ஏப்ரல் 2014 வாக்குத்தத்தம் - கர்த்தர் மேல் நம்பிக்கை வைத்து கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான் - எரேமியா 17:7

Friday, 14 March 2014

பாவம் என்றால் என்ன? இதெல்லாம் பாவமா?


நியாப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம் - 1 யோவான் 3:4

நாம் செய்யும் காரியங்களில் எது சரி, எது தவறு என கண்டறிய தேவனின் வார்த்தையை நாட வேண்டும். அதனை அறிந்தும் அந்த வார்த்தைக்கு நாம் செவி கொடுக்காவிட்டால் பாவம் செய்கிறோம். பாவம் நமக்கும் தேவனுக்கும் நடுவாக பிரிவினை உண்டாக்குகிறது. எனவே, பாவத்தில் நிலைத்து தேவனுக்கு முன்பாக நீதியற்றவர்களாக இல்லாதபடிக்கு அதற்கான வேத‌ வசனங்களையும் விளக்கங்களையும் அறிந்திருப்பது நல்லது. இந்த பதிவில் பாவத்திற்கென‌ வேதம் கொடுக்கும் சில விளக்கங்களைப் பார்ப்போம்.

1. அவிசுவாசம் ஒரு பாவமே

எபிரேயர் 3:12 - சகோதரரே, ஜீவனுள்ள தேவனை விட்டு விலகுவதற்கு ஏதுவான அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் உங்களில் ஒருவனுக்குள்ளும் இராதபடிக்கு நீங்கள் எச்சரிக்கையாயிருங்கள்.

தேவனின் வார்த்தைக்கு கீழ்ப்படிந்து தன்னை பாவத்தில் இருந்து முற்றிலும் காத்துக் கொண்ட மனிதன் எவனும் இல்லை என வேதம் கூறுகிறது. நம் பாவங்கள் மன்னிக்கப்படும் பொருட்டு இயேசு கிறிஸ்து நமக்கான பலியாக சிலுவையில் ஒப்புக் கொடுக்கப்பட்டார். இந்த தூய இரத்தத்தை ஏற்றுக் கொள்ளாவிடில், நம் பாவங்களுக்கு உரிய பலனை நாம் மறுமையில் அடைந்தே தீர வேண்டும். எனவே, இயேசு கிறிஸ்துவை மனப்பூர்வமாக விசுவாசித்தால் மட்டுமே நாம் இரட்சிக்கப்படுவோம். அவரை விசுவாசியாத பாவம் ஒன்றே அநேகரை நரகத்தில் பங்கடைய செய்கிறது. (யோவான் 16:9; மாற்கு 16:16, வெளி 21:8)

அப்போஸ்தலர் 4:12 - அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை.

2. அநீதியெல்லாம் பாவம்தான்

1 யோவான் 5:17 - அநீதி எல்லாம் பாவம் தான்; என்றாலும் மரணத்துக்கு ஏதுவல்லாத பாவமுமுண்டு.

கர்த்தர் நீதியுள்ளவர். எனவே நம் அவயங்கள் அநீதிக்கல்ல, நீதிக்கே அடிமையாகட்டும். இதற்கு மாறான நம் அக்கிரமங்கள், அநீதிகள் எல்லாம் பாவம் தான். என்றாலும் அவிசுவாசம் ஒன்றைத் தவிர மற்றவை எல்லாம் மரணத்திற்கு அதாவது ஆக்கினைத் தீர்ப்பிற்கேதுவான பாவங்கள் அல்ல. உண்மையாக நாம் மனந்திரும்பி நம் பாவங்களை அறிக்கையிட்டு சிலுவை பலியை ஏற்றுக்கொண்டால் நம் பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்படும். இரட்சிப்பிற்கான சிலுவைபலியை நாம் மறுக்கும் போது, நம் ஆக்கினைத் தீர்ப்பு நிச்சயமாகிறது.

1 யோவான் 1:9 - நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.

3. நற்காரியத்தை செய்யாவிட்டாலும் பாவம்

யாக்கோபு 4:17 - ஒருவன் நன்மை செய்ய அறிந்தவனாயிருந்தும், அதைச் செய்யாமற் போனால், அது அவனுக்குப் பாவமாயிருக்கும்.

