக்கும் இயேசு குறித்து சொல். பரலோக குடிமகன் நீ. இனி, நீ சமாதனத்துடன் வாழலாம், துளியளவு கவலையும் உனக்கு வேண்டாம்.

இப்படிக்கு,
இயேசுவாலே மீட்கப்பட்ட ஒருவன்.

இயேசு விபச்சார பெண்ணை மன்னித்த காட்சி




Monday, 6 January 2014

உன்னை குறித்து பைபிள் என்ன சொல்கிறது தெரியுமா?


கிறிஸ்துவுக்குள் வாழும்...

நீ கடவுளின் பிள்ளை.
(கலாத்தியர் 3:26)

நீ இயேசுவின் நண்பன்.
(யோவான் 15:15)

நீ புது சிருஷ்டியானவன்,
உன் பழைய வாழ்க்கை கடந்துபோனது.
(2 கொரிந்தியர் 5:17)

நீ பரிசுத்த ஆவியானவரோடு
வாசம் செய்பவன்.
(1 கொரிந்தியர் 6:19)

நீ கடவுளின் அற்புத படைப்பு.
(எபேசியர் 2:10)

நீ முற்றிலும் மன்னிக்கப்பட்டவன்,
உன் பாவங்கள் உன்னை விட்டு நீங்கின.
(1 யோவான் 1:9)

நீ தேவ சாயலில்
சிருஷ்டிக்கப்பட்டவன்.
(எபேசியர் 4:24)

பாவத்தில் மரித்த நீ
உயிர்பிக்கப்பட்டாய்.
(எபேசியர் 2:5)

நீ பரலோக குடிமகன்.
(பிலிப்பியர் 3:20)

நீ கடவுளால் பூமிக்கு
அனுப்பப்பட்ட தூதுவன்.
(அப்போஸ்தலர் 1:8)

நீ கிறிஸ்துவின் மந்தையில்
ஆடுகளை கூட்டிச் சேர்ப்பவன்.
(மத்தேயு 28:19)

நீ பூமிக்கு உப்பாயிருக்கிறாய்
(மத்தேயு 5:13)

நீ பூமிக்கு ஒளியாய் இருக்கிறாய்
(மத்தேயு 5:14)

நீ மிகவும் நேசிக்கப்படுகிறவன்
(ரோமர் 5:8)

Sunday, 5 January 2014

முட்களுக்கும் நன்றி சொல்வேன் இயேசுவே...

2013 முடிந்து புத்தாண்டுக்குள் நுழைந்த நேரம்... புதிய நாளை காணசெய்த கடவுளுக்கு நன்றி செலுத்த புரப்பட்டாள் ஜெனி. மனதில் பாடிக்கொண்டு, தேவாலயத்துக்கு விரைந்து கொண்டிருந்த ஜெனியின் முகம் மலர்ந்தது. அங்கே அவளது சிறுவயது தோழி சுசி வந்து கொண்டிருந்தாள். "ஆனால் என்னாச்சு சுசிக்கு?, ஏன் சோர்ந்து போய் வருகிறாள்?" என ஒரு நிமிடம் திகைத்தாள் ஜெனி. சுசியோ நெடுநாள் கழித்து சந்தித்த தன் தோழியை புன்முறுவலோடு நெருங்கினாள். ஆனால், மனதில் உள்ள கவலையை அவளது முகமே காட்டி கொடுத்தது. மனந்தாங்காமல், தோழியிடம் தன் கசப்புகளை கொட்டித்தள்ளினாள். இந்த புத்தாண்டு வேளையில் தன் கரங்களில் அழகிய குழந்தையோடு வந்திருக்க வேண்டியவள் சுசி. ஆனால், நான்கு மாதம் முன்பு நடந்த ஒரு சிறிய விபத்தில் அவளது குழந்தை அவள் கருவிலேயே மடிந்துவிட்டது. இது தவிர அவளது கணவன் வேலை செய்துவந்த அலுவல் திவாலாகி மூடும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறது. துயரத்திற்கு சுசியின் இல்லத்தில் எந்த குறையும் இப்போது இல்லை. ஜெனியிடம் இருந்து ஆறுதலான வார்த்தைகள் வரலாம் என முகம் நோக்கிப் பார்த்தாள் சுசி. "பிறர் படும் பாடுகளையும் புரிந்து கொண்டு வாழ்வில் நாம் தேற வேண்டும் என கடவுள் வகுத்த சோதனைகள் தான் இந்த துயரங்கள் எல்லாம்" என்றாள் ஜெனி. ஆனால் இந்த வார்த்தைகள் சுசிக்கு இன்னும் விரக்தியை தான் உண்டாக்கின‌... "இவளுக்கு எங்கு தெரியப்போகிறது என் வேதனை! குழந்தையை பறிகொடுத்தவள் நான்தானே!  இவளைப் போல கடவுளுக்கு நன்றி சொல்ல நான் எப்படி ஆலயத்துக்கு செல்ல முடியும்? சரி நன்றி சொல்றேன், ஆனால் எதற்காக நன்றி சொல்ல? கருவைப் பறித்த விபத்து என் உயிரை பறிக்காததற்கா?" என மனதில் இன்னும் சிந்தனைகள் எழும்ப, சுசி இடம் விட்டு அகன்றாள்.

