ஏப்ரல் 2014 வாக்குத்தத்தம் - கர்த்தர் மேல் நம்பிக்கை வைத்து கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான் - எரேமியா 17:7

Saturday, 29 March 2014

பாடுவேன் என்றும் - வாலிபர் ஆராதனை கீதம்


"நீ உன் வாலிபப்பிராயத்திலே
உன் சிருஷ்டிகரை நினை"
-  பிரசங்கி 12:1
 

பாடுவேன் என்றென்றும் பாடுவேன் என்றென்றும்
பாடுவேன் என்றென்றும் பாடுவேன் என்றென்றும்

பாடுவேன் என்றும் என் இயேசுவின் புகழ்
என் ஜீவிய காலம் எல்லாம் நான் உம்மை பாடுவேன்
பாடுவேன் என்றும் என் இயேசுவின் புகழ்
என் ஜீவிய காலம் எல்லாம் நான் உம்மை பாடுவேன்

நான் உம்மை பாடாமல் வேறென்ன செய்வேன் ஜீவனுமானவரே
நான் உம்மை தேடாமல் வேறெங்கு செல்வேன் என் வாழ்வின் நாயகனே

இயேசுவே என் உறைவிடம் இவ்வுலகிலே எந்தன் நம்பிக்கை
தொடருவேன் அவர் அடிச்சுவடை இனிவரும் நாளெல்லாம்
இயேசுவே என் உறைவிடம் இவ்வுலகிலே எந்தன் நம்பிக்கை
தொடருவேன் அவர் அடிச்சுவடை இனிவரும் நாளெல்லாம்

பாடுவேன் என்றென்றும் பாடுவேன் என்றென்றும்...

பாவ சேற்றில் நின்ற என்னை தூக்கி எடுத்தவரே
சாபங்கள் போக்கி புது வாழ்வு தந்தவரே
பாவ சேற்றில் நின்ற என்னை தூக்கி எடுத்தவரே
சாபங்கள் போக்கி புது வாழ்வு தந்தவரே

நான் உம்மை பாடாமல் வேறென்ன செய்வேன் ஜீவனுமானவரே
நான் உம்மை தேடாமல் வேறெங்கு செல்வேன் என் வாழ்வின் நாயகனே

இயேசுவே என் உறைவிடம், இவ்வுலகிலே எந்தன் நம்பிக்கை
தொடருவேன் அவர் அடிச்சுவடை இனிவரும் நாளெல்லாம்
இயேசுவே என் உறைவிடம், இவ்வுலகிலே எந்தன் நம்பிக்கை
தொடருவேன் அவர் அடிச்சுவடை இனிவரும் நாளெல்லாம்

Thursday, 20 March 2014

நெஞ்சத்திலே தூய்மை உண்டோ? இயேசு வருகின்றார்...


"இருதயத்தில் சுத்தம் உள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்" - மத்தேயு 5:8

நெஞ்சத்திலே தூய்மை உண்டோ?
இயேசு வருகின்றார்...
நொறுங்குண்ட நெஞ்சத்தையே
இயேசு அழைக்கிறார்...

நெஞ்சத்திலே தூய்மை உண்டோ?
இயேசு வருகின்றார்...
நொறுங்குண்ட நெஞ்சத்தையே
இயேசு அழைக்கிறார்...

வருந்தி சுமக்கும் பாவம்
நம்மை கொடிய இருளில் சேர்க்கும்...
வருந்தி சுமக்கும் பாவம்
நம்மை கொடிய இருளில் சேர்க்கும்...
செய்த பாவம் இனி போதும்
அவர் பாதம் வந்து சேரும்...
அவர் பாதம் வந்து சேரும்...

நெஞ்சத்திலே தூய்மை உண்டோ?
இயேசு வருகின்றார்...
நொறுங்குண்ட நெஞ்சத்தையே
இயேசு அழைக்கிறார்...

குருதி சிந்தும் நெஞ்சம்
நம்மை கூர்ந்து நோக்கும் கண்கள்...
குருதி சிந்தும் நெஞ்சம்
நம்மை கூர்ந்து நோக்கும் கண்கள்...
அங்கே பாரும் செந்நீர் வெள்ளம்
அவர் பாதம் வந்து சேரும்...
அவர் பாதம் வந்து சேரும்...

நெஞ்சத்திலே தூய்மை உண்டோ?
இயேசு வருகின்றார்...
நொறுங்குண்ட நெஞ்சத்தையே
இயேசு அழைக்கிறார்...

மாய லோக வாழ்வு
உன்னில் கோடி இன்பம் காட்டும்...
மாய லோக வாழ்வு
உன்னில் கோடி இன்பம் காட்டும்...
என்னில் வாழும் அன்பர் இயேசு
உன்னில் வாழ இடம் வேண்டும்...
உன்னில் வாழ இடம் வேண்டும்...

நெஞ்சத்திலே தூய்மை உண்டோ?
இயேசு வருகின்றார்...
நொறுங்குண்ட நெஞ்சத்தையே
இயேசு அழைக்கிறார்...

நெஞ்சத்திலே தூய்மை உண்டோ?
இயேசு வருகின்றார்...
நொறுங்குண்ட நெஞ்சத்தையே
இயேசு அழைக்கிறார்...

Wednesday, 19 March 2014

நடக்க சொல்லி தாரும் இயேசுவே


நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடே கூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும் -  சங்கீதம் 23:4


நடக்க சொல்லி தாரும் இயேசுவே இயேசுவே
நடக்க சொல்லி தாரும் இயேசுவே இயேசுவே

நடக்க சொல்லி தாரும் இயேசுவே இயேசுவே
நடக்க சொல்லி தாரும் இயேசுவே இயேசுவே
நடக்க சொல்லி தாரும் இயேசுவே இயேசுவே
நடக்க சொல்லி தாரும் இயேசுவே இயேசுவே

தனித்து செல்ல முடியவில்லை
தவித்து நிற்கும் பாவி நான்
தனித்து செல்ல முடியவில்லை
தவித்து நிற்கும் பாவி நான்
தத்தளித்து அலைகின்றேனே
அழைத்து கொள்ளும் இயேசுவே
தத்தளித்து அலைகின்றேனே
அழைத்து கொள்ளும் இயேசுவே
தத்தளித்து அலைகின்றேனே
அழைத்து கொள்ளும் இயேசுவே

நடக்க சொல்லி தாரும் இயேசுவே இயேசுவே
நடக்க சொல்லி தாரும் இயேசுவே இயேசுவே

இருள் நிறைந்த உலகமிதில்
துன்பம் என்னை நெருக்குதே
இருள் நிறைந்த உலகமிதில்
துன்பம் என்னை நெருக்குதே
அருள் பெருகும் ஒளியாகி
அன்பு தந்த தெய்வமே
அருள் பெருகும் ஒளியாகி
அன்பு தந்த தெய்வமே
அருள் பெருகும் ஒளியாகி
அன்பு தந்த தெய்வமே

நடக்க சொல்லி தாரும் இயேசுவே இயேசுவே
நடக்க சொல்லி தாரும் இயேசுவே இயேசுவே

அடம்பிடித்து விலகிடுவேன்
கருணையோடு மன்னியும்
அடம்பிடித்து விலகிடுவேன்
கருணையோடு மன்னியும்
கரம்பிடித்து உம்முடனே
அழைத்து செல்லும் இயேசுவே
கரம்பிடித்து உம்முடனே
அழைத்து செல்லும் இயேசுவே
கரம்பிடித்து உம்முடனே
அழைத்து செல்லும் இயேசுவே

நடக்க சொல்லி தாரும் இயேசுவே இயேசுவே
நடக்க சொல்லி தாரும் இயேசுவே இயேசுவே

உம்மை போல நானும் மாற‌
உதவி செய்யும் இயேசுவே
உம்மை போல நானும் மாற‌
உதவி செய்யும் இயேசுவே
மோட்ச வீட்டில் நானும்
சேர வாஞ்சிக்கின்றேன் இயேசுவே
மோட்ச வீட்டில் நானும்
சேர வாஞ்சிக்கின்றேன் இயேசுவே
மோட்ச வீட்டில் நானும்
சேர வாஞ்சிக்கின்றேன் இயேசுவே

நடக்க சொல்லி தாரும் இயேசுவே இயேசுவே
நடக்க சொல்லி தாரும் இயேசுவே இயேசுவே
நடக்க சொல்லி தாரும் இயேசுவே இயேசுவே
நடக்க சொல்லி தாரும் இயேசுவே இயேசுவே

Tuesday, 18 March 2014

நன்றி சொல்லி பாடுவேன் - DOWNLOAD MP3

இந்த விசுவாசம் உங்களுக்கும் உண்டா?

"நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையும் குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவ சமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக் கொள்ளும்" - பிலிப்பியர் 4:6,7

CLICK HERE - TO DOWNLOAD THE SONG

நன்றி சொல்லி பாடுவேன்
நாதன் இயேசுவின் நாமத்தையே
நன்றியால் என்னுள்ளம் நிறைந்தே
நாதன் இயேசுவை போற்றிடுவேன்!

நல்லவரே வல்லவரே
நன்மைகள் என் வாழ்வில் செய்பவரே!

கடந்த நாட்கள் முழுவதும் என்னை
கண்ணின் மணிபோல் காத்தாரே
கரத்தை பிடித்து கைவிடாமல்
கனிவாய் என்னை நடத்தினாரே!

நல்லவரே வல்லவரே
நன்மைகள் என் வாழ்வில் செய்பவரே!

துன்பங்கள் எந்தன் வாழ்வினிலே
சூழ்ந்து என்னை நெருக்கினாலும்
கன்மலை தேவன் என்னோடு இருக்க‌
கலக்கமில்லை என் வாழ்விலே!

நல்லவரே வல்லவரே
நன்மைகள் என் வாழ்வில் செய்பவரே!

மேகங்கள் மீது மன்னவன் இயேசு
வேகம் வருவார் ஆனந்தமே
கண்ணீர் துடைத்து பலனை கொடுக்க‌
கர்த்தாதி கர்த்தர் வருகின்றாரே!

நல்லவரே வல்லவரே
நன்மைகள் என் வாழ்வில் செய்பவரே!

நன்றி சொல்லி பாடுவேன்
நாதன் இயேசுவின் நாமத்தையே
நன்றியால் என்னுள்ளம் நிறைந்தே
நாதன் இயேசுவை போற்றிடுவேன்!

நல்லவரே வல்லவரே
நன்மைகள் என் வாழ்வில் செய்பவரே!

Monday, 17 March 2014

"உனக்கும் ஸ்தீரிக்கும் உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்"

ஏன் பலர் புற்று நோயால் அவதிப்பட்டு வருகின்றனர்? கொத்து கொத்தாக பல உயிர்களைக் கொன்றுத் தீர்க்கும் இந்த நில நடுக்கங்கள் ஏன்? தங்கள் பிள்ளைகளைப் போஷிப்பதற்கு கூட ஏன் மக்கள் இவ்வளவு பாடுபட்டு உழைக்க வேண்டியுள்ளது? இது போன்ற கேள்விகளை நாம் அவ்வப்போது சிந்தியாமல் இருப்பதில்லை. அனுதினமும் ஒரு ஓட்டப் பந்தயம் போல நம் வாழ்வு நகர்ந்து கொண்டிருக்கிறது. சில இடங்களில் சிறுது நேரம் இளைப்பாறி நம் பாடுகளைக் குறித்து இவ்வாறு பெருமூச்சுவிடுகிறோம்...

நிச்சயமாக நம் வாழ்க்கை பயணம் சில நேரங்களில் சரியில்லை. துன்பங்கள், மரணம், வேளைப்பழு, நோய் நொடி... சில நேரங்களில் மனதைக் கொள்ளைக் கொள்ளும் சுபவிசேசங்கள், பதவி உயர்வு, சுற்றுலா, வேடிக்கை, விளையாட்டுகள், பண்டிகைகள்... இது தான் இயற்கை. ஒவ்வொரு மனிதனும் தன் இன்பங்களையும் துன்பங்களையும் கடந்து வந்தே தீர வேண்டும். சரி, ஆனால் நாம் விரும்பாத இந்த துயரச் சம்பவங்கள் நிகழ்வது ஏன்? ஏன் நம் வாழ்க்கை முழுவதும் இன்பமாகவே இருக்கக் கூடாது? இந்த உலகம் ஏன் சீர்கெட்டு போயிருக்கிறது?


நமக்குள் எழும் இந்த கேள்விக்கு வேதம் ஒரு எளிய பதிலைச் சொல்கிறது, இது நம்மீது நாமே இழுத்துக் கொண்ட பாரம்... இந்த வார்த்தைகளை கேட்க நம்மில் பலருக்கு விருப்பமில்லை :-) ஆனால், இப்போதுள்ள இந்த நிலையை மாற்ற முடியுமா? யாரால் முடியும்? எப்படி முடியும்? நமக்கு நித்திய சந்தோஷத்தை, இளைப்பாறுதலைக் கொடுக்க யாரால் முடியும்?

தேவனால் முடியும்... தேவன் ஒருவராலே அன்றி வேறு யாராலும் நமக்கு நித்திய சந்தோஷத்தைக் கொடுக்க முடியாது. ஆனால் அதை அவர் எளிதில் செய்வதில்லை. இதனால் தேவனைத் தூசித்து அவரைக் கடிந்துக் கொள்வோரும், மறுப்போரும் உண்டு. இவ்வாறு நாம் அவரை குற்றப்படுத்தினால் அவர் மனம்மாறி நமக்கு நித்திய இளைப்பாறுதல் அளித்துவிடுவாரா...? நிச்சயமாக இல்லை :‍-) ஏன்?

ஏனெனில் நாம் விரும்பியதை அவர் நமக்கு அளித்துவிட்டார். கர்த்தரின் கரத்தை விட்டு நம்முடைய வாழ்வை நாமே தீர்மானிக்க விரும்பினோம். அவரது பிரசன்னம் இல்லாத ஒரு வாழ்வை, அவரது உதவிக்கரத்தை புறந்தள்ளிய ஒரு உலகத்தை நாம் விரும்பி பெற்றுக் கொண்டோம். ஆம், நாம் விரும்பிய வாழ்வை தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்... எப்படி?

தேவன் மனிதனை சிருஷ்டித்த போது, அவனை அளவில்லாமல் நேசித்து அவன் விரும்பிய வாழ்வை அமைத்துக் கொள்ளும் அதிகாரத்தை அவனுக்கு ஈந்தளித்தார். சுயாதீனமுடையவர்களாய் இருந்தாலும் நாம் அவரது அன்பிலேயே நிலைத்து வாழவேண்டுமென ஏங்கித் தவித்தார். அதற்காக விலக்கப்பட்ட கனிகளும் சோதனையாக வைக்கப்பட்டன‌. பிசாசினால் வஞ்சிக்கப்பட்டு ஆதாமும் ஏவாளும் அக்கனியை புசித்தனர். அவர்கள் அக்கனியைப் புசித்த போதே அவர்கள் தேவ அன்பில் நிலைத்திராத ஒரு வாழ்வையே நேசித்தனர் என்பது புலப்பட்டது. எனவே அவர்கள் நேசித்த வாழ்வை அவர்களுக்கு தேவன் கொடுத்தார். தன் பிரசன்னத்தில் இருந்து அவர்களை அனுப்பிவிட்டார். தேவனின் கரத்தை விட்டு விலகும் போது மனிதன் படவேண்டிய இன்னல்கள் என்ன, அவனுக்கு நயங்காட்டின பிசாசு அவனுக்கு கொடுக்கும் நெருக்கங்கள் என்னென்ன என எல்லாவற்றையும் மனிதன் சோதித்து அறியும் ஒரு பாடமாக அந்த வாழ்வு அமைந்தது. தன் பாடத்தை மனிதன் கற்றுக் கொள்ளும் போது, அவன் விரும்பிய உலக வாழ்வையும், அவன் இழந்த நித்திய வாழ்வையும், தன் அற்புத அன்பையும் அவனுக்கு முன்பு தேவன் எடுத்துக் காட்டினார்.

