ஏப்ரல் 2014 வாக்குத்தத்தம் - கர்த்தர் மேல் நம்பிக்கை வைத்து கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான் - எரேமியா 17:7

Monday, 17 March 2014

"உனக்கும் ஸ்தீரிக்கும் உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்"

ஏன் பலர் புற்று நோயால் அவதிப்பட்டு வருகின்றனர்? கொத்து கொத்தாக பல உயிர்களைக் கொன்றுத் தீர்க்கும் இந்த நில நடுக்கங்கள் ஏன்? தங்கள் பிள்ளைகளைப் போஷிப்பதற்கு கூட ஏன் மக்கள் இவ்வளவு பாடுபட்டு உழைக்க வேண்டியுள்ளது? இது போன்ற கேள்விகளை நாம் அவ்வப்போது சிந்தியாமல் இருப்பதில்லை. அனுதினமும் ஒரு ஓட்டப் பந்தயம் போல நம் வாழ்வு நகர்ந்து கொண்டிருக்கிறது. சில இடங்களில் சிறுது நேரம் இளைப்பாறி நம் பாடுகளைக் குறித்து இவ்வாறு பெருமூச்சுவிடுகிறோம்...

நிச்சயமாக நம் வாழ்க்கை பயணம் சில நேரங்களில் சரியில்லை. துன்பங்கள், மரணம், வேளைப்பழு, நோய் நொடி... சில நேரங்களில் மனதைக் கொள்ளைக் கொள்ளும் சுபவிசேசங்கள், பதவி உயர்வு, சுற்றுலா, வேடிக்கை, விளையாட்டுகள், பண்டிகைகள்... இது தான் இயற்கை. ஒவ்வொரு மனிதனும் தன் இன்பங்களையும் துன்பங்களையும் கடந்து வந்தே தீர வேண்டும். சரி, ஆனால் நாம் விரும்பாத இந்த துயரச் சம்பவங்கள் நிகழ்வது ஏன்? ஏன் நம் வாழ்க்கை முழுவதும் இன்பமாகவே இருக்கக் கூடாது? இந்த உலகம் ஏன் சீர்கெட்டு போயிருக்கிறது?


நமக்குள் எழும் இந்த கேள்விக்கு வேதம் ஒரு எளிய பதிலைச் சொல்கிறது, இது நம்மீது நாமே இழுத்துக் கொண்ட பாரம்... இந்த வார்த்தைகளை கேட்க நம்மில் பலருக்கு விருப்பமில்லை :-) ஆனால், இப்போதுள்ள இந்த நிலையை மாற்ற முடியுமா? யாரால் முடியும்? எப்படி முடியும்? நமக்கு நித்திய சந்தோஷத்தை, இளைப்பாறுதலைக் கொடுக்க யாரால் முடியும்?

தேவனால் முடியும்... தேவன் ஒருவராலே அன்றி வேறு யாராலும் நமக்கு நித்திய சந்தோஷத்தைக் கொடுக்க முடியாது. ஆனால் அதை அவர் எளிதில் செய்வதில்லை. இதனால் தேவனைத் தூசித்து அவரைக் கடிந்துக் கொள்வோரும், மறுப்போரும் உண்டு. இவ்வாறு நாம் அவரை குற்றப்படுத்தினால் அவர் மனம்மாறி நமக்கு நித்திய இளைப்பாறுதல் அளித்துவிடுவாரா...? நிச்சயமாக இல்லை :‍-) ஏன்?

ஏனெனில் நாம் விரும்பியதை அவர் நமக்கு அளித்துவிட்டார். கர்த்தரின் கரத்தை விட்டு நம்முடைய வாழ்வை நாமே தீர்மானிக்க விரும்பினோம். அவரது பிரசன்னம் இல்லாத ஒரு வாழ்வை, அவரது உதவிக்கரத்தை புறந்தள்ளிய ஒரு உலகத்தை நாம் விரும்பி பெற்றுக் கொண்டோம். ஆம், நாம் விரும்பிய வாழ்வை தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்... எப்படி?