அவளது கால்கள் வழிமாறிச் ஒரு பூக்கடையை அடைந்தது. அவளது மனம் வாடிக் கிடப்பத்தை புரிந்து கொண்டு, "உனக்கு தெரியுமாமா? பூக்களே நமக்கு ஒரு பாடம் தான், உனக்கு என்ன பூ வேணும்?" என பூக்காரி கேட்டாள். "கடந்த சில நாளா எல்லாமே தவறா தாங்க இருக்கு" என தொடர்பே இல்லாமல் சுசியிடமிருந்து பதில் வந்தது. இவர்கள் இப்படி பேசிக் கொண்டிருக்கும் போதே இன்னொரு பெண் அப்பூக்கடையை நெருங்கினாள். "அடடே வாங்க, எல்லாம் ரெடியா எடுத்து வச்சுட்டேன்" என சில ரோஜா செடி தண்டுகளை எடுத்து நீட்டினாள் பூக்காரி. "இதென்ன? பூவே இல்லாத முட்தண்டுகளை எடுத்து கொடுக்கறிங்க, அதையும் அவங்க பேசாம வாங்கிட்டு போறாங்களே" என சுசி வியப்போடு வினாவினாள்.

"அவங்களும் உன்ன மாறிதாம்மா, முகம்வாடிப்போய் இந்த கடைக்கு 3 வருசத்துக்கு முன்னாடி வந்தாங்க. கேட்டபிறகு தான், அவங்க அப்பா தவறிட்டாருனு தெரிஞ்சிது. பத்தாதுக்கு அவங்க மவன்வேற குடிபழக்கத்து ஆளாகி கிடக்கிறான். அந்த புத்தாண்டுக்கு கடவுளுக்கு நன்றி சொல்ற அளவுக்கு அவங்க குடும்பத்துல எந்த நன்மையும் நடக்கலனு சொன்னாங்க... அதே வருசம் தான் என் கணவனும் தவறியிருந்தாரு. எனக்கு புள்ளக்குட்டி இல்ல. அவரு போன பிறகு நான் இந்த கடைய வச்சு புழப்பு நடத்திட்டு வரேன்..." என்றாள் பூக்காரி. "அட பாவமே, ஆனா எதுக்குமா பூ இல்லாத முட்தண்ட கொடுக்கறிங்க?" என சுசி மேலும் வினவினாள்.


"துன்பமாச்சு துயரமாச்சு கடவுளுக்கு நன்றி சொல்ல தவறக்கூடாது. அதுக்கு அடையளாம முட்களை பரிமாறிக்கிறது எங்களுக்குள்ள ஒரு சின்ன பழக்க‌ம்... முட்களுக்காகவும் நன்றி சொல்ல கத்துகிட்டோமா, அவ்வளவு தான்"....

