ஏப்ரல் 2014 வாக்குத்தத்தம் - கர்த்தர் மேல் நம்பிக்கை வைத்து கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான் - எரேமியா 17:7

Friday, 21 February 2014

நம் தேவன் மூன்றில் ஒன்றாய் ஜொலிப்பவர்...!


நம்மைப் படைத்த தேவன் இணைப்பிரியாத திரியேகர், மூன்றில் ஒன்றாய் ஜொலிப்பவர்! அந்த அற்புத பிணைப்பை நம்மால் பிரித்து பார்க்க‌ முடியாது, பிரித்தால் நம்மைப் படைத்தவரை அறிய முடியாது... ஆனால்... இந்த உறவு எப்படி சாத்தியம்? பிதா குமாரன் பரிசுத்த ஆவி என்றால் என்ன? திரியேகம் என்றால் என்ன? திரியேகத்தை விளக்கிச் சொல்ல முடியுமா? வாருங்கள் காணலாம்...

இந்நாளில் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு இயேசு கிறிஸ்துவிடம் மனந்திரும்பினோர் எத்தனையோ நமக்கு தெரியாது, அதை தேவன் தான் அறிவார். அது போல நீங்களும் அவரது அன்பில் வீழ்ந்தவராய் மனந்திரும்புதலுக்கு ஏற்ற‌ ஆவலோடு இங்கு வந்திருக்கலாம். உங்களுக்காக‌ இந்த பதிவு. இயேசு கிறிஸ்துவை உங்களது சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ளும் போது, அவர் நமக்கீந்த இரட்சிப்பைப் பற்றியும், அவர் தம் பிதாவோடு கொண்டுள்ள அழகிய உறவைப் பற்றியும் அறிந்திருப்பது நல்லது. வேத வசனிப்பினால் இந்த சத்தியங்களை அறிந்து கொள்ளலாம். நீங்கள் புதியவராக இருந்தால், உங்களுக்கு விளக்கங்கள் தேவைப்பட்டால், இந்த பதிவு உங்களுக்கு கைக்கொடுக்கும். நன்றி.

திரியேகம் என்றால் என்ன?

1) பிரிக்க முடியாதது, பிரித்தால் பொருளில்லை...
தேவனிடத்தில் இருந்து வார்த்தையும், ஆவியும் புறப்படுகிறது என்று வேதம் கூறுகிறது. இதனைப் பற்றி இரண்டு கேள்விகளை இப்போது ஆராயலாம். ஒன்று, வார்த்தையில்லாத தேவன் சாத்தியமா? மற்றொன்று, ஆவி இல்லாத தேவன் உண்டா? வேதத்தின் பார்வையில் இதற்கான பதில்கள் என்ன...?

அ) வார்த்தை: அவர் சொல்ல ஆகும்...
எசேக்கியேல் 12:25 - "நான் கர்த்தர், நான் சொல்லுவேன், நான் சொல்லும் வார்த்தை நிறைவேறும்"
தேவன் தன் சித்தத்தை வெளிப்படுத்த ஒரு வார்த்தை சொன்னால் போதும். அந்த வார்த்தை அப்போதே நிறைவேறும். இது வேதம் கூறும் சத்தியம். உதாரணமாக, வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்த போது, வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார். உடனே வெளிச்சம் உண்டாயிற்று. இது தான் நம் தேவனின் வார்த்தை. அவர் சித்தம் வார்த்தையாகும், அந்த‌ வார்த்தை நிறைவேறும்.

இந்த நேரம் தேவனிடத்தில் வார்த்தை இல்லை என்று எடுத்துக் கொள்ளலாம். வார்த்தை இல்லாமல் தேவன் தன் சித்தத்தை எப்படி வெளிப்படுத்துவார்? அவர் மனதால் எண்ணினால் நிறைவேறும் என்று சொல்லலாமா? அப்படி அல்ல, மனதால் எண்ணினாலும் அவர் சித்தம் வார்த்தையாகும். வெளிச்சம் உண்டாக, "வெளிச்சம் உண்டாகட்டும்" என்று தேவன் எண்ணுகிறார். "வெளிச்சம் உண்டாகட்டும்" என்று அவர் எண்ணும் சிந்தனைகளும் வார்த்தைகள் தான்...

வார்த்தையை எடுத்துவிட்டால் தேவனுக்குப் பொருளில்லை. ஏனெனில் வார்த்தையில்லாத தேவனால் எந்த சித்தத்தையும் வெளிப்படுத்த முடியாது. வார்த்தையில்லாமல் தேவன் இல்லை.

ஆ) ஆவி: அவருக்குள் உள்ள ஜீவன்...
யோவான் 1:4 - "அவருக்குள் ஜீவன் இருந்தது"
ஜீவனில்லாத தேவன் உயிரற்ற‌ சடலத்திற்குச் சமம். மேற்கொண்ட எந்த விளக்கம் இதற்கு தேவையில்லை. வார்த்தையைப் போல, ஜீவனில்லாத தேவனுக்கும் பொருளில்லை. இது நாம் அறிந்ததே. கவலை வேண்டாம், உங்களை அழைத்தவர் ஜீவனுள்ள தேவன்!

இ) தேவன் இல்லாவிட்டால்...?

