"ஒருவன் எனக்கு ஊழியம் செய்தால் பிதாவானவர் அவனை கனம் பண்ணுவார்..." யோவான் 12:26
"ஊழியம் செய்கிறவனுக்கும் ஊழியம் செய்யாதவனுக்கும் இருக்கிற வித்தியாசத்தை காண்பீர்கள்..." மல்கியா 3:18
தேவனுக்காக முழு இருதயத்தோடு செய்யப்படும் அனைத்து நற்செயல்களுமே ஊழியப்பணி தான். ஊழியர்கள் அனைவரும் கர்த்தருடைய சம்பத்துக்கள் அதாவது விலையேறப்பெற்ற பொக்கிஷங்கள் என்று வேதம் அங்கீகரிக்கிறது. சாத்ராக். மேஷாக், ஆபெத்நேகா மூவரையும் சோதனை வேளையில் தப்புவித்து உயர்த்தி இவர்களின் தேவனே உண்மையான தேவன் என்று ஜனங்களை, கர்த்தர் சொல்ல வைத்தார். உண்மையோடும் உத்தமத்தோடும் அவர் கட்டளைகளை நாம் நிறைவேற்றும் போது அதற்காக ஒரு காலமும் நாம் வெட்கப்பட்டு போவதில்லை. ஊழியம் நமக்குக் கிடைத்த மிகப்பெரிய பாக்கியம். ஊழியத்தின் மூலம் செய்யப்பட்ட நன்மைகள், அதனிமித்தம் நாம் அனுபவித்த அலைச்சல்கள், வேதனைகள் என எதையும் அவர் மறப்பதல்ல. கர்த்தர் எல்லாவற்றையும் குறித்து வைத்துள்ளார். மொர்தகாய் போன்ற கவனிக்கப்படாத ஊழியரையும் குறித்து வைத்திருந்து ஒரு நாளில் கனப்படுத்துவார். எந்த ஊழியம் செய்தாலும் அது கர்த்தருக்காகச் செய்யப்படுவதினால் அது நிச்சயம் அவரால் கனப்படுத்தப்படும். இனி, கர்த்தர் தன் ஊழியர்களை எவ்வாறெல்லாம் ஆசீர்வதிக்கிறார் என்பது குறித்து வேதத்தில் இருந்து சில சத்தியங்களை காணலாம்.
1) 2 தீமொத்தேயு 2:21
தேவனால் கனம் பெற்றவர்கள் கர்த்தரால் பயன்படுத்துகிறவர்களாய் இருப்பார்கள். அவர் தம் ஊழியக்காரரை துலக்கமான அம்புகளாக மாற்றி தன் அம்பறாத்துணியில் வைத்திருக்கிறார். அநேக அம்புகள் அதில் இருந்தாலும் சந்தர்ப்பங்கள் வரும் போது தம் அம்பறாத்துணியில் இருந்து நம்மையும் கிருபையாய் எடுத்து தம் வேலைக்காக பயன்படுத்துகிறார். தேவ ராஜ்ஜியத்தில் உபயோகமுள்ளவராய் இருப்பது தான் வாழ்க்கையில் மிக கனம்பொருந்திய விஷயம்.
2) எபிரேயர் 2:7
தேவன் நம்மை தூதரிலும் சற்று சிறியவராக்கி தம் மகிமை, கனத்தினால் முடிசூட்டி சகலத்தையும் நம் பாதத்துக்குக் கீழ்படுத்துகிறார். ஒரு வீட்டுக்குப் போய் வாழ்த்து சொன்னால் அது நிறைவேறும்படிக்கும் நம் வாயின் வார்த்தைகளுக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறார். எலிசாவின் வாயிலிருந்து புறப்பட்ட ஒவ்வொரு வார்த்தையும் எத்தனை அற்புதங்கள் செய்தது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. எலிசாவின் வாயிலிருப்பது கர்த்தருடைய வார்த்தைகள் என எல்லோரும் சாட்சி சொன்னார்கள்.