அந்த பாடத்தின் விளைவு என்ன? அவன் இழந்த நித்திய வாழ்வே அவனுக்கு பெரிதாய்க் கண்டது, தான் இழந்த அன்பு எத்தகையது என்பதை அவன் உணர்ந்து கொண்டான். தேவ கரத்தை மீண்டும் பற்றிக் கொள்ள ஆவலாய் அவரை நோக்கி ஓடி வந்தான். நம் உலக வாழ்வு நாம் இறைவனை மீண்டும் அண்டிச்சேர அவர் நமக்கு வைத்த பரீட்சை. உலக சிற்றின்பங்களை விட்டுத்தள்ளி, அவரது கரத்தைப் பிடிக்க நாம் வாஞ்சிக்கும் போது அவர் மீண்டும் நம்மை அன்போடு அரவணைத்துக் கொள்கிறார். நித்திய வாழ்வை நமக்கு கொடுத்து அவரது சமூகத்தில், மார்பில் சாய்ந்து இளைப்பாற தயை செய்கிறார்...!


நாம் விரும்பிய உலக வாழ்வையும், நாம் இழந்த வாழ்வையும், தன் அற்புத அன்பையும் எப்படி தேவன் எடுத்துக் காட்டினார்? நம்மை அன்போடு அழைக்கும் வண்ணம் தன் கரத்தை விரித்து சிலுவையில் மரித்தாரே... அந்த கல்வாரிக் காட்சியே நம்மை அவரை நோக்கி ஓடிவரச் செய்தது...! நித்திய‌ வாழ்வை நமக்கு திரும்பக் கொடுக்கவும், மீண்டும் தேவ அன்பை நோக்கி நம்மை ஓடிவரச் செய்யவும் இயேசு கிறிஸ்து இவ்வுலகத்திற்கு வந்தார். சிலுவையை சுமந்தார். எப்படி? மனிதன் சீரழித்த கொண்ட வாழ்வையும் இளைப்பாறுதலையும் இயேசுவால் எப்படி மீண்டும் கொடுக்க முடிந்தது?

ஆதி 2:7 - "தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்"

தேவன் மனிதனை சிருஷ்டித்த நாளிலே தன் சுவாசத்தை அவனுக்கு கொடுத்தார். அப்போது அவன் ஜீவாத்துமாவானான். தான் சிருஷ்டித்த சகலவித தாவரங்களையும், மிருக ஜீவன்களையும் அவனிடத்தில் கொடுத்து "பூமியை ஆண்டுக் கொள்ளுங்கள்" என்றார். தான் மனிதனை நேசிப்பது போல, அவனும் தன்னை நேசிக்க வேண்டும் என்ற ஆவல் ஒன்றே அவருக்குள் இருந்தது. அதனைக் கண்டறிய ஒரு சோதனையும் வைக்கப்பட்டது...

ஆதியாகமம் 2:16, 17 - தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி: நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம். ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்.

ஏன் அக்கனியை புசிக்கும் போது மனிதன் சாக வேண்டும்? ஏனெனில் விலக்கப்பட்ட கனியை புசிக்கும் போது, மனிதன் தேவனை புரந்தள்ளுகிறான். அச்செயல் தேவ அன்பை விட்டு பிரிந்து மனம் விரும்பிய வாழ்வை அமைத்து கொள்வதற்கு அடையாளமாகும். தேவனைப் புரந்தள்ளும் போது அவர் தம் சுவாசத்தினால் நமக்களித்த நித்திய வாழ்வும் நம்மை விட்டு விலகிவிடும். எனவே, விலக்கப்பட்ட கனியைப் புசிக்காதபடி தேவன் ஆதாமை எச்சரித்தார். ஆனால் ஆதாம் இளைத்த பாவம் என்ன?

ஆதியாகமம் 3:4-6 - அப்பொழுது சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி: நீங்கள் சாகவே சாவதில்லை; நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப் போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது. அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள்; அவனும் புசித்தான்.

மனிதன் தான் விரும்பிய வாழ்வை தெரிந்து கொண்டான். "சாகவே சாவீர்கள்" என தேவன் விலக்கிய செய்கையை செய்து அவர் தனக்கு அளித்த நித்திய ஜீவனை இழந்து போனான். தான் விரும்பிய உலக வாழ்வை பெற்றுக் கொண்டு தேவனுடைய சமூகத்தை விட்டு பிரிந்தான்.

ஆதியாகமம் 3:17 19,23 - பின்பு அவர் ஆதாமை நோக்கி: நீ உன் மனைவியின் வார்த்தைக்குச் செவி கொடுத்து, புசிக்க வேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தபடியினாலே, பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும்; நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் வருத்தத்தோடே அதின் பலனைப் புசிப்பாய். அது உனக்கு முள்ளும் குருக்கும் முளைப்பிக்கும்; வெளியின் பயிர்வகைகளைப் புசிப்பாய். நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்; நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய் என்றார். அவன் எடுக்கப்பட்ட மண்ணைப் பண்படுத்த தேவனாகிய கர்த்தர் அவனை ஏதேன் தோட்டத்திலிருந்து அனுப்பிவிட்டார்.

ஆனால் நம் தேவனின் அன்பு இவ்வளவு தானா? நிச்சயமாக இல்லை. நாம் தேவ அன்பை விட்டு பிரிந்தாலும், பிசாசு நமக்களித்த பாவ வாழ்க்கையை தெரிந்து கொண்டாலும், தேவன் நம்மை கைவிடவில்லை. மனிதனுக்கும் பிசாசுக்கும் உள்ள உறவை முறித்து நிச்சயமாக பகை உண்டாக்குவேன் என அன்றே வாக்களித்தார். ஒரு பெண்ணின் வித்தைக் கொண்டு பிசாசின் தலையை நசுக்குவேன், அவன் அவர் குதிங்காலை நசுக்குவான் என்று சொன்னார்.

ஆதியாகமம் 3:15 - "உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய்"

இதுதான் இயேசு கிறிஸ்து நமக்களிக்கவிருக்கும் இரட்சிப்பைக் குறித்து வேதம் முன்கூறிய முதல் தீர்க்கதரிசனமாகும். இரட்சிப்பின் காலம் வருகின்ற வரை ஆதாமின் பாவ சாயலிலேயே வித்துகள் பிறந்தனர்.

ஆதியாகமம் 5:1,3 - தேவன் மனுஷனைச் சிருஷ்டித்த நாளிலே அவனைத் தேவசாயலாக உண்டாக்கினார். ஆதாம் நூற்று முப்பது வயதான போது, தன் சாயலாகத் தன் ரூபத்தின் படியே ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குச் சேத் என்று பேரிட்டான்.

