ஏப்ரல் 2014 வாக்குத்தத்தம் - கர்த்தர் மேல் நம்பிக்கை வைத்து கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான் - எரேமியா 17:7

Sunday, 16 March 2014

உன்னைச் சொந்தங் கொண்டாடும் உன்னதர்...


நம்மை அளவில்லாமல் நேசிக்க இயேசு கிறிஸ்துவை விட மேலான தெய்வம் இல்லை என்றே சொல்லலாம். பரிசுத்த வேதாகமத்தை மனதார விசுவாசித்து படிக்கும் போது இயேசுவின் அன்பிலிருந்து நம்மால் தப்ப முடியாது. தன் தூய அன்பால், வேத வார்த்தைகளால் நம் மனதாய் எளிதாய் கொள்ளையிட்டு விடுவார். இது எப்படி சாத்தியமாகிறது? ஏன் கிறிஸ்துவுக்குள் வந்தவன் தேவனை அதிகமாக உரிமை பாராட்டுகிறான்? தன் தேவனை "அப்பா பிதாவே" என்று அன்போடு அழைத்து, நேசித்து மகிழ அவனால் எப்படி முடிகிறது? ஏன் என்று நீங்கள் சிந்தித்தது உண்டா?

ஏனெனில் இயேசு கிறிஸ்து நமக்காக அந்தளவு அன்பும் பரிவும் கொண்டிருக்கிறார். வேதம் சொல்வது போல, நாம் அவரை முதலாய் நேசிக்கவில்லை, அவர் நம்மை முதலாய் நேசித்து நமக்காய் அவரை ஒப்புக் கொடுத்தபடியினால் நாம் இவ்வாறு தேவ அன்பில் தத்தளித்து மகிழ்கிறோம். இயேசு கிறிஸ்து காட்டிய பாதை பிற வழிகளில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. தேவனை நமக்கு எல்லாரும் எஜமானனாக, சிங்காசனத்தில் வீற்றிருக்கும் அதிபதியாக சித்தரிப்பதை விட ஒரு நல்ல தாயாக, நல்ல தந்தையாக, நல்ல சகோதரனாக, ஆத்ம நேசராக, உயிர்த் தோழனாக பரிசுத்த வேதம் சித்தரிக்கிறது. இவ்வாறு நம்மை மகனாக, மகளாக, மணப்பெண்ணாக, தோழனாக அழைத்து மகிழும் தேவன் இயேசு கிறிஸ்துவை அன்றி வேறு யாருண்டு?

நம்மை ஒரு வேலையாளாக, தன் கரத்தின் சிருஷ்டியாக, தன் மனம் விரும்பும் காரியத்தை மட்டும் செய்ய பயன்படுத்தும் ஒரு அடிமையாக அவர் எண்ணாமல், நம்மை அவரது அன்பிற்கு முழு தகுதியுடையவர்களாக‌ காண்கிறார். அதன் காரணமாகத் தான், "தேவன் நம் கண்ணீரைத் துடைப்பார்", "மார்போடு அணைப்பார்", "கரத்தை பிடித்து வழிநடத்துவார்", "முத்தமிடுவார்" என பல அன்புமிகுந்த வார்த்தைகளை வேதம் கூறுகிறது. தேவனுக்கும் மனிதனுக்கும் இத்தகைய பாசப் பரிமாறுதல்களை வேறெந்த நூல்களிலும் காண முடியாது. எனவே ஒரு எஜமானிடம் ஒரு அடிமை கரமேந்தி நிற்பது போல, வெறும் கட்டளையை ஏற்று நடக்கும் ஒரு வேலைக்காரனாக நாம் தேவனிடத்தில் செல்லத் தேவையில்லை. "அப்பா பிதாவே" என்று அழைக்கும் உரிமையோடு, அன்போடு அவரிடத்தில் ஜெபித்து மகிழலாம், அனுதினமும் அவரது பிரசன்னத்தில் ஆனந்தமாக நம் வாழ்க்கையை நடத்தலாம். இத்தகைய சந்தோஷத்தை உரிமையை நமக்கு ஈந்தவர் இயேசு கிறிஸ்து மட்டுமே...

