வழக்கம் போல அந்த குயவன் அன்று தன் வேலையைத் தொடங்கினான். களிமண்ணை எடுத்து வந்து அதை சுத்தமாகச் சலித்து, தேவையில்லாத குப்பைகளையும், கற்களையும், இலைச் செருகுகளையும் அதிலிருந்து எடுத்துப் போட்டான். பின்பு, தண்ணீரைப் பதமாக ஊற்றி, நன்றாய் பிசைந்து அழகான பாத்திரமாய் அதை வனைந்தான். வனைந்த பாத்திரத்தை நெருப்பில் சுட்டான், அப்போது அது உறுதியானது. நல்ல வழுவழுப்போடு திடமான பாத்திரமாய் இருந்தது, எந்த பிசகும் அதில் இல்லை. செய்ய வேண்டிய வேலைகள் எல்லாம் முடிந்த பின்பு, அப்பாத்திரத்தைச் சந்தைக்கு கொண்டு வந்தான். ஒரு பெண் அதனை விரும்பி நல்ல விலைக்கு பெற்றுக் கொண்டாள். தன் கூடையில் வைத்து தலைமேல் சுமந்து கொண்டு வீட்டை நோக்கிச் சென்றாள்.
கூடையில் வைக்கப்பட்ட பாத்திரம் அங்கும் இங்கும் மோதியது, தாளமிட்டுக் கொண்டே அந்த பெண்ணோடு வேறிடம் நோக்கிச் சென்றது. தன் தாள ஓசையைக் கேட்டு அதனால் இரசிக்காமல் இருக்க முடியவில்லை. தன்னை நேசித்தது, தன் தாளத்தை நேசித்தது, ஆனால் அதனிடம் ஒரு இனம்புரியாத வெறுமை...
அந்த பெண் தன் வீட்டை அடைந்தாள். தன் பழைய பாத்திரங்களோடு, இப்புதிய பாத்திரத்தையும் வைத்தாள். தன்னைப் போன்ற பலரைக் கண்டு அவைகளை நேசித்தது. அவர்களைக் காட்டிலும் தான் பளபளப்போடும் திடமோடும் உள்ளதை நினைத்து தன்னை மெச்சிக் கொண்டது. ஆனால் அந்த வெறுமை மட்டும் அதனை விட்டு நீங்கவில்லை...
அப்பெண்ணும் சில நாட்களாக தன் பழைய பாத்திரங்களையே பயன்படுத்தி வந்தாள். சிலவற்றில் தண்ணீர் நிரப்பி வைத்தாள், சிலவற்றை சமைக்கப் பயன்படுத்தினாள். புது பாத்திரத்திற்கான நேரமோ இன்னும் வரவில்லை. அவளிடம் தன் நண்பர்கள் படும் அத்தனை பாடுகளையும் அமைதியாக கண்டுகொண்டு இருந்தது. வேலை முடிந்த பின், அப்பெண் தன் பாத்திரங்களை கழுவி கவிழ்த்துவிட்டு போனாள். புதுபாத்திரத்தால் இப்போது நலம் விசாரிக்காமல் இருக்க முடியவில்லை. தன் நண்பர்களிடம் அவர்கள் பட்ட பாட்டைச் சொல்லி பெருமூச்சு விட்டது. அதனைக் கேட்டதும் அவைகள் சிரித்தன, குயவன் நம்மை வனைந்ததே அதற்குத்தான் என்றன. புதுபாத்திரத்தால் இதனை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தன் பளபளப்பு என்றுமே மாறாது என்றது, தனக்கு அவர்கள் நிலை நேரிடப் போவதில்லை என்று தன்னைத் தானே தேற்றிக் கொண்டது. ஆனால் அந்த வெறுமையான உணர்வு இன்னும் அதனை விட்டு நீங்கவில்லை. அதற்கும் அக்காரணம் புரியவில்லை.