இரட்சிப்பை காலம் வந்த பிறகே தேவ சாயலில் வித்து தோன்றியது. இறைவனின் கட்டளையை ஏற்று நடந்த பெண்ணின் கர்ப்பத்தில் தேவகுமாரன் உண்டானார். பாவமிழைத்த ஆதாமின் வித்தாக அல்ல, அவளிடத்தில் உற்பத்தியானது பரிசுத்த ஆவியினால் உண்டானது. ஆதாம் இழந்த போன தேவ சுவாசத்தால் உண்டான குழந்தை அது...! சிருஷ்டிப்பிற்கு பிறகு, தேவசாயலாலும் பரிசுத்த ஆவியாலும் பிறந்த ஒருவர் இயேசுவே.

மத்தேயு 1:20,21 - "...தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளை சேர்த்துக் கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது. அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்..."

ஆதாம் பிசாசால் சோதிக்கப்பட்டது போலவே இயேசு கிறிஸ்துவும் சோதிக்கப்பட்டார். ஆதாமுக்கு அவன் எவ்வாறு நயங்காட்டினானோ, அதைப் போலவே இயேசுவுக்கும் உலகை சுட்டிக் காட்டினான். ஆனால் இயேசு என்ன செய்தார்? ஆதாம் தன் பரிசுத்த ஆவியை இழந்தது போல இயேசு கிறிஸ்து ஒருபோதும் இழக்கவில்லை. தன் ஆவியில் நிலைத்து நின்றவர் தான் நம் தேவகுமாரன்.

லூக்கா 4:5-8 - பின்பு பிசாசு அவரை உயர்ந்த மலையின் மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் ஒரு நிமிஷத்திலே அவருக்குக் காண்பித்து: இவைகள் எல்லாவற்றின் மேலுமுள்ள அதிகாரத்தையும் இவைகளின் மகிமையையும் உமக்குத் தருவேன், இவைகள் எனக்கு ஒப்புக் கொடுக்கப்பட்டு இருக்கிறது; எனக்கு இஷ்டமானவனுக்கு இவைகளைக் கொடுக்கிறேன். நீர் என்னைப் பணிந்து கொண்டால், எல்லாம் உம்முடையதாகும் என்று சொன்னான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: எனக்குப் பின்னாகப்போ சாத்தானே, உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்து கொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.

இவை நாம் கூர்ந்து தியானிக்க வேண்டிய திருமறை வசனங்கள். பிசாசு வஞ்சித்த போது, ஆதாம் தேவன் தனக்கு அருளிய வார்த்தையை புரந்தள்ளினான். தேவனை விட, பிசாசு அளித்த சிற்றின்பங்களே ஆதாமின் கண்களுக்கு பெரிதாய்க் கண்டது. ஆனால், இயேசு கிறிஸ்து "எழுதியிருக்கிறதே" என் சொல்லி தேவ வார்த்தையை நினைப்பூட்டினார். பிசாசைக் கண்டித்து புரந்தள்ளி தேவவார்த்தையை ஏற்றுக் கொண்டார். இது தான் இயேசுவானவர் நமக்கு காட்டிய வாழ்க்கை. நாம் இழந்து போன நித்திய வாழ்வையும், நாம் விரும்பி ஏற்றுக் கொண்ட உலக வாழ்வையும் பிரித்துக் காட்டி தேவ வார்த்தைகளை நம் மனதில் எழுதினார்.

இவைகள் எல்லாம் நம் கண்முன் அவர் விட்டுச் சென்ற உன்னத கால்தடங்கள். போதனைகளால் நம்மை மீட்டுக் கொண்டாரா? அல்ல, நம் அன்பை பெற, நமக்கும் பிசாசுக்கும் பகை உண்டாக்க சிலுவையை சுமந்தார். அவரது கல்வாரி அன்பைக் கண்ட நொடியே, மனிதன் பிசாசு தனக்களித்த உலகைவிட்டு கர்த்தரை சரணடைந்தான். "பகை உண்டாக்குவேன்" என சொல்லியவாறே, நம் மனதில் பகை உண்டாக்கினார் தேவன். தேவ மனிதர்களின் போதனைகளும் ஓலைகளில் எழுதப்பட்ட வார்த்தைகளும் அல்ல, கல்வாரி அன்பே நம்மை பாவத்தில் இருந்து மீட்டுக் கொண்டது. இயேசு கிறிஸ்துவின் தூய இரத்தமே நம்மை சுத்திகரிக்க முடியும். அவர் ஒருவரால் மட்டுமே நமக்கு பிசாசின் பிடியில் இருந்து விடுதலை கொடுக்க முடியும், அந்த கல்வாரி அன்பே மனிதன் தேவனை முழு மனதோடு நேசிக்கச் செய்தது. எப்படி? பேதுரு நம் கண்ணே அத்தாட்சியாய் நிற்கிறார்...


"ஆண்டவரே சாவானாலும் சிறையானாலும் உம்மை பின் தொடர்வேன்" என பேதுரு சொன்ன போது, "சேவல் கூவுகிறதற்கு முன்னே மூன்றுவிசை நீ என்னை மறுதலிப்பாய்" என்று இயேசு சொன்னார். சொன்ன படியே கிறிஸ்து சிலுவையில் அறையப்படும் முன்பு, பேதுரு மூன்று முறை மறுதலித்து தன் உயிரைக் காத்துக் கொள்ள ஓடிப் போனார். சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்த கர்த்தர் பேதுருவிடம் "என்னை நேசிக்கின்றாயா?" என்றார். அதற்கு பேதுரு, "ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர், நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும் நீர் அறிவீர்" என்று சொன்னார். ஆனால் இந்த முறை இயேசு பேதுருவை நோக்கிச் சொன்னார்,

யோவான் 21:18,19 - நீ இளவயதுள்ளவனாய் இருந்த போது உன்னை நீயே அரைக் கட்டிக் கொண்டு, உனக்கு இஷ்டமான இடங்களிலே நடந்து திரிந்தாய்; நீ முதிர் வயதுள்ளவனாகும் போது உன் கைகளை நீட்டுவாய்; வேறோருவன் உன் அரையைக் கட்டி, உனக்கு இஷ்டமில்லாத இடத்துக்கு உன்னைக் கொண்டு போவான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். இன்னவிதமான மரணத்தினாலே அவன் தேவனை மகிமைப்படுத்தப் போகிறான் என்பதைக் குறிக்கும் படியாக இப்படிச் சொன்னார். அவர் இதைச் சொல்லிய பின்பு, அவனை நோக்கி: என்னைப் பின்பற்றிவா என்றார்.

பேதுரு தனக்காய் உயிரையும் விடத் துணிந்தவர் என்று இயேசு சொல்லிக் காட்டிய வேதவசனம் இது. உயிருக்கு அஞ்சி தேவனுக்கு கொடுத்த வார்த்தையை மறந்து ஓடிப் போன பேதுரு இவர் தான். கல்வாரிக் காட்சிக்கு பின்பு, உயிரையும் ஈந்து சுவிசேசத்தை போதித்த பேதுருவும் இவர் தான். சுவிசேஷத்தை போதித்தமைக்காக பேதுருவும் சிலுவையில் அறையப்பட்டார். இயேசு கிறிஸ்துவுக்கு நிகராய் என்னை அறையாமல் தலைகீழாக சிலுவையில் அறையவேண்டும் என்று பேதுரு சொன்னாராம். அவர் விரும்பிய வண்ணமே தண்டனை நிறைவேற்றப்பட்டது. நல்ல போராட்டம் போராடி தேவ இராஜ்ஜியத்துக்குள் நுழைந்தார். இந்த மனமாற்றம் ஏன்? சிலுவையில் கரம்விரித்து அழைத்த கர்த்தரை நோக்கி மனிதன் மீண்டும் ஓடினான். அன்றே "எல்லாம் முடிந்தது", வேத வாக்கியம் நிறைவேறியது...