வேதம் கூறும் இன்னொரு அழகிய செய்தி இதுதான். மனிதன் தேவனை நேசிக்காவிட்டாலும், கர்த்தர் அவனை நேசிப்பதை விடுவதில்லை. மனிதன் பாவம் செய்து அவரது சமூகத்தில் இருந்து விலகி மறைந்து கொண்டாலும், தேவன் அவனை தேடிக் கொண்டு கவலையோடு அலைந்து திரிகிறார். ஆதாம் பாவமிழைத்து கர்த்தரின் கண்களில் இருந்து மரங்களுக்குள் ஒளிந்தாலும் தேவன் அவனை சத்தமிட்டு அழைத்து கொண்டு தோட்டத்திற்குள் வருகிறார். பாவமிழைத்த போதிலும் நம்மைத் தேடி வந்த தெய்வம் அவர் ஒருவரே. நாம் பாவிகளான போதிலும் நமக்காய் இவ்வுலகில் மனிதனாக பிறந்தவர் அவர் ஒருவர் தான். நம் அன்பைப் பெற, நாம் அந்த அன்பில் நிலைத்திருக்க சிலுவையை சுமந்த தெய்வம் இயேசு ஒருவர் மட்டுமே. "நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புதலுக்கு அழைக்க வந்தேன்" என்றவர், பாவிகளுக்காக அவமானத்தையும், ஆக்கினையையும், ஆணிகளையும் வாங்கிய ஒரே தேவன் அவர்.


நம்மிடமிருந்த அவர் விரும்பும் ஒரே காரியம் அன்பு மட்டும் தான். வேதத்தின் எல்லா நீதிகளிலும் அன்பே பிரதானம், இயேசு கிறிஸ்து நமக்கு கற்பித்த முதலாம் கற்பனை அது. நம் அன்பில் பிரியப்படுகிற தேவன் அவர். "உம்மை நேசிக்கிறேன்" என்று பேதுரு சொல்ல சொல்ல, "என்னை நேசிக்கின்றாயா?" என்று இயேசு கேட்டு கொண்டே இருந்தார். பேதுரு "உம்மை நேசிக்கிறேன்" என்று திரும்பத் திரும்பச் சொல்ல அதைக் கேட்டு கேட்டு இயேசு மகிழ்ந்தார். ஒரு கட்டத்ததில் பேதுரு மனமுடைந்து "ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் அறிந்தவர், நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும் நீர் அறிவீர்" என்றே சொல்லிவிட்டார். அந்தளவு நம் அன்பை பெறத் துடிக்கும் அற்புதமான இறைவன் தான் இயேசு கிறிஸ்து.

உலகை விட்டு பரமேறிச் சென்ற போது கூட, உங்களைத் தனித்துவிட எனக்கு மனதில்லை, உங்களுக்காக பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனை விட்டுச் செல்வேன், அவர் உங்களுக்குள் வாசம் செய்வார் என பிரியாவிடை கொடுத்தார் இயேசு. கர்த்தரின் அன்பை விளக்கிச் சொல்ல முடியாது, அளவிட முடியாது. அவர் அன்பை ருசித்தால் மட்டுமே நாம் அவரை அறிந்து கொள்ள முடியும், இதை உணர்த்தியே, யோவான் "அன்பில்லாதவன் தேவனை அறியான், ஏனெனில் தேவன் அன்பாகவே இருக்கிறார்!" என்று எழுதினார்.

இதனை சீடர்களின் வாழ்வில் இருந்தே காணலாம். சிலுவைப்பாடுகளின் போது தங்கள் உயிருக்கு அஞ்சி அவரை விட்டு ஓடிப்போன சீஷர்கள் அனைவரும் அதே கிறிஸ்துவை போதித்து தங்கள் உயிரை இரத்த சாட்சிகளாக விட்டுச் சென்றனர். கிறிஸ்துவுக்குள் வந்த ஒருவன் தன் தேவனை அதிகமாய்ச் சொந்தம் பாராட்டும் காரணம் இதுதான், வேறெவரும் தனக்குத் தராத தயவை, அன்பை அவன் கிறிஸ்துவினிடத்தில் இருந்து கண்டு கொண்டான். அந்த அன்பே அவனை கிறிஸ்துவுக்குள் நிலைத்து வாழ, சிலுவையை ஏற்றுக் கொண்டு அவரை பின்தொடர வல்லமை தருகிறது. ஏனெனில் அன்பு சகலமும் தாங்கும், சகலமும் சகிக்கும்...!