மனம் அறிந்த ஒரு நற்காரியத்தை செய்யாமல் விட்டாலும் அது அந்த மனிதனுக்கு பாவமாக எண்ணப்படும். நம்மால் இந்த நற்காரியத்தைச் செய்ய முடியும் என்கிற பட்சத்தில், அதனை தட்டிக் கழிக்காமல் செய்து முடிக்க வேண்டும். மனமறிந்த நற்காரியங்களை செய்து, பொல்லாங்காய் தோன்றுகிற அனைத்து தீய செயல்களில் இருந்து விலகி நடந்தால் நாம் நீதியில் நிலைத்திருப்போம்.

கலாத்தியர் 6:9,10 - நன்மை செய்கிறதில் சோர்ந்து போகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்து போகாதிருந்தால் ஏற்ற காலத்தில் அறுப்போம். ஆகையால் நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத் தக்கதாக, யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மை செய்யக்கடவோம்.

4. பிறரை அவமதிப்பது பாவமாகும்

நீதிமொழிகள் 14:21 - பிறனை அவமதிக்கிறவன் பாவஞ்செய்கிறான்; தரித்திரனுக்கு இரங்குகிறவனோ பாக்கியமடைவான்.

பிறரை அவமதிக்கும் வகையில் நாம் என்ன செய்தாலும், பேசினாலும் அது பாவமே. இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிற எவனும் தனக்கடுத்தவனை நேசித்து அவனை அவமதியாமல் நடக்கிறான். தனக்கு ஒருவன் எவைகளைச் செய்ய வேண்டும், தன்னிடத்தில் பிறன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறோமோ அவ்வாறே நாம் பிறரிடத்தில் கனிவோடு நடந்து கொள்ள வேண்டும்.

மத்தேயு 7:12 - ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச் செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்; இதுவே நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களுமாம்.

5. தீய நோக்கம் பாவமே

நீதிமொழிகள் 24:8,9 - தீவினை செய்ய உபாயஞ்செய்கிறவன் துஷ்டன் என்னப்படுவான், தீயநோக்கம் பாவமாம்.

தீய நோக்கம் கர்த்தருக்கு அருவருப்பானது. தீய எண்ணங்களோடு நாம் எதை செய்தாலும் எதை சிந்தித்தாலும் தீவினை செய்ய பிறரை ஊக்குவித்தாலும் அவைகள் எல்லாம் பாவங்களாகவே எண்ணப்படுகின்றன. கிறிஸ்துவுக்கும் வாழும் எந்த மனிதனும் அவரது சிந்தையை மட்டுமே தரித்து கொள்கிறான். எனவே, தீய எண்ணங்களுக்கு விலகி, கிறிஸ்துவின் சிந்தையில் நிலைத்திருப்பது அவசியம்.

பிலிப்பியர் 2:5 - கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது.

6. தேவனுடைய நாமத்திற்கு மகிமையை கொண்டு வராத யாவும் பாவம்

ரோமர் 2:23,24 - நியாயப்பிரமாணத்தைக் குறித்து மேன்மைபாராட்டுகிற நீ நியாயப்பிரமாணத்தை மீறிநடந்து, தேவனைக் கனவீனம்பண்ணலாமா? எழுதியிருக்கிறபடி, தேவனுடைய நாமம் புறஜாதிகளுக்குள்ளே உங்கள் மூலமாய்த் தூஷிக்கப்படுகிறதே.

தேவனை அறிந்தும், அவரது வார்த்தையை அறிந்திருந்தும் ஒருவன் அவர் கட்டளைகள் படி நடவாவிட்டால் அவன் பாவம் செய்கிறான். அவனது அசுத்தமான செயல்களால் கர்த்தரின் நாமத்திற்கு பிற மக்களால் தூஷணம் ஏற்படும் படி நடந்து கொள்கிறான். இத்தகைய செயல்களில் ஈடுபடும் எவனும் கிறிஸ்துவுக்குள் வந்தவன் அல்ல. அவரில் நிலைத்திருக்கிறேன் என்று சொன்னாலும் அவரோடு அவனுக்கு ஐக்கியமில்லை.