தேவன் மனிதனை சிருஷ்டித்த போது, அவனை அளவில்லாமல் நேசித்து அவன் விரும்பிய வாழ்வை அமைத்துக் கொள்ளும் அதிகாரத்தை அவனுக்கு ஈந்தளித்தார். சுயாதீனமுடையவர்களாய் இருந்தாலும் நாம் அவரது அன்பிலேயே நிலைத்து வாழவேண்டுமென ஏங்கித் தவித்தார். அதற்காக விலக்கப்பட்ட கனிகளும் சோதனையாக வைக்கப்பட்டன‌. பிசாசினால் வஞ்சிக்கப்பட்டு ஆதாமும் ஏவாளும் அக்கனியை புசித்தனர். அவர்கள் அக்கனியைப் புசித்த போதே அவர்கள் தேவ அன்பில் நிலைத்திராத ஒரு வாழ்வையே நேசித்தனர் என்பது புலப்பட்டது. எனவே அவர்கள் நேசித்த வாழ்வை அவர்களுக்கு தேவன் கொடுத்தார். தன் பிரசன்னத்தில் இருந்து அவர்களை அனுப்பிவிட்டார். தேவனின் கரத்தை விட்டு விலகும் போது மனிதன் படவேண்டிய இன்னல்கள் என்ன, அவனுக்கு நயங்காட்டின பிசாசு அவனுக்கு கொடுக்கும் நெருக்கங்கள் என்னென்ன என எல்லாவற்றையும் மனிதன் சோதித்து அறியும் ஒரு பாடமாக அந்த வாழ்வு அமைந்தது. தன் பாடத்தை மனிதன் கற்றுக் கொள்ளும் போது, அவன் விரும்பிய உலக வாழ்வையும், அவன் இழந்த நித்திய வாழ்வையும், தன் அற்புத அன்பையும் அவனுக்கு முன்பு தேவன் எடுத்துக் காட்டினார்.

அந்த பாடத்தின் விளைவு என்ன? அவன் இழந்த நித்திய வாழ்வே அவனுக்கு பெரிதாய்க் கண்டது, தான் இழந்த அன்பு எத்தகையது என்பதை அவன் உணர்ந்து கொண்டான். தேவ கரத்தை மீண்டும் பற்றிக் கொள்ள ஆவலாய் அவரை நோக்கி ஓடி வந்தான். நம் உலக வாழ்வு நாம் இறைவனை மீண்டும் அண்டிச்சேர அவர் நமக்கு வைத்த பரீட்சை. உலக சிற்றின்பங்களை விட்டுத்தள்ளி, அவரது கரத்தைப் பிடிக்க நாம் வாஞ்சிக்கும் போது அவர் மீண்டும் நம்மை அன்போடு அரவணைத்துக் கொள்கிறார். நித்திய வாழ்வை நமக்கு கொடுத்து அவரது சமூகத்தில், மார்பில் சாய்ந்து இளைப்பாற தயை செய்கிறார்...!


நாம் விரும்பிய உலக வாழ்வையும், நாம் இழந்த வாழ்வையும், தன் அற்புத அன்பையும் எப்படி தேவன் எடுத்துக் காட்டினார்? நம்மை அன்போடு அழைக்கும் வண்ணம் தன் கரத்தை விரித்து சிலுவையில் மரித்தாரே... அந்த கல்வாரிக் காட்சியே நம்மை அவரை நோக்கி ஓடிவரச் செய்தது...! நித்திய‌ வாழ்வை நமக்கு திரும்பக் கொடுக்கவும், மீண்டும் தேவ அன்பை நோக்கி நம்மை ஓடிவரச் செய்யவும் இயேசு கிறிஸ்து இவ்வுலகத்திற்கு வந்தார். சிலுவையை சுமந்தார். எப்படி? மனிதன் சீரழித்த கொண்ட வாழ்வையும் இளைப்பாறுதலையும் இயேசுவால் எப்படி மீண்டும் கொடுக்க முடிந்தது?

ஆதி 2:7 - "தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்"

தேவன் மனிதனை சிருஷ்டித்த நாளிலே தன் சுவாசத்தை அவனுக்கு கொடுத்தார். அப்போது அவன் ஜீவாத்துமாவானான். தான் சிருஷ்டித்த சகலவித தாவரங்களையும், மிருக ஜீவன்களையும் அவனிடத்தில் கொடுத்து "பூமியை ஆண்டுக் கொள்ளுங்கள்" என்றார். தான் மனிதனை நேசிப்பது போல, அவனும் தன்னை நேசிக்க வேண்டும் என்ற ஆவல் ஒன்றே அவருக்குள் இருந்தது. அதனைக் கண்டறிய ஒரு சோதனையும் வைக்கப்பட்டது...