அந்த அன்பையும், நம் தேவன் நம்மீது கொண்டுள்ள நேசத்தையும் நீங்கள் அறிய வேண்டாமா? நம்மை விதவிதமாய்ச் சொந்த கொண்டாடும் சில வசனங்களையும் இயேசு கிறிஸ்துவின் அன்பை அழகாய் விளக்கிச் சொல்லும் ஒரு வீடியோவையும் இப்போது காணலாம்...


தாய் மறந்தாலும் அவர் மறப்பதில்லை, உன்னை தாயாக தேற்றுவார்!

"ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை; ஒருவனை அவன் தாய் தேற்றுவது போல் நான் உங்களைத் தேற்றுவேன்" - ஏசாயா 49:15, 66:13

ஒரு தந்தைப் போல உனக்கு இரங்குவார், உன்னை தன் மகனாக தெரிந்து கொண்டவர் அவர்!

"தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல, கர்த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார்; அந்தப்படி, திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத் தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திர சுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள்" - சங்கீதம் 103:13, ரோமர் 8:15

பாவியான நம்மை தன் சகோதரன் என்றழைக்க அவர் வெட்கப்படுவதில்லை...

"எப்படியெனில், பரிசுத்தஞ் செய்கிறவரும் பரிசுத்தஞ் செய்யப்படுகிறவர்களுமாகிய யாவரும் ஒருவரால் உண்டாயிருக்கிறார்கள்; இதினிமித்தம் அவர்களைச் சகோதரரென்று சொல்ல அவர் வெட்கப்படாமல்: உம்முடைய நாமத்தை என் சகோதரருக்கு அறிவித்து, சபை நடுவில் உம்மைத் துதித்துப் பாடுவேன் என்றும்; நான் அவரிடத்தில் நம்பிக்கையாயிருப்பேன் என்றும்; இதோ, நானும், தேவன் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் என்றும் சொல்லியிருக்கிறார்" - எபிரேயர் 2:11,12,13

ஒரு மணவாளனை போல உன்னுடன் நிலைத்திருக்க விரும்புகிற கர்த்தர்...

"உன் சிருஷ்டிகரே உன் நாயகர்; சேனைகளின் கர்த்தர் என்பது அவருடைய நாமம்; இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் மீட்பர், அவர் சர்வ பூமியின் தேவன் என்னப்படுவார். கைவிடப்பட்டு மனம் நொந்தவளான ஸ்திரீயைப் போலவும், இளம் பிராயத்தில் விவாகஞ் செய்து தள்ளப்பட்ட மனைவியைப் போலவும் இருக்கிற உன்னைக் கர்த்தர் அழைத்தார் என்று உன் தேவன் சொல்லுகிறார்; நித்திய விவாகத்துக்கென்று உன்னை எனக்கு நியமித்துக் கொள்ளுவேன்; நீதியும் நியாயமும் கிருபையும் உருக்க இரக்கமுமாய் உன்னை எனக்கு நியமித்துக் கொள்ளுவேன். உண்மையாய் உன்னை எனக்கு நியமித்துக் கொள்ளுவேன்; நீ கர்த்தரை அறிந்து கொள்ளுவாய்" - ஏசாயா 54:5,6, ஓசியா 2:19,20

நம்மை ஊழியக்காரர் என சொல்ல விரும்பாத நண்பன் நம் தேவன்...!

"இனி நான் உங்களை ஊழியக்காரரென்று சொல்லுகிறதில்லை, ஊழியக்காரன் தன் எஜமான் செய்கிறதை அறிய மாட்டான். நான் உங்களைச் சிநேகிதர் என்றேன், ஏனெனில் என் பிதாவினிடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன்" - யோவான் 15:15

உங்களை இவ்வளவாய் நேசிப்பவர் இயேசு...!

No comments:

Post a Comment

"என் வாய் கர்த்தரின் துதியைச் சொல்வதாக" - சங்கீதம் 145:21