1 யோவான் 1:5,6 - தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை; இது நாங்கள் அவரிடத்தில் கேட்டு, உங்களுக்கு அறிவிக்கிற விசேஷமாய் இருக்கிறது. நாம் அவரோடே ஐக்கியப்பட்டவர்கள் என்று சொல்லியும், இருளிலே நடக்கிறவர்களாய் இருந்தால், சத்தியத்தின்படி நடவாமல் பொய் சொல்லுகிறவர்களாய் இருப்போம்.

7. பிறரை இச்சையோடு பார்ப்பது பாவம்

I கொரிந்தியர் 6:18 - வேசித்தனத்திற்கு விலகியோடுங்கள். மனுஷன் செய்கிற எந்தப் பாவமும் சரீரத்திற்குப் புறம்பாயிருக்கும்; வேசித்தனஞ் செய்கிறவனோ தன் சுயசரீரத்திற்கு விரோதமாய்ப் பாவஞ்செய்கிறான்.

மாம்ச சிந்தை பாவம். ஒரு பெண்ணை இச்சையோடு பார்ப்பவன் தன் மனதில் அவளோடு விபச்சாரம் செய்கிறான். விபச்சாரம், காமம், இச்சை, ஓரினச் சேர்க்கை, வேசித்தனம், மோகம், சுயபுணர்ச்சி என அனைத்து அசுத்த செயல்களுமே பாவம் தான். இத்தகைய செயல்களில் ஈடுபவன் தன் சொந்த சரீரத்தை அசுத்தப்படுத்துகிறான். நமது சரீரம் பரிசுத்த ஆவியானவர் தங்கும் ஆலயம், ஆவியானவர் எங்கேயோ அங்கு விடுதலை உண்டு, எனவே ஆவியால் சரீரத்தின் தீய செய்கைகளை அழித்து, தேவனுக்கு ஏற்ற தூய பலியாக அதனை ஒப்புக் கொடுக்க வேண்டும். மனிதன் தன் மனைவியோடு ஒரே சரீரமாய் ஒருவருக்கொருவர் உண்மையாய் இருப்பதையே கர்த்தர் விரும்புகிறார்.

நீதிமொழிகள் 5: 18 - 20 - உன் ஊற்றுக்கண் ஆசீர்வதிக்கப்படுவதாக; உன் இளவயதின் மனைவியோடே மகிழ்ந்திரு. அவளே நேசிக்கப்படத்தக்க பெண்மானும், அழகான வரையாடும் போலிருப்பாளாக; அவளுடைய ஸ்தனங்களே எப்பொழுதும் உன்னைத் திருப்தி செய்வதாக; அவளுடைய நேசத்தால் நீ எப்பொழுதும் மயங்கியிருப்பாயாக. என் மகனே, நீ பரஸ்திரீயின் மேல் மயங்கித் திரிந்து, அந்நிய ஸ்திரீயின் மார்பைத் தழுவ வேண்டியதென்ன?

8. பிறருக்காக ஜெபியாமலிருப்பது பாவம்

1 சாமுவேல் 12:23 - நானும் உங்களுக்காக விண்ணப்பம் செய்யாதிருப்பேன் ஆகில் கர்த்தருக்கு விரோதமாகப் பாவம் செய்கிறவனாய் இருப்பேன்; அது எனக்குத் தூரமாயிருப்பதாக; நன்மையும் செவ்வையுமான வழியை நான் உங்களுக்குப் போதிப்பேன்.

குடும்பத்துக்காக, சபைக்காக, ஊழியங்களுக்காக, ஆளுகை செய்பவர்களுக்காக, தேசத்திற்காக ஜெபிக்க வேண்டியது நம் கடமை ஆகும். அதில் தவறினால் அது தேவனுக்கு முன்பாக பாவமாகும். நாம் பிறரது நலனுக்காக வேண்டுதல் செய்வதில் கர்த்தர் பிரியப்படுகிறார். பிறருக்காக நாம் இரங்கும் போது, கருத்தோடு ஜெபிக்கும் போது அதற்கான ஆசீர்வாதங்களையும், பலன்களையும் நாம் அடையாமற் போவதில்லை.