ஆதியாகமம் 2:16, 17 - தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி: நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம். ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்.

ஏன் அக்கனியை புசிக்கும் போது மனிதன் சாக வேண்டும்? ஏனெனில் விலக்கப்பட்ட கனியை புசிக்கும் போது, மனிதன் தேவனை புரந்தள்ளுகிறான். அச்செயல் தேவ அன்பை விட்டு பிரிந்து மனம் விரும்பிய வாழ்வை அமைத்து கொள்வதற்கு அடையாளமாகும். தேவனைப் புரந்தள்ளும் போது அவர் தம் சுவாசத்தினால் நமக்களித்த நித்திய வாழ்வும் நம்மை விட்டு விலகிவிடும். எனவே, விலக்கப்பட்ட கனியைப் புசிக்காதபடி தேவன் ஆதாமை எச்சரித்தார். ஆனால் ஆதாம் இளைத்த பாவம் என்ன?

ஆதியாகமம் 3:4-6 - அப்பொழுது சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி: நீங்கள் சாகவே சாவதில்லை; நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப் போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது. அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள்; அவனும் புசித்தான்.

மனிதன் தான் விரும்பிய வாழ்வை தெரிந்து கொண்டான். "சாகவே சாவீர்கள்" என தேவன் விலக்கிய செய்கையை செய்து அவர் தனக்கு அளித்த நித்திய ஜீவனை இழந்து போனான். தான் விரும்பிய உலக வாழ்வை பெற்றுக் கொண்டு தேவனுடைய சமூகத்தை விட்டு பிரிந்தான்.

ஆதியாகமம் 3:17 19,23 - பின்பு அவர் ஆதாமை நோக்கி: நீ உன் மனைவியின் வார்த்தைக்குச் செவி கொடுத்து, புசிக்க வேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தபடியினாலே, பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும்; நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் வருத்தத்தோடே அதின் பலனைப் புசிப்பாய். அது உனக்கு முள்ளும் குருக்கும் முளைப்பிக்கும்; வெளியின் பயிர்வகைகளைப் புசிப்பாய். நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்; நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய் என்றார். அவன் எடுக்கப்பட்ட மண்ணைப் பண்படுத்த தேவனாகிய கர்த்தர் அவனை ஏதேன் தோட்டத்திலிருந்து அனுப்பிவிட்டார்.

ஆனால் நம் தேவனின் அன்பு இவ்வளவு தானா? நிச்சயமாக இல்லை. நாம் தேவ அன்பை விட்டு பிரிந்தாலும், பிசாசு நமக்களித்த பாவ வாழ்க்கையை தெரிந்து கொண்டாலும், தேவன் நம்மை கைவிடவில்லை. மனிதனுக்கும் பிசாசுக்கும் உள்ள உறவை முறித்து நிச்சயமாக பகை உண்டாக்குவேன் என அன்றே வாக்களித்தார். ஒரு பெண்ணின் வித்தைக் கொண்டு பிசாசின் தலையை நசுக்குவேன், அவன் அவர் குதிங்காலை நசுக்குவான் என்று சொன்னார்.

ஆதியாகமம் 3:15 - "உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய்"

இதுதான் இயேசு கிறிஸ்து நமக்களிக்கவிருக்கும் இரட்சிப்பைக் குறித்து வேதம் முன்கூறிய முதல் தீர்க்கதரிசனமாகும். இரட்சிப்பின் காலம் வருகின்ற வரை ஆதாமின் பாவ சாயலிலேயே வித்துகள் பிறந்தனர்.

ஆதியாகமம் 5:1,3 - தேவன் மனுஷனைச் சிருஷ்டித்த நாளிலே அவனைத் தேவசாயலாக உண்டாக்கினார். ஆதாம் நூற்று முப்பது வயதான போது, தன் சாயலாகத் தன் ரூபத்தின் படியே ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குச் சேத் என்று பேரிட்டான்.