பூக்காரி விசித்திரமாக பேசினாள். "முட்களுக்காகவா?" என சுசியின் புருவங்கள் உயர்ந்தன. 

"எனக்கு எத்தனையோ நன்மைகள கடவுள் கொடுத்தாரு, அதுக்காக அவருக்கு நான் அவருக்கு எந்த நன்றியும் சொன்னதில்ல. எதாவது கவல ஏற்பட்டா மட்டும் உடனே முறயிடுவேன், ஆனா இன்னைக்கு முட்களுக்காகவும் நன்றி சொல்ல கத்துக்குட்டேன். சோதனை வேலைல தான் நாம கடவுளோட ஆறுதல உண்மையிலேயே பெறோம், நாமும் துன்பத்துல வாடுற பிறர ஆற்றி தேற்றனும்னு அந்த நேரத்துல தான் கத்துக்கிறோம்" என பூக்காரி சொல்லி முடித்தாள். "இதே வார்த்தைய தான் என் தோழி ஒருத்தியும் சொன்னா, எனக்கு கடவுளோட ஆறுதல் தேவ இல்லங்க, என் வேதன எனக்குத் தான் தெரியும்" என சுசி மீண்டும் விரக்தியோடு பேச இன்னொரு கை முட்தண்டுகளை தேடி வந்தது. பூக்காரி அதே போல சில முட்தண்டுகளை எடுத்து புன்முறுவலோடு கொடுத்தனுப்பினாள்.

"என்னாச்சு இவங்களுக்கு? எப்படி இவங்களால தங்களுக்கு கிடச்ச வேதனைகள ஏத்துக்கிட்டு கடவுள வேற நேசிக்க முடியுது?" என சுசி குழம்பினாள். அவள் திகைத்து நிற்பதை கண்ட பூக்காரி, "இங்க பாரும்மா, முட்கள் தான் பூவ இன்னும் ரசிக்க வைக்கிது, அதே மாறி தான் நமக்கு வரும் சோதனை. வாழ்க்கையில சோதனையே இல்லாட்டி, அது திகட்டி போகும், சந்தோசத்துக்கு அர்த்தத்த கொடுக்கறதே சோகந்தான், சோகத்துல தான் கடவுள் பிறர ஆற்றிதேற்ற அளவுக்கு தைரியத்த கத்துத்தராரு... இயேசு முட்கள வெறுக்கலம்மா, நம‌க்காக முள்முடி சுமப்பத நினைச்சு அன்போட ஏத்துக்கிட்டாரு... அவர் ஏத்துக்கிட்ட முள்ளு நம்ம‌மேல கொண்ட அன்ப காட்டுது, அதே மாறி எங்க அன்ப காட்ட, கடவுள தூசிக்காம முட்கள ஏத்துக்கிறோம்... முட்களுக்காக கடவுள வெறுக்காதம்மா" என்றாள்.

சுசியின் கண்களில் இருந்து கண்ணீர்த் துளிகள் விழுந்தன‌... "எனக்கும் சில முட்தண்டுகள தாங்க" என கண்களில் கண்ணீரோடும், இதழ்களில் சிரிப்போடும் கேட்டாள்...

முட்களுக்கும் நன்றி சொல்வேன் இயேசுவே...

Wednesday, 1 January 2014

இயேசு உங்களுடையவர், உங்களை அளவில்லாமல் நேசிப்பவர்!

அன்புக்கு நிகரற்ற தேவன் தான் நம் இயேசு. இயேசு கிறிஸ்தவர்களுக்கு உரியவர் என்று சொல்வதை விட இந்த உலகமக்கள் எல்லாருக்கும் உரியவர் என்று கூறினால் சரியாய் இருக்கும்.