1 தீமோத்தேயு 2:1,2 - நான் பிரதானமாய்ச் சொல்லுகிற புத்தி என்னவெனில், எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும் பண்ண வேண்டும்; நாம் எல்லாப் பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம்பண்ணும்படிக்கு, ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும் அப்படியே செய்ய வேண்டும். நம்முடைய இரட்சகராகிய தேவனுக்கு முன்பாக அது நன்மையும் பிரியமுமாயிருக்கிறது.

9. உலக சிநேகம் பாவமே

1 யோவான் 2:15 - 17 - உலகத்திலும் உலகத்தில் உள்ளவைகளிலும் அன்பு கூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்பு கூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை. ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்தில் உள்ளவைகள் எல்லாம் பிதாவினால் உண்டானவைகள் அல்ல, அவைகள் உலகத்தினால் உண்டானவைகள். உலகமும் அதின் இச்சையும் ஒழிந்து போம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.

கர்த்தரை விட உலக காரியங்களை சிநேகிப்போமானால் அது பாவமே (பார்க்க யாக்கோபு 4:4). எனவே, உலக ஐசுவரியங்களுக்கும், சிநேகத்திற்கும், உறவுகளுக்கும் நம் மனதில் முதல் இடம் கொடுப்பதை விட்டு தேவனுக்கு ஏற்ற தூய வாழ்வை வாழ வேண்டும். நம் மனதில் தேவனை முதலாய்த் தேடுவோமானால் இவைகள் எல்லாம் நமக்கு கூட கொடுக்கப்படும். நம் வாழ்வை அவர் தன் கரத்தில் ஏந்தி தேவனே நம்மை குறைவுகளின்றி வழி நடத்துவார்.

மத்தேயு 6:33 - முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.

10. தேவ சித்தத்தை மீறுவது பாவமாகும்

மத்தேயு 7: 21 - பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.

தேவன் நமக்கென ஒரு பாதையை நியமத்திருக்கிறார். உதாரணத்திற்கு, சிலை வழிபாட்டை தேவன் விரும்புவதில்லை. வேதம் கூறுகின்ற தேவனின் இச்சித்தத்தை அறிந்தும் நாம் இயேசு கிறிஸ்துவுக்கும் புனிதர்களுக்கும் சிலைகளை உண்டாக்கி வழிபட்டால் அது மீறுதல் ஆகும். கிறிஸ்துவை அறிந்தும் அவரது சித்தத்திற்கு கீழ்ப்படியாத போது நாம் பாவத்தில் நிலைத்திருக்கிறோம். எனவே தேவ சித்தத்தை விலகி நடப்போமானல் நித்திய ஜீவனையும் இழக்கும் அபாயமிருக்கிறது.

ரோமர் 12:2 - நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.

மேற்கொண்டு படிக்க...
பாவத்தை விளக்கும் பிற வேத வசனங்கள்
மீறுதல்கள் (சங்கீதம் 51:1), அக்கிரமம் (சங்கீதம் 51:2), பொல்லாங்கு (சங்கீதம் 51:4), பிழை (சங்கீதம் 19:12), குற்றம் (சங்கீதம் 19:12), பெரும்பாதகம் (சங்கீதம் 19:13)

வேதத்தில் காணப்படும் சில பாவச் செயல்கள்
யாத்திராகமம் 20:3-17; கொரிந்தியர் 6:9,10; ரோமர் 1:29-31; 1 தீமோத்தேயு 1:9-11; கொலோசெயர் 3:5-8; கலாத்தியர் 5:19-21; மாற்கு 7:20-23

----------------------------------------------------------

(பாஸ்டர். நெல்சன் ஞானக்குமார் அவர்களின் செய்தியை - 50 அஸ்திபாரக் கற்கள் - மையமாக வைத்து எழுதப்பட்டது - நன்றி)

No comments:

Post a Comment

"என் வாய் கர்த்தரின் துதியைச் சொல்வதாக" - சங்கீதம் 145:21