நாட்கள் சென்றன. புதுபாத்திரத்திற்கான நாள் வந்தது. அப்பெண் அதனை எடுத்து அடுப்பில் வைத்தாள், நெருப்பு மூட்டினாள்... பாத்திரம் சூடானது, பளபளப்பு கருகிப் போனது... என் நண்பர்கள் சொல்லியது உண்மைதானா? என் பளபளப்பு அவ்வளவுதானா? இவள் என்னை என்ன செய்யப் போகிறாள்?... புதுபாத்திரத்திற்கு பல விதமான யோசனைகள். யோசிக்க யோசிக்க அவள் அதில் தண்ணீர் ஊற்றினாள். பாத்திரம் தண்ணீரால் நிரம்பியது, உடனே, ஓர் மாற்றம்... நல்ல இதமான மாற்றம்...
அப்போது தான் தன் வெறுமை தன்னை விட்டு காணாமல் போனது அதற்கு புரிந்தது. "என் பளபளப்பு நிலையல்ல, குயவன் வனைந்த நோக்கந்தான் எனக்கு நிலையானது, என் வெறுமையை நீக்கவல்லது" என்றது. அந்த நேரமே தன் நண்பரோடு சேர்ந்து கொண்டது, குயவன் தனக்களித்த வேலையைச் சந்தோஷமாய் செய்தது. வெறுமை நீங்கின தன் வாழ்வை நேசித்தது...
இது தான் வேதம் கூறுகின்ற மனித வாழ்க்கை... இறைவன் படைத்த அனைத்து உயிர்களைக் காட்டிலும் மனிதர்களாகிய நாம் சிறந்தவர்கள். பிற உயிர்களைப் படைக்கும் போது, "உண்டாகட்டும்" என்றவர் மனிதரைப் படைக்கும் போது மண்ணைப் பிசைந்தார், தன் ஜீவனை அவனுக்கு கொடுத்தார். எந்த உயிருக்கும் இல்லாத சுய அறிவை மனிதர்களுக்கு மட்டும் கொடுத்தார். இறைவனின் கரத்தால் படைக்கப்பட்ட ஒரே உயிர் மனிதன் தான். தேவ சாயலில் படைக்கப்பட்ட ஒரே உயிரும் மனிதன் தான். அவர் உண்டாக்கின எல்லாவற்றையும் பெற்றுக் கொண்டவன் மனிதன் தான், அனைத்திலும் அதிகமாய் நேசிக்கப்பட்டவன் மனிதன் தான்... அவன் பாவத்தில் விழுந்து, அவரை விட்டு விலகின போதும் தேவன் அவனை நேசித்தார், "ஆதாமே, நீ எங்கே இருக்கிறாய்?" என்று ஓடி வந்தார்.
குயவன் வனைந்த பாத்திரம் போலவே நாமும் படைக்கப்பட்டோம். நாம் படைக்கப்பட்ட நோக்கத்தை அறியும் வரை நம் வாழ்வில் உள்ள வெறுமைத் தீராது, நம் மனம் ஒன்றைத் தேடித் திரியும். அது என்ன என்று நமக்கு புரியாது. இந்த அனுபவத்தை பெறாத மக்கள் இருக்க மாட்டார்கள் என்றும் இச்சிந்தனையைத் தூண்டவே மனித மூளையில் "காட் ஸ்பாட்" என்ற பகுதி உள்ளதாகவும் அறிவியல் சொல்கிறது. மனிதர்களைத் தவிர்த்து வேறெந்த உயிரினத்திலும் இந்த பகுதி இல்லை. மனிதனின் வாழ்நாள் முழுவதும் இந்த பகுதி சிந்தனைகளைத் தூண்டிக் கொண்டே இருக்கும். இறைவன் இல்லை எனச் சாத்திப்பவர்களுக்கு காட் ஸ்பாட் அதிக ஆற்றலோடு செயல்படுகிறது. அதன் காரணமாகத் தான் இறைவனின்றி அண்டம் உருவாக வாய்ப்புண்டா என இம்மக்கள் தொடர்ந்து ஆராய்கின்றனர். இது இறைவன் நமக்கு வைக்கிற தேர்வு என்றே சொல்லலாம். தன்னை அறிந்துகொள்ள இச்சிந்தையை கொடுத்திருக்கிறார், தன்னை சுட்டிக் காட்டும் அற்புதங்களை படைப்பின் அதிசயங்களை விட்டு வைத்துள்ளார்.