3) சங்கீதம் 149:7-9
அவர் தம் ஜனங்கள் மேல் பிரியம் வைத்து இரட்சிப்பினால் அலங்கரித்து அவர்களை கெம்பீரிக்கச் செய்கிறார். தம் ஜனங்களுக்காக ஜாதிகளை பழிவாங்கவும், இராஜாக்களின் மேல் எழுதப்பட்ட நியாத்தீர்ப்பைச் செலுத்தவும் செய்து இப்படிப்பட்ட கனம் அவருடைய பரிசுத்தவான்கள் யாவருக்கும் உண்டாகும்படி செய்கிறார்.
4) 1 பேதுரு 1:7
தம் ஊழியர்களுக்கு புகழ்ச்சியும் கனமும் மகிமையும் உண்டாகும்படி செய்கிறார். ஆயிரம் பொன் வெள்ளியைப் பார்க்கிலும் நமக்குக் கிடைக்கிற நற்பெயர் நல்லதல்லவா! ஆபிரகாமை அழைத்து உன் பெயரை பெருமைப்படுத்துவேன் என்று சொன்னதுடன் அது நிறைவேறும்படி செய்தவர் நம் தேவன்.
5) எஸ்தர் 8:16
ஊழியர்களுக்கு சந்தோசத்தை தரவே கர்த்தர் விரும்புகிறார், தம் ஊழியர்களை பார்க்கும் போது களி கூறுகிறார். நாம் நினைப்பதற்கும் அதிகமாய் நேசிக்கிறார். நம் மேல் உள்ள சந்தோஷத்தினால் தான் நாம் தேவனால் பயன்படுத்தப்படுகிறோம். மகிழ்ச்சி, சந்தோஷம் போன்றவைகளை ஏற்கனவே அவர் நம் வாழ்க்கையில் விதைத்திருக்கிறபடியால் நாம் எதை குறித்தும் கலங்கத் தேவையில்லை. நம் துக்க நாட்கள் அதிசீக்கிரத்தில் முடிந்து போகும்.
6) 1 நாளாகமம் 29:12
ஊழியம் செய்கிறவர்களுக்கு பொருளாதாரத்திலும் உயர்வைத் தந்து ஆசீர்வதிப்பார். ஏனெனில், தாம் அதிகமாய் நேசிக்கும் தம் ஊழியர்களுக்கு ஐஸ்வர்யத்தையும், கனத்தையும் கொடுக்கிறார். அவர்கள் சம்பூரணமாக சாப்பிட்டு, பிறரையும் போஷித்து, மீதமும் எடுப்பார்கள்.
7) சங்கீதம் 91:14-15
எதிராளிகளுக்கு தப்புவித்து கனப்படுத்துவார், நமக்கு எதிராய் செய்யப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காது போகும். சாத்தானுக்கு முன் நம்மை கர்த்தர் எப்போதும் விட்டுக் கொடுப்பதில்லை. யோசுவா அழுக்கு வஸ்திரம் தரித்தவனாய் நின்ற போதும் தேவன் சாத்தானை கடிந்து கொண்டு அவனை சேர்த்துக் கொண்டார். நாம் குறையுடையவர்களாய் காணப்பட்டாலும், நம்மை தப்புவித்து நமது குறைவை நிறைவாக்குகிறார்.
8) 1 நாளாகமம் 29:28
நம்முடைய நாட்கள் பூரணப்படும். முதிர் வயதிலும் கனி தந்து பசுமையும் புஷ்டியுமாய் வாழ உதவி வரும். மோசே 120 வயது வாழ்ந்து பூரண வயதுடையவனாய் மரித்தான். அவன் கண் பார்வை மங்கிப் போகவில்லை என்று வேதம் கூறுகிறது. நம்மையும் ஆசீர்வதித்து, நம் பிள்ளைகளையும் ஆசீர்வதித்து நம் பிள்ளைகளின் பிள்ளைகளையும் நாம் காணும்படி தேவன் செய்வார்.
எனவே, கர்த்தருக்காக திருப்பணி செய்ய கலங்கிட வேண்டாம், வேதம் கூறுகின்ற படி, குறித்த நாட்களில் அதற்கான ஆசீர்வாதங்கள் வாய்க்கும். இஸ்ரவேலை ஆசீர்வதிப்பது தேவனுக்குப் பிரியம்.
No comments:
Post a Comment
"என் வாய் கர்த்தரின் துதியைச் சொல்வதாக" - சங்கீதம் 145:21