ஆதியாகமம் 3:15 "உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய்"

தேவன் தனக்களித்த ஜீவனை இழந்த மனிதன், அதை மீண்டும் பெற்றுக் கொண்டான், அவன் மனந்திரும்பி தன்னிடத்தில் வந்த போது நேச கர்த்தர் மீண்டும் அளித்தார். பரலோகத்தில் தன்னுடன் நிலைத்து வாழ அவர் அளித்த கிருபை எவ்வளவு இன்பமானது.

"இயேசு மறுபடியும்....அவர்கள் மேல் ஊதி: பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்றார்" - யோவான் 20:21,22

நீங்கள் இரட்சிக்கப்பட்டு விட்டீர்களா?

Sunday, 16 March 2014

உன்னைச் சொந்தங் கொண்டாடும் உன்னதர்...


நம்மை அளவில்லாமல் நேசிக்க இயேசு கிறிஸ்துவை விட மேலான தெய்வம் இல்லை என்றே சொல்லலாம். பரிசுத்த வேதாகமத்தை மனதார விசுவாசித்து படிக்கும் போது இயேசுவின் அன்பிலிருந்து நம்மால் தப்ப முடியாது. தன் தூய அன்பால், வேத வார்த்தைகளால் நம் மனதாய் எளிதாய் கொள்ளையிட்டு விடுவார். இது எப்படி சாத்தியமாகிறது? ஏன் கிறிஸ்துவுக்குள் வந்தவன் தேவனை அதிகமாக உரிமை பாராட்டுகிறான்? தன் தேவனை "அப்பா பிதாவே" என்று அன்போடு அழைத்து, நேசித்து மகிழ அவனால் எப்படி முடிகிறது? ஏன் என்று நீங்கள் சிந்தித்தது உண்டா?

ஏனெனில் இயேசு கிறிஸ்து நமக்காக அந்தளவு அன்பும் பரிவும் கொண்டிருக்கிறார். வேதம் சொல்வது போல, நாம் அவரை முதலாய் நேசிக்கவில்லை, அவர் நம்மை முதலாய் நேசித்து நமக்காய் அவரை ஒப்புக் கொடுத்தபடியினால் நாம் இவ்வாறு தேவ அன்பில் தத்தளித்து மகிழ்கிறோம். இயேசு கிறிஸ்து காட்டிய பாதை பிற வழிகளில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. தேவனை நமக்கு எல்லாரும் எஜமானனாக, சிங்காசனத்தில் வீற்றிருக்கும் அதிபதியாக சித்தரிப்பதை விட ஒரு நல்ல தாயாக, நல்ல தந்தையாக, நல்ல சகோதரனாக, ஆத்ம நேசராக, உயிர்த் தோழனாக பரிசுத்த வேதம் சித்தரிக்கிறது. இவ்வாறு நம்மை மகனாக, மகளாக, மணப்பெண்ணாக, தோழனாக அழைத்து மகிழும் தேவன் இயேசு கிறிஸ்துவை அன்றி வேறு யாருண்டு?

நம்மை ஒரு வேலையாளாக, தன் கரத்தின் சிருஷ்டியாக, தன் மனம் விரும்பும் காரியத்தை மட்டும் செய்ய பயன்படுத்தும் ஒரு அடிமையாக அவர் எண்ணாமல், நம்மை அவரது அன்பிற்கு முழு தகுதியுடையவர்களாக‌ காண்கிறார். அதன் காரணமாகத் தான், "தேவன் நம் கண்ணீரைத் துடைப்பார்", "மார்போடு அணைப்பார்", "கரத்தை பிடித்து வழிநடத்துவார்", "முத்தமிடுவார்" என பல அன்புமிகுந்த வார்த்தைகளை வேதம் கூறுகிறது. தேவனுக்கும் மனிதனுக்கும் இத்தகைய பாசப் பரிமாறுதல்களை வேறெந்த நூல்களிலும் காண முடியாது. எனவே ஒரு எஜமானிடம் ஒரு அடிமை கரமேந்தி நிற்பது போல, வெறும் கட்டளையை ஏற்று நடக்கும் ஒரு வேலைக்காரனாக நாம் தேவனிடத்தில் செல்லத் தேவையில்லை. "அப்பா பிதாவே" என்று அழைக்கும் உரிமையோடு, அன்போடு அவரிடத்தில் ஜெபித்து மகிழலாம், அனுதினமும் அவரது பிரசன்னத்தில் ஆனந்தமாக நம் வாழ்க்கையை நடத்தலாம். இத்தகைய சந்தோஷத்தை உரிமையை நமக்கு ஈந்தவர் இயேசு கிறிஸ்து மட்டுமே...

வேதம் கூறும் இன்னொரு அழகிய செய்தி இதுதான். மனிதன் தேவனை நேசிக்காவிட்டாலும், கர்த்தர் அவனை நேசிப்பதை விடுவதில்லை. மனிதன் பாவம் செய்து அவரது சமூகத்தில் இருந்து விலகி மறைந்து கொண்டாலும், தேவன் அவனை தேடிக் கொண்டு கவலையோடு அலைந்து திரிகிறார். ஆதாம் பாவமிழைத்து கர்த்தரின் கண்களில் இருந்து மரங்களுக்குள் ஒளிந்தாலும் தேவன் அவனை சத்தமிட்டு அழைத்து கொண்டு தோட்டத்திற்குள் வருகிறார். பாவமிழைத்த போதிலும் நம்மைத் தேடி வந்த தெய்வம் அவர் ஒருவரே. நாம் பாவிகளான போதிலும் நமக்காய் இவ்வுலகில் மனிதனாக பிறந்தவர் அவர் ஒருவர் தான். நம் அன்பைப் பெற, நாம் அந்த அன்பில் நிலைத்திருக்க சிலுவையை சுமந்த தெய்வம் இயேசு ஒருவர் மட்டுமே. "நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புதலுக்கு அழைக்க வந்தேன்" என்றவர், பாவிகளுக்காக அவமானத்தையும், ஆக்கினையையும், ஆணிகளையும் வாங்கிய ஒரே தேவன் அவர்.


நம்மிடமிருந்த அவர் விரும்பும் ஒரே காரியம் அன்பு மட்டும் தான். வேதத்தின் எல்லா நீதிகளிலும் அன்பே பிரதானம், இயேசு கிறிஸ்து நமக்கு கற்பித்த முதலாம் கற்பனை அது. நம் அன்பில் பிரியப்படுகிற தேவன் அவர். "உம்மை நேசிக்கிறேன்" என்று பேதுரு சொல்ல சொல்ல, "என்னை நேசிக்கின்றாயா?" என்று இயேசு கேட்டு கொண்டே இருந்தார். பேதுரு "உம்மை நேசிக்கிறேன்" என்று திரும்பத் திரும்பச் சொல்ல அதைக் கேட்டு கேட்டு இயேசு மகிழ்ந்தார். ஒரு கட்டத்ததில் பேதுரு மனமுடைந்து "ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் அறிந்தவர், நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும் நீர் அறிவீர்" என்றே சொல்லிவிட்டார். அந்தளவு நம் அன்பை பெறத் துடிக்கும் அற்புதமான இறைவன் தான் இயேசு கிறிஸ்து.