மெய்யான பரிசுத்தமுள்ள தெய்வம் ஒருவர் உண்டு. அவருடைய மனித அவதாரமாக இயேசு இவ்வுலகில் மலர்ந்தார். 2000 ஆண்டுகளுக்கு முன்னர் பாலஸ்தீன நாட்டில் ஒரு சாதாரண குடும்பத்தில், ஏழ்மையின் கோலத்தில் அதிசயப் பாலனாக இயேசு பிறந்தார். ஏரோது என்பவன் அரசனாக இருந்த நாட்களில் பாலஸ்தீனத்தில் உள்ள பெத்லகேம் என்னும் சின்ன கிராமத்தில் இயேசு பிறந்தார். கன்னி மரியாளின் கர்ப்பத்தில் பிறந்த அவருடைய அதிசய பிறப்பு நூற்றாண்டுகளுக்கு முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தீர்க்கதரிசன கூற்றுகள் எல்லாம் அந்தந்த காலத்தில் அவரது வாழ்வில் அப்படியே நிறைவேறின.

இயேசு என்கிற பெயருக்கு "அவர் தமது மக்களின் பாவங்களை நீக்கி, அவர்களுக்கு விடுதலையையும், மீட்பையும் அருள்வார்" என்று பொருள். பாவத்தில் வீழ்ந்திருக்கும் மனுக்குலத்தை மீட்டு எடுக்க இயேசு இந்த உலகத்திற்கு வந்தார். மனிதனை பாவத்தில் இருந்து விடுதலையாக்கவே அவர் மனித அவதாரம் எடுத்து வந்தார். இயேசுவே அன்பின் அவதாரம், அவரே இறைவனின் ஒரே அவதாரம், ஒப்பற்ற அவதாரம்...

'இயேசு' பிறந்தபோது அவருடைய அற்புத பிறப்பை பற்றி நல்ல செய்தியை தேவ தூதர்கள் மேய்ப்பர்களுக்கு அறிவித்தனர். பாலஸ்தீனத்திற்கு கிழக்கே இருந்து ஞானிகள் ஒரு அற்புத நட்சிரத்தால் வழிநடத்தப்பட்டு, பெத்தலையில் பிறந்த பரிசுத்த பாலகனை பணிந்து கொள்ள வந்தனர்.


கர்த்தராகிய இயேசுவின் வருகையை பற்றிய செய்தியை உங்களுக்கு அறிவித்து இந்த மகிழ்ச்சியில் நீங்களும் பங்கு கொள்ள உங்களை அழைக்கிறோம். இயேசு கிறிஸ்துவின் பிறப்பு உலக சரித்திரத்தை 'கிறிஸ்துவுக்கு முன்', 'கிறிஸ்துவுக்கு பின்' என்று இரண்டாகப் பிரித்தது, மனோத்தத்துவ ஞானத்தில் மூழ்கிகிடந்த கிரேக்க ஞானத்தை முற்றிலும் மாற்றிவிட்டது. படைபலத்தால் இறுமாப்பு அடைந்திருந்த ரோமப் பேரரசின் அடிப்படையையே ஆட்டி அசைத்தது. சம்பிரதாயத்திலும், சன்மார்க்கத்திலும் வேரூன்றி நின்ற யூத சடங்காச்சாரங்களுக்கு மாபெரும் முற்றுப் புள்ளியை வைத்தது.

இயேசு கிறிஸ்து உலக மக்களுக்கு 'இறை வாழ்வை' ஒரு புதிய வாழ்வை கொண்டு வந்ததே அதற்கு காரணம். பாவத் தன்மையிலும், வியாதியிலும், மரண பயத்திலும், சாபத்திலும், அறியாமையிலும், மூழ்கி கிடந்த மனிதருக்கு மறுமைக்குரிய அருள் நிறைந்த ஒரு புதிய வாழ்வை அவர் எடுத்து வந்தார்.