ஏன் நம்மைப் படைத்தவரையும், நாம் படைக்கப்பட்ட நோக்கத்தையும் நம்மால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை? ஏனெனில் நாம் படைக்கப்பட்ட நோக்கத்தை விட பளபளப்பையே அதிகம் விரும்புகிறோம். சிற்றின்பம், இச்சை, பணம், மோகம், பேராசை என எதையும் இழக்க மனிதன் மறுக்கிறான். இவைகளே தன் மனதிற்கு தேவையான நிறைவை அளிக்க வல்லது என தன்னை தேற்றிக் கொள்கிறான். இத்தகைய எண்ணங்களைக் கொண்ட எந்த மனிதனாலும் பரிசுத்த தேவனை ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனெனில் தன் இச்சையை மறுக்கும் இறைவனை அவன் மறுக்கிறான். என்ன மறுத்தாலும் "காட் ஸ்பாட்" தன் வேலையை விடுவதில்லை, அவனை சிந்திக்கச் சொல்லி தூண்டிக் கொண்டே இருக்கிறது... அதனால் என்ன? அதே வெறுமை...
இதற்கு என்ன தீர்வு? நமக்குள்ள பங்கை, நம்மை படைத்தவரை, நாம் படைக்கப்பட்ட நோக்கத்தை அறிய வேண்டும். அப்போது நம் மனம் நிரம்பி வழியும், தேவையற்ற வெறுமை நீங்கும், மனம் அமைதியில் பிரேவிசிக்கும். இதனைக் குறித்தே, "நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது; நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும்" என்று சொன்னார் இயேசு.
இறைவனின் அன்பில் நிலைத்து வாழவே நாம் தேவசாயலில் படைக்கப்பட்டோம். அந்த அன்பில் நிலைத்திருந்தால் தான் நம் உள்ளம் தேடித் திரியும் நிறைவை நாம் பெற முடியும். நமக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். இந்த அன்பை உணரும் வரை, மனிதன் பல சூழலைத் தாண்டி வருகிறான், அவைகளை நேசித்து மகிழ்கிறான், ஆனால் அவன் பாத்திரம் இன்னும் நிரம்பவில்லை. எச்சமயம் அவன் பாத்திரம் ஜீவத்தண்ணீரால் நிறைகிறதோ அன்றே அவனுக்கு சமாதானம் உண்டாகும், உள்ளம் நிறைவை பெறும், வாழ்க்கை இன்பமாகும்... உபத்திரவங்கள் வந்தாலும், தளராமல் முன்னேறிச் செல்வான், இறைவனை முழுமனதோடு நேசிப்பான், தன்னைப் போல் தனக்கடுத்தவரை நேசிப்பான், இலக்கை நோக்கி ஓடுவான், அதைக் கண்டடைவான்...
அழகாய்ச் சொன்னார் பவுல்,
"...நான் இப்பொழுதே பானபலியாக வார்க்கப்பட்டுப் போகிறேன்; நான் தேகத்தை விட்டுப் பிரியும் காலம் வந்தது. நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக் கொண்டேன். இது முதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டு இருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்கு தந்தருளுவார்; எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதை தந்தருளுவார்...."
நீங்கள் நிரம்பிவிட்டீர்களா...?
No comments:
Post a Comment
"என் வாய் கர்த்தரின் துதியைச் சொல்வதாக" - சங்கீதம் 145:21