உலகை விட்டு பரமேறிச் சென்ற போது கூட, உங்களைத் தனித்துவிட எனக்கு மனதில்லை, உங்களுக்காக பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனை விட்டுச் செல்வேன், அவர் உங்களுக்குள் வாசம் செய்வார் என பிரியாவிடை கொடுத்தார் இயேசு. கர்த்தரின் அன்பை விளக்கிச் சொல்ல முடியாது, அளவிட முடியாது. அவர் அன்பை ருசித்தால் மட்டுமே நாம் அவரை அறிந்து கொள்ள முடியும், இதை உணர்த்தியே, யோவான் "அன்பில்லாதவன் தேவனை அறியான், ஏனெனில் தேவன் அன்பாகவே இருக்கிறார்!" என்று எழுதினார்.

இதனை சீடர்களின் வாழ்வில் இருந்தே காணலாம். சிலுவைப்பாடுகளின் போது தங்கள் உயிருக்கு அஞ்சி அவரை விட்டு ஓடிப்போன சீஷர்கள் அனைவரும் அதே கிறிஸ்துவை போதித்து தங்கள் உயிரை இரத்த சாட்சிகளாக விட்டுச் சென்றனர். கிறிஸ்துவுக்குள் வந்த ஒருவன் தன் தேவனை அதிகமாய்ச் சொந்தம் பாராட்டும் காரணம் இதுதான், வேறெவரும் தனக்குத் தராத தயவை, அன்பை அவன் கிறிஸ்துவினிடத்தில் இருந்து கண்டு கொண்டான். அந்த அன்பே அவனை கிறிஸ்துவுக்குள் நிலைத்து வாழ, சிலுவையை ஏற்றுக் கொண்டு அவரை பின்தொடர வல்லமை தருகிறது. ஏனெனில் அன்பு சகலமும் தாங்கும், சகலமும் சகிக்கும்...!

அந்த அன்பையும், நம் தேவன் நம்மீது கொண்டுள்ள நேசத்தையும் நீங்கள் அறிய வேண்டாமா? நம்மை விதவிதமாய்ச் சொந்த கொண்டாடும் சில வசனங்களையும் இயேசு கிறிஸ்துவின் அன்பை அழகாய் விளக்கிச் சொல்லும் ஒரு வீடியோவையும் இப்போது காணலாம்...


தாய் மறந்தாலும் அவர் மறப்பதில்லை, உன்னை தாயாக தேற்றுவார்!

"ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை; ஒருவனை அவன் தாய் தேற்றுவது போல் நான் உங்களைத் தேற்றுவேன்" - ஏசாயா 49:15, 66:13

ஒரு தந்தைப் போல உனக்கு இரங்குவார், உன்னை தன் மகனாக தெரிந்து கொண்டவர் அவர்!

"தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல, கர்த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார்; அந்தப்படி, திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத் தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திர சுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள்" - சங்கீதம் 103:13, ரோமர் 8:15

பாவியான நம்மை தன் சகோதரன் என்றழைக்க அவர் வெட்கப்படுவதில்லை...

"எப்படியெனில், பரிசுத்தஞ் செய்கிறவரும் பரிசுத்தஞ் செய்யப்படுகிறவர்களுமாகிய யாவரும் ஒருவரால் உண்டாயிருக்கிறார்கள்; இதினிமித்தம் அவர்களைச் சகோதரரென்று சொல்ல அவர் வெட்கப்படாமல்: உம்முடைய நாமத்தை என் சகோதரருக்கு அறிவித்து, சபை நடுவில் உம்மைத் துதித்துப் பாடுவேன் என்றும்; நான் அவரிடத்தில் நம்பிக்கையாயிருப்பேன் என்றும்; இதோ, நானும், தேவன் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் என்றும் சொல்லியிருக்கிறார்" - எபிரேயர் 2:11,12,13

ஒரு மணவாளனை போல உன்னுடன் நிலைத்திருக்க விரும்புகிற கர்த்தர்...

"உன் சிருஷ்டிகரே உன் நாயகர்; சேனைகளின் கர்த்தர் என்பது அவருடைய நாமம்; இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் மீட்பர், அவர் சர்வ பூமியின் தேவன் என்னப்படுவார். கைவிடப்பட்டு மனம் நொந்தவளான ஸ்திரீயைப் போலவும், இளம் பிராயத்தில் விவாகஞ் செய்து தள்ளப்பட்ட மனைவியைப் போலவும் இருக்கிற உன்னைக் கர்த்தர் அழைத்தார் என்று உன் தேவன் சொல்லுகிறார்; நித்திய விவாகத்துக்கென்று உன்னை எனக்கு நியமித்துக் கொள்ளுவேன்; நீதியும் நியாயமும் கிருபையும் உருக்க இரக்கமுமாய் உன்னை எனக்கு நியமித்துக் கொள்ளுவேன். உண்மையாய் உன்னை எனக்கு நியமித்துக் கொள்ளுவேன்; நீ கர்த்தரை அறிந்து கொள்ளுவாய்" - ஏசாயா 54:5,6, ஓசியா 2:19,20

நம்மை ஊழியக்காரர் என சொல்ல விரும்பாத நண்பன் நம் தேவன்...!

"இனி நான் உங்களை ஊழியக்காரரென்று சொல்லுகிறதில்லை, ஊழியக்காரன் தன் எஜமான் செய்கிறதை அறிய மாட்டான். நான் உங்களைச் சிநேகிதர் என்றேன், ஏனெனில் என் பிதாவினிடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன்" - யோவான் 15:15

உங்களை இவ்வளவாய் நேசிப்பவர் இயேசு...!

Friday, 14 March 2014

பாவம் என்றால் என்ன? இதெல்லாம் பாவமா?


நியாப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம் - 1 யோவான் 3:4

நாம் செய்யும் காரியங்களில் எது சரி, எது தவறு என கண்டறிய தேவனின் வார்த்தையை நாட வேண்டும். அதனை அறிந்தும் அந்த வார்த்தைக்கு நாம் செவி கொடுக்காவிட்டால் பாவம் செய்கிறோம். பாவம் நமக்கும் தேவனுக்கும் நடுவாக பிரிவினை உண்டாக்குகிறது. எனவே, பாவத்தில் நிலைத்து தேவனுக்கு முன்பாக நீதியற்றவர்களாக இல்லாதபடிக்கு அதற்கான வேத‌ வசனங்களையும் விளக்கங்களையும் அறிந்திருப்பது நல்லது. இந்த பதிவில் பாவத்திற்கென‌ வேதம் கொடுக்கும் சில விளக்கங்களைப் பார்ப்போம்.

1. அவிசுவாசம் ஒரு பாவமே

எபிரேயர் 3:12 - சகோதரரே, ஜீவனுள்ள தேவனை விட்டு விலகுவதற்கு ஏதுவான அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் உங்களில் ஒருவனுக்குள்ளும் இராதபடிக்கு நீங்கள் எச்சரிக்கையாயிருங்கள்.

தேவனின் வார்த்தைக்கு கீழ்ப்படிந்து தன்னை பாவத்தில் இருந்து முற்றிலும் காத்துக் கொண்ட மனிதன் எவனும் இல்லை என வேதம் கூறுகிறது. நம் பாவங்கள் மன்னிக்கப்படும் பொருட்டு இயேசு கிறிஸ்து நமக்கான பலியாக சிலுவையில் ஒப்புக் கொடுக்கப்பட்டார். இந்த தூய இரத்தத்தை ஏற்றுக் கொள்ளாவிடில், நம் பாவங்களுக்கு உரிய பலனை நாம் மறுமையில் அடைந்தே தீர வேண்டும். எனவே, இயேசு கிறிஸ்துவை மனப்பூர்வமாக விசுவாசித்தால் மட்டுமே நாம் இரட்சிக்கப்படுவோம். அவரை விசுவாசியாத பாவம் ஒன்றே அநேகரை நரகத்தில் பங்கடைய செய்கிறது. (யோவான் 16:9; மாற்கு 16:16, வெளி 21:8)

அப்போஸ்தலர் 4:12 - அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை.