தன் பிறப்பிலும், வாழ்க்கையிலும் அதிசயமானவராக விளங்கினார். பேச்சிலும், பிரசங்கத்திலும், போதனையிலும் இறைவனின் அதிகாரத்தை வெளிப்படுத்தினார். அவர் செய்த அற்புத செயல்களிலும், நற்தொண்டுகளிலும் தெய்வத்தின் ஆற்றலையும் அன்பையும் மனிதனுக்கு வெளிப்படுத்தி காண்பித்தார். இயேசு கிறிஸ்து ஒரு மகாத்மாவாக பணியாற்றி புகழைப் பெற இவ்வுலகில் பிறக்கவில்லை. 'சாகப் பிறந்த இயேசு' என்று கூறினால் அது மிகையாகும். 'சாக பிறந்தாரா?' என வியப்புடன் நீங்கள் கேட்கலாம். ஆம், பாவத்திற்கான பிராயசித்த பலியாக பரமன் இயேசு மரிக்க வேண்டியது அவசியமாய் இருந்தது. அவர் சிலுவையில் அறையப்பட்ட போதும் உத்தமனாகவே நியாயந்தீர்க்கப்பட்டார். இயேசுவின் மரணத்தோடு அவரது வாழ்க்கை முடியவில்லை.  மரணத்தையும் பாதாளத்தையும் ஜெயித்தவராக நம் தேவன் உயிர்த்தெழுந்தார். பலருக்கும் தரிசனம் கொடுத்த ஆண்டவராகிய இயேசு உயிர்த்தெழுந்து 40 நாட்களுக்கு பிறகு பரமேறிச் சென்றார்.

'கடவுள் கடவுளாகவே இருக்கட்டும், நான் நானாகவே இருக்கிறேன்' என்பது அநேக மக்களது எண்ணம். அதாவது அவர்களுக்கும் இறைவனுக்கும் இடையே ஒரு உள்ளான, உண்மையான, உறுதியான உறவு கிடையாது. அப்படிப்பட்டவர்கள் வாழ்க்கையில் தங்கள் குணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறார்கள். கெட்ட பழக்கங்களில் இருந்து விடுதலையில்லாமல் துடிக்கிறார்கள். வாழ்க்கையில் அழகும், ஆனந்தமும், ஆசீர்வாதமும் பெற்று அனுபவியாமல் திசைகெட்டு அலைகிறார்கள். தெய்வமே தன்னைத் தாழ்த்தி, உலகத்தில் எந்த மனிதனும் அவருடைய அன்பையும் ஆற்றலையும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் இவ்வுலகில் பிறந்தார்.


இயேசு உலகத்தில் பிறந்தது பாவிகளை தண்டித்து அழிப்பதற்காக அல்ல. தாழ்ந்தவர்களை சீர்தூக்கவும், அன்பினால் நிரப்பவும், பரிசுத்தப் படுத்தவுமே இயேசு மனிதராக பிறந்தார். உங்களை நேசிக்கிற இயேசு கிறிஸ்து உங்களுக்காக இந்த உலகத்திற்கு மனிதனாக வந்தார், உங்கள் பாவங்களுக்காக, உங்களுக்கு பதிலாக சிலுவையில் அறையப்பட்டு, இரத்தம் சிந்தி மரித்தார். மூன்றாம் நாள் உயிர்தெழுந்தார். இன்றைக்கும் ஆண்டவராகிய இயேசு உயிருடன் இருக்கிறார். நினைவில் கொள்ளுங்கள், அவர் உங்களை அளவில்லாமல் நேசிக்கிறார், நீங்கள் வெறுத்து தள்ளினாலும், அவர் உங்களை நேசிப்பார், உங்களுக்காக கரம்விரித்து காத்திருப்பார். ஏனெனில் நம் தேவன் அன்பின் உருவானவர். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ளும் போது அவர் உங்கள் உள்ளத்தில் பிறக்கிறார். இயேசுவின் பிறப்பும், வாழ்க்கையும் உலக சரித்திரத்தை இரண்டாகப் பிரித்தது போல இயேசு உங்கள் உள்ளத்தில் வந்து தங்கும் போது உங்கள் வாழ்க்கை மறுமலர்ச்சியைப் பெறும், உங்கள் வியாதியும் பிரட்சனையும் கடந்துபோகும். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மேல் நீங்கள் முழு நம்பிக்கை வைத்து அவரை ஏற்றுக்கொள்வீர்களா?