தேவன் இல்லாவிட்டால் வார்த்தையும் ஜீவனும் இல்லை! தேவனே இல்லாத போது, தேவனது வார்த்தையேது? அவருக்குள் வாசம் செய்ய ஆவியேது?

மறுக்க இயலாத‌ சத்தியம் இது. தேவன் தன் வார்த்தையோடும், ஆவியோடும் ஒருமைப்பட்டிருக்கிறார். தேவன் எப்படி முதலும் முடிவும் அற்றவரோ அதை போல அவரது வார்த்தையும் ஜீவனும் முதலும் முடிவும் இல்லாதவை. இறைவனை ஏற்கும் யாராலும் இந்த பிணைப்பை பிரிக்க முடியாது. பிரித்தால் என்னாகும்? தேவனுக்கு பொருளில்லை!

தேவன் + வார்த்தை + ஆவி = ஆற்றல‌ற்ற பொருள்
தேவன் + வார்த்தை + ஆவி = உயிரற்ற பொருள்
தேவன் + வார்த்தை + ஆவி = சாத்தியமல்ல

2) ப‌ரிசுத்த ஆவி நிழலிடும், வார்த்தை மாம்சமாகும்..!


நம்மைப் பாவத்தில் இருந்து நீக்க நம் தேவன் தன்னையே தந்தார். அவர் தான் தேவ‌குமாரன் இயேசு கிறிஸ்து. குமாரன் என்கிற சொல்லை வைத்து, தேவன் மரியாளிடம் இயேசுவை பெற்றெடுத்தார் என்று கருதுவதோ அல்லது தனக்காக ஒரு குமாரனை உருவாக்கிக் கொண்டார் என்று எண்ணுவதோ முற்றிலும் தவறு. கிறிஸ்துவுக்குள் வாழும் எவரும் இவ்வாறு எண்ணுவதில்லை. கிறிஸ்துவை அறியாத மக்களிடத்தில் தான் இத்தகைய தவறான எண்ணங்கள் நிலவுகின்றன. நீங்கள் குமாரன் என்கிற வார்த்தையை இத்தகைய பொருளில் எண்ணி இருந்தால் அதை கைவிடுங்கள். குமாரன் என்றால் என்ன? ஆதிமுதல் இருந்த தேவன் நம்மிடத்தில் மனிதனாக வந்தார். அவர் தான் இயேசு. இயேசு தேவனின் தூய பிரதிபலிப்பு. அதன் காரணமாகவே, தன்னைக் குமாரன் என்றார், என்னை கண்டவன் பிதாவைக் கண்டான் என்றார். இதனை வேதம் அழகாய் விளக்கியுள்ளது. இரண்டு வேதப்பகுதிகளை இப்போது காணலாம்.
யோவான் 1:1,14 - ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையை கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.
மத்தேயு 1: 18‍ - 21 - இயேசு கிறிஸ்துவினுடைய ஜெநநத்தின் விவரமாவது: அவருடைய தாயாராகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டு இருக்கையில், அவர்கள் கூடி வருமுன்னே, அவள் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது. அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாய் இருந்து, அவளை அவமானப்படுத்த மனதில்லாமல், இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாய் இருந்தான். அவன் இப்படிச் சிந்தித்துக் கொண்டிருக்கையில், கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு: தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளை சேர்த்துக் கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில் உற்பத்தியாய் இருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது. அவள் ஒரு குமாரனை பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக. ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்.
குமாரனை அறிய இவ்விரண்டு வாக்கியங்கள் போதும்...

1) "அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்"

2) "அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது"

தேவ‌னின் வார்த்தையும், தேவனின் தூய ஆவியும் மாம்சமானது, நம் தேவன் நம்மிடத்தில் வந்தார். அவர் தான் இயேசு, தேவனின் தூய பிரதிபலிப்பு. குமாரனைக் கண்டவன் பிதாவைக் கண்டான்.

3) தேற்றரவாளன் வந்தார், நமக்குள் வாசம் செய்கிறார்...


நமக்கு அளிக்கப்பட்ட தேற்றரவாளன் தான் பரிசுத்த ஆவியானவர்.

யோவான் 14:24 - என் நாமத்தினாலே பிதா அனுப்பப் போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்கு போதித்து, நான் உங்களுக்கு சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்.

தேவனிடத்தில் இருந்து புறப்பட்ட ஆவி அவர், அவரது வார்த்தைகளை நமக்குப் போதிப்பவர். தேவவார்த்தையும், தேவனின் ஜீவனும் நமக்குள் வந்தது. அவரே நம் தேற்றரவாளன்...! தேவன் போதித்த சகல வார்த்தைகளையும் நமக்கு நினைவுபடுத்தி நம்மை சத்திய பாதையில் நடக்கச் செய்கிறார்.

இது தான் திரியேகம், பரிசுத்த வேதாகமத்தின் உயிர்நாடி. திரியேகம் இல்லாது வேதத்தை விளக்க முடியாது. ஏன்? திரியேகமின்றி கடவுளைக் கூட‌ நம்மால் விளக்க முடியாது! மகிழ்ந்து களிகூறுங்கள், உங்களை அழைத்தவர் உண்மையுள்ளவர்...!

No comments:

Post a Comment

"என் வாய் கர்த்தரின் துதியைச் சொல்வதாக" - சங்கீதம் 145:21