2. அநீதியெல்லாம் பாவம்தான்

1 யோவான் 5:17 - அநீதி எல்லாம் பாவம் தான்; என்றாலும் மரணத்துக்கு ஏதுவல்லாத பாவமுமுண்டு.

கர்த்தர் நீதியுள்ளவர். எனவே நம் அவயங்கள் அநீதிக்கல்ல, நீதிக்கே அடிமையாகட்டும். இதற்கு மாறான நம் அக்கிரமங்கள், அநீதிகள் எல்லாம் பாவம் தான். என்றாலும் அவிசுவாசம் ஒன்றைத் தவிர மற்றவை எல்லாம் மரணத்திற்கு அதாவது ஆக்கினைத் தீர்ப்பிற்கேதுவான பாவங்கள் அல்ல. உண்மையாக நாம் மனந்திரும்பி நம் பாவங்களை அறிக்கையிட்டு சிலுவை பலியை ஏற்றுக்கொண்டால் நம் பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்படும். இரட்சிப்பிற்கான சிலுவைபலியை நாம் மறுக்கும் போது, நம் ஆக்கினைத் தீர்ப்பு நிச்சயமாகிறது.

1 யோவான் 1:9 - நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.

3. நற்காரியத்தை செய்யாவிட்டாலும் பாவம்

யாக்கோபு 4:17 - ஒருவன் நன்மை செய்ய அறிந்தவனாயிருந்தும், அதைச் செய்யாமற் போனால், அது அவனுக்குப் பாவமாயிருக்கும்.

மனம் அறிந்த ஒரு நற்காரியத்தை செய்யாமல் விட்டாலும் அது அந்த மனிதனுக்கு பாவமாக எண்ணப்படும். நம்மால் இந்த நற்காரியத்தைச் செய்ய முடியும் என்கிற பட்சத்தில், அதனை தட்டிக் கழிக்காமல் செய்து முடிக்க வேண்டும். மனமறிந்த நற்காரியங்களை செய்து, பொல்லாங்காய் தோன்றுகிற அனைத்து தீய செயல்களில் இருந்து விலகி நடந்தால் நாம் நீதியில் நிலைத்திருப்போம்.

கலாத்தியர் 6:9,10 - நன்மை செய்கிறதில் சோர்ந்து போகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்து போகாதிருந்தால் ஏற்ற காலத்தில் அறுப்போம். ஆகையால் நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத் தக்கதாக, யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மை செய்யக்கடவோம்.

4. பிறரை அவமதிப்பது பாவமாகும்

நீதிமொழிகள் 14:21 - பிறனை அவமதிக்கிறவன் பாவஞ்செய்கிறான்; தரித்திரனுக்கு இரங்குகிறவனோ பாக்கியமடைவான்.

பிறரை அவமதிக்கும் வகையில் நாம் என்ன செய்தாலும், பேசினாலும் அது பாவமே. இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிற எவனும் தனக்கடுத்தவனை நேசித்து அவனை அவமதியாமல் நடக்கிறான். தனக்கு ஒருவன் எவைகளைச் செய்ய வேண்டும், தன்னிடத்தில் பிறன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறோமோ அவ்வாறே நாம் பிறரிடத்தில் கனிவோடு நடந்து கொள்ள வேண்டும்.

மத்தேயு 7:12 - ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச் செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்; இதுவே நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களுமாம்.

5. தீய நோக்கம் பாவமே

நீதிமொழிகள் 24:8,9 - தீவினை செய்ய உபாயஞ்செய்கிறவன் துஷ்டன் என்னப்படுவான், தீயநோக்கம் பாவமாம்.

தீய நோக்கம் கர்த்தருக்கு அருவருப்பானது. தீய எண்ணங்களோடு நாம் எதை செய்தாலும் எதை சிந்தித்தாலும் தீவினை செய்ய பிறரை ஊக்குவித்தாலும் அவைகள் எல்லாம் பாவங்களாகவே எண்ணப்படுகின்றன. கிறிஸ்துவுக்கும் வாழும் எந்த மனிதனும் அவரது சிந்தையை மட்டுமே தரித்து கொள்கிறான். எனவே, தீய எண்ணங்களுக்கு விலகி, கிறிஸ்துவின் சிந்தையில் நிலைத்திருப்பது அவசியம்.

பிலிப்பியர் 2:5 - கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது.

6. தேவனுடைய நாமத்திற்கு மகிமையை கொண்டு வராத யாவும் பாவம்

ரோமர் 2:23,24 - நியாயப்பிரமாணத்தைக் குறித்து மேன்மைபாராட்டுகிற நீ நியாயப்பிரமாணத்தை மீறிநடந்து, தேவனைக் கனவீனம்பண்ணலாமா? எழுதியிருக்கிறபடி, தேவனுடைய நாமம் புறஜாதிகளுக்குள்ளே உங்கள் மூலமாய்த் தூஷிக்கப்படுகிறதே.

தேவனை அறிந்தும், அவரது வார்த்தையை அறிந்திருந்தும் ஒருவன் அவர் கட்டளைகள் படி நடவாவிட்டால் அவன் பாவம் செய்கிறான். அவனது அசுத்தமான செயல்களால் கர்த்தரின் நாமத்திற்கு பிற மக்களால் தூஷணம் ஏற்படும் படி நடந்து கொள்கிறான். இத்தகைய செயல்களில் ஈடுபடும் எவனும் கிறிஸ்துவுக்குள் வந்தவன் அல்ல. அவரில் நிலைத்திருக்கிறேன் என்று சொன்னாலும் அவரோடு அவனுக்கு ஐக்கியமில்லை.

1 யோவான் 1:5,6 - தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை; இது நாங்கள் அவரிடத்தில் கேட்டு, உங்களுக்கு அறிவிக்கிற விசேஷமாய் இருக்கிறது. நாம் அவரோடே ஐக்கியப்பட்டவர்கள் என்று சொல்லியும், இருளிலே நடக்கிறவர்களாய் இருந்தால், சத்தியத்தின்படி நடவாமல் பொய் சொல்லுகிறவர்களாய் இருப்போம்.

7. பிறரை இச்சையோடு பார்ப்பது பாவம்

I கொரிந்தியர் 6:18 - வேசித்தனத்திற்கு விலகியோடுங்கள். மனுஷன் செய்கிற எந்தப் பாவமும் சரீரத்திற்குப் புறம்பாயிருக்கும்; வேசித்தனஞ் செய்கிறவனோ தன் சுயசரீரத்திற்கு விரோதமாய்ப் பாவஞ்செய்கிறான்.

மாம்ச சிந்தை பாவம். ஒரு பெண்ணை இச்சையோடு பார்ப்பவன் தன் மனதில் அவளோடு விபச்சாரம் செய்கிறான். விபச்சாரம், காமம், இச்சை, ஓரினச் சேர்க்கை, வேசித்தனம், மோகம், சுயபுணர்ச்சி என அனைத்து அசுத்த செயல்களுமே பாவம் தான். இத்தகைய செயல்களில் ஈடுபவன் தன் சொந்த சரீரத்தை அசுத்தப்படுத்துகிறான். நமது சரீரம் பரிசுத்த ஆவியானவர் தங்கும் ஆலயம், ஆவியானவர் எங்கேயோ அங்கு விடுதலை உண்டு, எனவே ஆவியால் சரீரத்தின் தீய செய்கைகளை அழித்து, தேவனுக்கு ஏற்ற தூய பலியாக அதனை ஒப்புக் கொடுக்க வேண்டும். மனிதன் தன் மனைவியோடு ஒரே சரீரமாய் ஒருவருக்கொருவர் உண்மையாய் இருப்பதையே கர்த்தர் விரும்புகிறார்.