மனிதனுடைய சரீரம் அசுத்த பழக்க வழக்கங்களில் மூழ்கி அழிய பிசாசினால் உருவாக்கப்பட்டதல்ல. மிருகத் தன்மையை வெளிப்படுத்த மிருகத்திலிருந்து தோன்றியது அல்ல. 'மனித சரீரம் தெய்வத்தால் சிருஷ்டிக்கப்பட்டது என்றும் இறைவன் தங்கும் ஆலயம்' என்றும் பைபிள் போதிக்கிறது. தேவனுடைய பிரசன்னமும் பரிசுத்தமும் மனித உள்ளத்தை ஆட்கொண்டு அவருடைய அன்பும் ஆற்றலும் யாவருக்கும் வெளிப்பட வேண்டும் என்பதே இறைவனுடைய திருவுள விருப்பம் ஆகும். கடவுளுடைய இந்தத் திட்டம் மனிதனுடைய வாழ்வில் இடம்பெறும் வரை மனிதனுக்கு நிலையான அமைதியும் நிறைவான மகிழ்ச்சியும் கிடைப்பது இல்லை. இந்த கிருபையை இலவசமாக கொடுக்கவே இயேசு இவ்வுலகத்திற்கு வந்தார்.

ஆண்டவராகிய இயேசுவிற்கு உங்கள் உள்ளத்தில் இடமளியுங்கள். அவரை உண்மையுடன் நம்பினவர்கள். அவரால் சந்திக்கப்பட்டவர்கள் புதிய மனிதர்களாக மாறினார்கள். இன்றும் ஆண்டவராகிய இயேசுவை விசுவாசித்து, அவரை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு பின்பற்றுகிறவர்கள் உள்ளத்தில் உலகத்திற்கு ஒளியாக வந்த இயேசுவின் ஜீவஜோதி பிராகசிக்கிறது.


இயேசு உங்களுக்காகவே. அவர் உங்கள் வாழ்வை நிறைவாக்க வல்ல தேவன். சுகவீனம் அடைந்த மக்களை குணமாக்கி, மரித்தோரை உயிர்பித்து, பாவிகளை மன்னித்து புதுவாழ்வு அளித்த அன்புத் தெய்வம் இயேசுவுக்கு உங்கள் மனதில் இடம் தாருங்கள். அதுவே நீங்கள் கொண்டாடக் கூடிய நன்னாள். இது ஏதோ ஆடம்பரமான வெளிவேசமல்ல, மதமாற்றமல்ல, உள்ளான மனமாற்றமும், குணமாற்றமும் ஆகும். உள்ளத்தால் நிறைந்த மெய்யான மனமாற்றமே எப்பொழுதும் நமக்கு இன்றியமையாதது. இந்த மகிழ்ச்சியை அனுபவித்தவர்களால் அதை மற்றவர்களிடம் சொல்லாமல் இருக்க முடியாது. எனவே தான் உங்களுக்கு இந்த நற்செய்தியை அறிவிக்கிறோம். முதல் முறையாக மனித வர்க்கத்திற்கு மீட்பை அருள வந்த இயேசு கிறிஸ்து மிக விரைவில் நீதியுள்ள நியாயந்தீர்ப்பைக் கொடுக்க இந்த உலகத்திற்கு மீண்டும் வரப்போகிறார். அவரை நீதியுள்ளவர்களாய் சந்திக்க நாம் யாவரும் ஆயத்தப்படுவோம். உங்களுக்கு எங்கள் உள்ளங்கனிந்த நல்வாழ்த்துக்கள்...