இரட்சிப்பை காலம் வந்த பிறகே தேவ சாயலில் வித்து தோன்றியது. இறைவனின் கட்டளையை ஏற்று நடந்த பெண்ணின் கர்ப்பத்தில் தேவகுமாரன் உண்டானார். பாவமிழைத்த ஆதாமின் வித்தாக அல்ல, அவளிடத்தில் உற்பத்தியானது பரிசுத்த ஆவியினால் உண்டானது. ஆதாம் இழந்த போன தேவ சுவாசத்தால் உண்டான குழந்தை அது...! சிருஷ்டிப்பிற்கு பிறகு, தேவசாயலாலும் பரிசுத்த ஆவியாலும் பிறந்த ஒருவர் இயேசுவே.

மத்தேயு 1:20,21 - "...தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளை சேர்த்துக் கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது. அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்..."

ஆதாம் பிசாசால் சோதிக்கப்பட்டது போலவே இயேசு கிறிஸ்துவும் சோதிக்கப்பட்டார். ஆதாமுக்கு அவன் எவ்வாறு நயங்காட்டினானோ, அதைப் போலவே இயேசுவுக்கும் உலகை சுட்டிக் காட்டினான். ஆனால் இயேசு என்ன செய்தார்? ஆதாம் தன் பரிசுத்த ஆவியை இழந்தது போல இயேசு கிறிஸ்து ஒருபோதும் இழக்கவில்லை. தன் ஆவியில் நிலைத்து நின்றவர் தான் நம் தேவகுமாரன்.

லூக்கா 4:5-8 - பின்பு பிசாசு அவரை உயர்ந்த மலையின் மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் ஒரு நிமிஷத்திலே அவருக்குக் காண்பித்து: இவைகள் எல்லாவற்றின் மேலுமுள்ள அதிகாரத்தையும் இவைகளின் மகிமையையும் உமக்குத் தருவேன், இவைகள் எனக்கு ஒப்புக் கொடுக்கப்பட்டு இருக்கிறது; எனக்கு இஷ்டமானவனுக்கு இவைகளைக் கொடுக்கிறேன். நீர் என்னைப் பணிந்து கொண்டால், எல்லாம் உம்முடையதாகும் என்று சொன்னான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: எனக்குப் பின்னாகப்போ சாத்தானே, உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்து கொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.

இவை நாம் கூர்ந்து தியானிக்க வேண்டிய திருமறை வசனங்கள். பிசாசு வஞ்சித்த போது, ஆதாம் தேவன் தனக்கு அருளிய வார்த்தையை புரந்தள்ளினான். தேவனை விட, பிசாசு அளித்த சிற்றின்பங்களே ஆதாமின் கண்களுக்கு பெரிதாய்க் கண்டது. ஆனால், இயேசு கிறிஸ்து "எழுதியிருக்கிறதே" என் சொல்லி தேவ வார்த்தையை நினைப்பூட்டினார். பிசாசைக் கண்டித்து புரந்தள்ளி தேவவார்த்தையை ஏற்றுக் கொண்டார். இது தான் இயேசுவானவர் நமக்கு காட்டிய வாழ்க்கை. நாம் இழந்து போன நித்திய வாழ்வையும், நாம் விரும்பி ஏற்றுக் கொண்ட உலக வாழ்வையும் பிரித்துக் காட்டி தேவ வார்த்தைகளை நம் மனதில் எழுதினார்.

இவைகள் எல்லாம் நம் கண்முன் அவர் விட்டுச் சென்ற உன்னத கால்தடங்கள். போதனைகளால் நம்மை மீட்டுக் கொண்டாரா? அல்ல, நம் அன்பை பெற, நமக்கும் பிசாசுக்கும் பகை உண்டாக்க சிலுவையை சுமந்தார். அவரது கல்வாரி அன்பைக் கண்ட நொடியே, மனிதன் பிசாசு தனக்களித்த உலகைவிட்டு கர்த்தரை சரணடைந்தான். "பகை உண்டாக்குவேன்" என சொல்லியவாறே, நம் மனதில் பகை உண்டாக்கினார் தேவன். தேவ மனிதர்களின் போதனைகளும் ஓலைகளில் எழுதப்பட்ட வார்த்தைகளும் அல்ல, கல்வாரி அன்பே நம்மை பாவத்தில் இருந்து மீட்டுக் கொண்டது. இயேசு கிறிஸ்துவின் தூய இரத்தமே நம்மை சுத்திகரிக்க முடியும். அவர் ஒருவரால் மட்டுமே நமக்கு பிசாசின் பிடியில் இருந்து விடுதலை கொடுக்க முடியும், அந்த கல்வாரி அன்பே மனிதன் தேவனை முழு மனதோடு நேசிக்கச் செய்தது. எப்படி? பேதுரு நம் கண்ணே அத்தாட்சியாய் நிற்கிறார்...