நீதிமொழிகள் 5: 18 - 20 - உன் ஊற்றுக்கண் ஆசீர்வதிக்கப்படுவதாக; உன் இளவயதின் மனைவியோடே மகிழ்ந்திரு. அவளே நேசிக்கப்படத்தக்க பெண்மானும், அழகான வரையாடும் போலிருப்பாளாக; அவளுடைய ஸ்தனங்களே எப்பொழுதும் உன்னைத் திருப்தி செய்வதாக; அவளுடைய நேசத்தால் நீ எப்பொழுதும் மயங்கியிருப்பாயாக. என் மகனே, நீ பரஸ்திரீயின் மேல் மயங்கித் திரிந்து, அந்நிய ஸ்திரீயின் மார்பைத் தழுவ வேண்டியதென்ன?

8. பிறருக்காக ஜெபியாமலிருப்பது பாவம்

1 சாமுவேல் 12:23 - நானும் உங்களுக்காக விண்ணப்பம் செய்யாதிருப்பேன் ஆகில் கர்த்தருக்கு விரோதமாகப் பாவம் செய்கிறவனாய் இருப்பேன்; அது எனக்குத் தூரமாயிருப்பதாக; நன்மையும் செவ்வையுமான வழியை நான் உங்களுக்குப் போதிப்பேன்.

குடும்பத்துக்காக, சபைக்காக, ஊழியங்களுக்காக, ஆளுகை செய்பவர்களுக்காக, தேசத்திற்காக ஜெபிக்க வேண்டியது நம் கடமை ஆகும். அதில் தவறினால் அது தேவனுக்கு முன்பாக பாவமாகும். நாம் பிறரது நலனுக்காக வேண்டுதல் செய்வதில் கர்த்தர் பிரியப்படுகிறார். பிறருக்காக நாம் இரங்கும் போது, கருத்தோடு ஜெபிக்கும் போது அதற்கான ஆசீர்வாதங்களையும், பலன்களையும் நாம் அடையாமற் போவதில்லை.

1 தீமோத்தேயு 2:1,2 - நான் பிரதானமாய்ச் சொல்லுகிற புத்தி என்னவெனில், எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும் பண்ண வேண்டும்; நாம் எல்லாப் பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம்பண்ணும்படிக்கு, ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும் அப்படியே செய்ய வேண்டும். நம்முடைய இரட்சகராகிய தேவனுக்கு முன்பாக அது நன்மையும் பிரியமுமாயிருக்கிறது.

9. உலக சிநேகம் பாவமே

1 யோவான் 2:15 - 17 - உலகத்திலும் உலகத்தில் உள்ளவைகளிலும் அன்பு கூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்பு கூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை. ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்தில் உள்ளவைகள் எல்லாம் பிதாவினால் உண்டானவைகள் அல்ல, அவைகள் உலகத்தினால் உண்டானவைகள். உலகமும் அதின் இச்சையும் ஒழிந்து போம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.

கர்த்தரை விட உலக காரியங்களை சிநேகிப்போமானால் அது பாவமே (பார்க்க யாக்கோபு 4:4). எனவே, உலக ஐசுவரியங்களுக்கும், சிநேகத்திற்கும், உறவுகளுக்கும் நம் மனதில் முதல் இடம் கொடுப்பதை விட்டு தேவனுக்கு ஏற்ற தூய வாழ்வை வாழ வேண்டும். நம் மனதில் தேவனை முதலாய்த் தேடுவோமானால் இவைகள் எல்லாம் நமக்கு கூட கொடுக்கப்படும். நம் வாழ்வை அவர் தன் கரத்தில் ஏந்தி தேவனே நம்மை குறைவுகளின்றி வழி நடத்துவார்.

மத்தேயு 6:33 - முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.

10. தேவ சித்தத்தை மீறுவது பாவமாகும்

மத்தேயு 7: 21 - பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.

தேவன் நமக்கென ஒரு பாதையை நியமத்திருக்கிறார். உதாரணத்திற்கு, சிலை வழிபாட்டை தேவன் விரும்புவதில்லை. வேதம் கூறுகின்ற தேவனின் இச்சித்தத்தை அறிந்தும் நாம் இயேசு கிறிஸ்துவுக்கும் புனிதர்களுக்கும் சிலைகளை உண்டாக்கி வழிபட்டால் அது மீறுதல் ஆகும். கிறிஸ்துவை அறிந்தும் அவரது சித்தத்திற்கு கீழ்ப்படியாத போது நாம் பாவத்தில் நிலைத்திருக்கிறோம். எனவே தேவ சித்தத்தை விலகி நடப்போமானல் நித்திய ஜீவனையும் இழக்கும் அபாயமிருக்கிறது.

ரோமர் 12:2 - நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.

மேற்கொண்டு படிக்க...
பாவத்தை விளக்கும் பிற வேத வசனங்கள்
மீறுதல்கள் (சங்கீதம் 51:1), அக்கிரமம் (சங்கீதம் 51:2), பொல்லாங்கு (சங்கீதம் 51:4), பிழை (சங்கீதம் 19:12), குற்றம் (சங்கீதம் 19:12), பெரும்பாதகம் (சங்கீதம் 19:13)

வேதத்தில் காணப்படும் சில பாவச் செயல்கள்
யாத்திராகமம் 20:3-17; கொரிந்தியர் 6:9,10; ரோமர் 1:29-31; 1 தீமோத்தேயு 1:9-11; கொலோசெயர் 3:5-8; கலாத்தியர் 5:19-21; மாற்கு 7:20-23

----------------------------------------------------------

(பாஸ்டர். நெல்சன் ஞானக்குமார் அவர்களின் செய்தியை - 50 அஸ்திபாரக் கற்கள் - மையமாக வைத்து எழுதப்பட்டது - நன்றி)

Monday, 3 March 2014

காணாமற் போன ஆடு ‍ - தமிழ் பைபிள் வீடியோ


 



வேதப்பகுதி - லூக்கா 15:1 - 7

நானே நல்ல மேய்ப்பன்

சகல ஆயக்காரரும் பாவிகளும் அவருடைய வசனங்களை கேட்கும்படி அவரிடத்தில் வந்து சேர்ந்தார்கள். அப்பொழுது பரிசேயரும் வேதபாரகரும் முறுமுறுத்து: இயேசு பாவிகளை ஏற்று கொண்டு அவர்களோடே சாப்பிடுகிறார் என்றார்கள். அவர்களுக்கு அவர் சொன்ன உவமையாவது: உங்களில் ஒரு மனுஷன் நூறு ஆடுகளை உடையவனாய் இருந்து, அவைகளில் ஒன்று காணாமற் போனால், தொண்ணூற்று ஒன்பது ஆடுகளையும் வனாந்தரத்திலே விட்டு, காணாமற் போன ஆட்டை கண்டு பிடிக்குமளவும் தேடி திரியானோ? கண்டுபிடித்த பின்பு, அவன் சந்தோஷத்தோடே அதை தன் தோள்களின் மேல் போட்டு கொண்டு, வீட்டுக்கு வந்து, சிநேகிதரையும் அயலகத்தாரையும் கூட வரவழைத்து: காணாமற் போன என் ஆட்டை கண்டுபிடித்தேன், என்னோடு கூட சந்தோஷப்படுங்கள் என்பான் அல்லவா? அது போல, மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்று ஒன்பது நீதிமான்களை குறித்து சந்தோஷம் உண்டாகிறதை பார்க்கிலும் மனந் திரும்புகிற ஒரே பாவியின் நிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.