"ஆண்டவரே சாவானாலும் சிறையானாலும் உம்மை பின் தொடர்வேன்" என பேதுரு சொன்ன போது, "சேவல் கூவுகிறதற்கு முன்னே மூன்றுவிசை நீ என்னை மறுதலிப்பாய்" என்று இயேசு சொன்னார். சொன்ன படியே கிறிஸ்து சிலுவையில் அறையப்படும் முன்பு, பேதுரு மூன்று முறை மறுதலித்து தன் உயிரைக் காத்துக் கொள்ள ஓடிப் போனார். சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்த கர்த்தர் பேதுருவிடம் "என்னை நேசிக்கின்றாயா?" என்றார். அதற்கு பேதுரு, "ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர், நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும் நீர் அறிவீர்" என்று சொன்னார். ஆனால் இந்த முறை இயேசு பேதுருவை நோக்கிச் சொன்னார்,

யோவான் 21:18,19 - நீ இளவயதுள்ளவனாய் இருந்த போது உன்னை நீயே அரைக் கட்டிக் கொண்டு, உனக்கு இஷ்டமான இடங்களிலே நடந்து திரிந்தாய்; நீ முதிர் வயதுள்ளவனாகும் போது உன் கைகளை நீட்டுவாய்; வேறோருவன் உன் அரையைக் கட்டி, உனக்கு இஷ்டமில்லாத இடத்துக்கு உன்னைக் கொண்டு போவான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். இன்னவிதமான மரணத்தினாலே அவன் தேவனை மகிமைப்படுத்தப் போகிறான் என்பதைக் குறிக்கும் படியாக இப்படிச் சொன்னார். அவர் இதைச் சொல்லிய பின்பு, அவனை நோக்கி: என்னைப் பின்பற்றிவா என்றார்.

பேதுரு தனக்காய் உயிரையும் விடத் துணிந்தவர் என்று இயேசு சொல்லிக் காட்டிய வேதவசனம் இது. உயிருக்கு அஞ்சி தேவனுக்கு கொடுத்த வார்த்தையை மறந்து ஓடிப் போன பேதுரு இவர் தான். கல்வாரிக் காட்சிக்கு பின்பு, உயிரையும் ஈந்து சுவிசேசத்தை போதித்த பேதுருவும் இவர் தான். சுவிசேஷத்தை போதித்தமைக்காக பேதுருவும் சிலுவையில் அறையப்பட்டார். இயேசு கிறிஸ்துவுக்கு நிகராய் என்னை அறையாமல் தலைகீழாக சிலுவையில் அறையவேண்டும் என்று பேதுரு சொன்னாராம். அவர் விரும்பிய வண்ணமே தண்டனை நிறைவேற்றப்பட்டது. நல்ல போராட்டம் போராடி தேவ இராஜ்ஜியத்துக்குள் நுழைந்தார். இந்த மனமாற்றம் ஏன்? சிலுவையில் கரம்விரித்து அழைத்த கர்த்தரை நோக்கி மனிதன் மீண்டும் ஓடினான். அன்றே "எல்லாம் முடிந்தது", வேத வாக்கியம் நிறைவேறியது...


ஆதியாகமம் 3:15 "உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய்"

தேவன் தனக்களித்த ஜீவனை இழந்த மனிதன், அதை மீண்டும் பெற்றுக் கொண்டான், அவன் மனந்திரும்பி தன்னிடத்தில் வந்த போது நேச கர்த்தர் மீண்டும் அளித்தார். பரலோகத்தில் தன்னுடன் நிலைத்து வாழ அவர் அளித்த கிருபை எவ்வளவு இன்பமானது.

"இயேசு மறுபடியும்....அவர்கள் மேல் ஊதி: பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்றார்" - யோவான் 20:21,22

நீங்கள் இரட்சிக்கப்பட்டு விட்டீர்களா?

No comments:

Post a Comment

"என் வாய் கர்த்தரின் துதியைச் சொல்வதாக" - சங்கீதம் 145:21